நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 21, 2015

அன்பின் அழைப்பு

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்!..

அவற்றோடு, ஆண்டுதோறும் -

வலைப்பதிவர் சந்திப்பு தினத்தையும் -

இனிவரும் காலம் - தன் கவனத்தில் கொள்ளும்!..

நாட்காட்டிகளில் குறித்து விடலாம் - வலைப்பதிவர் நாள்!..- என்று..


அந்த அளவிற்கு - இந்த ஆண்டின் வலைப்பதிவர் சந்திப்பு நாள் முன்னெடுத்துச் செல்லப்பட்டு விட்டது.

இத்துணை புகழும் பெருமையும்

திருமிகு நா. முத்து நிலவன் அவர்களையும்

திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்களையும்

இவர்களுடன் தோளுக்குத் தோள் நின்று களப்பணி ஆற்றும் -

சீர்மிகு புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவாளர்களையும்

அத்துடன் - புரவலர்களையும் சான்றோர்களையும் மற்றும் ஆர்வத்துடன் பலவகையிலும் பங்களிப்பவர்களையும் சாரும் எனில் மிகையாகாது..

முழுதாக மூன்று வாரங்கள் கூட இல்லை!..

விழா நாளின் விடியலை நோக்கிக் கொண்டிருக்கின்றன கண்கள் -

நம்மால் ஏதும் செய்யமுடியவில்லையே!.. -  என்ற ஏக்கத்துடன்!..

பார்வையாளனாக - பலநூறு மைல்களுக்கு அப்பால் இருப்பவர்க்கே -

இத்தனை பரபரப்பு!.. என்றால்,

விநாடிகள் சிறுகச் சிறுக மணித் துளிகளாகி - நாட்களாகி - விரைந்தோடிச் சென்று,

அக்டோபர் பதினொன்றாம் நாளை -

நம்மவர்களின் கண்ணருகே - கையருகே - இழுத்துக் கொண்டு வரும்போது,

அவர்களுக்கு எப்படியிருக்கும்!?..

இவர்களின் உழைப்பினை சற்றே சிந்திக்கும் போது -

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்..

- எனும் நீதிநெறிவிளக்கத்தின் திருப்பாடலே முன் நிற்கின்றது..

நிகழ இருக்கும் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவினை -
செம்மையாக நடத்துதற்குச் சித்தங்கொண்டு - சிறு பொழுதும் தளர்வு இன்றி
உழைப்பவர்களுள்,

திருமிகு நா. முத்து நிலவன் அண்ணா அவர்கள் ஒருவரைத் தான் நானறிவேன்!..

மற்றவர்கள் யார் யாரோ!.. எத்தன்மையரோ!..
அவரவர்க்கும் எத்தனை எத்தனை பணிகளோ!..

அவற்றையெல்லாம் கடந்து அல்லும் பகலும் அயராது உழைக்கின்றனரே!..

அவர் தமக்கு ஊக்கமும் ஆக்கமும் எங்கிருந்து கிடைக்கின்றன?..

அவர் தம் சிந்தை எல்லாம் எங்கே குவிந்திருக்கின்றதோ -

அங்கேயிருந்தே கிடைக்கின்றன!..

ஆம்!..

தளர்வறியா ஊக்கத்தையும் தடையறியா ஆக்கத்தையும் வழங்குவது -

தமிழ்!..

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் - உயிருக்கு நேர்!..

தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்!..

- என்று முழங்கினாரே - பாவேந்தர்..

அப்படியிருக்க - சோர்ந்து விடக்கூடுமோ!..

இன்னும் - இன்னும் இருக்கின்றன.. இதோ!..

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்..
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்!..

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளம் உற்ற தீ!..

ஆகா!.. எப்பேர்ப்பட்ட பேறு!..

தாய்க்கு - தமிழ்த் தாய்க்கு அல்லவா - தகைமை செய்கின்றோம்!..

அவளுடைய பணியை - சிரமேற்கொண்டு செய்யும் போது,
தாங்கொணாத அசதி வந்தாலும் -

அவள் தாமாகவே முன்வந்து - அசதி தீர்வதற்குத் தேனைத் தருகின்றாளாம்!..

அந்தத் தேன் - கையில் சுடர் ஒன்றினைத் தந்ததைப் போலிருக்கின்றது..

சுடரைக் கையில் ஏந்தியபின் - சோம்பல் கொண்டு இருக்க இயலுமா?..

அத்துடன் - உள்ளத்துள் தூண்டுகை ஆகிய - தீ ஒன்றும் தோன்றுகின்றது..

அதற்கு மேல் என்ன!?..

வெற்றி தான்!..

நாம் நமக்கென விளையாடுகையில் எதிரே ஒரு வெற்றிக்கோடு தென்படும்..

விளையாட்டின் முடிவு வெற்றிக் கோட்டில் தீர்மானிக்கப்படும்..

இது அன்னைத் தமிழுக்காக ஆடும் ஆட்டம்!..

இந்தத் தொடர் ஓட்டத்திற்கென சுடர் ஏந்தியாகி விட்டது..

இதற்கு - இலக்கு என ஏதும் இல்லைதான்!..

அதனால்தான், இனிமேல் நம்மைச் சுற்றி - உலகம் சுழல இருக்கின்றது!..


வலைப் பதிவர்கள் பலரும் சீரிய முறையில் -
தத்தமது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்..

வலைப்பதிவர் சந்திப்பு விழாவிற்கென உருவாக்கப்பட்ட -

வலைப்பதிவர் சந்திப்பு 2015 புதுக்கோட்டை

- எனும் தளத்தில் செய்திகள் பலவும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன..

அதனுள் புதிதாக ஒரு பக்கத்தில் -

விழாப் புரவலர்கள் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர்..

அவர்களை, இங்கே - காணலாம்!..

அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி..

செப்டம்பர் - 20 வரையில் -

விழாவில் கலந்து கொள்வதற்கென 160 நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்..

கையேட்டில் பதிவதற்கென 50 நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர்..

அந்த விவரங்களை - இங்கே காணலாம்!..   

மின் தமிழ் இலக்கியப்போட்டிக்கு - வலைப் பதிவர்களிடமிருந்து படைப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன..

படைப்புகளைப் பற்றிய விவரங்களை - இங்கே காணலாம்!..

கடந்த 19/9 அன்று ,  விழாக்குழுவினர் - 

சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக (TAMIL VIRTUAL ACADEMY- Formerly Tamil Virtual University) அலுவலகத்தில், 

அதன் இயக்குநர் திரு. த. உதய சந்திரன் IAS., அவர்களைச் சந்தித்து - புதுக்கோட்டை பதிவர் திருவிழாவைப் பற்றி - பேசி வந்துள்ளனர்..

இந்த சந்திப்பில் - 

சென்னைப் பதிவர்கள் திருமிகு. இராய. செல்லப்பா, தி.ந. முரளிதரன், மதுமதி, ஆதிரா ஆகியோருடன் விழாவின் ஒருங்கிணைப்பாளர் நா. முத்துநிலவன் அவர்களும் கலந்து கொண்டிருக்கின்றார்கள்..

இயக்குநர் அவர்களையும் இணை இயக்குநர் திரு. தமிழ்ப்பரிதி அவர்களையும் 
புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென  விழாக்குழுவினர் அழைத்திருக்கின்றார்கள் என்பது சிறப்பு செய்தி!..

மேலும் சிறப்பான விவரங்களை - இங்கே காணலாம்!..

பதிவர்களின் பார்வையில் - பதிவர் திருவிழா - 2015!..

இதுவரைக்கும் - பதிவர்கள் திருவிழா 70 பதிவுகளால் சிறப்பிக்கப்பட்டுள்ளது..

அந்த பதிவுகளின் இணைப்புகளை - இங்கே அறியலாம்!..

அவற்றுள் - அன்புக்குரிய நட்பு வலைகளிலிருந்து, சில!..

நன்றி - திண்டுக்கல் தனபாலன்
நன்றி - தேவகோட்டை கில்லர் ஜி
நன்றி - பாவலர் இளமதி
நன்றி - தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
நன்றி - மகேசுவரி பாலசந்திரன்

ஏதோ நானும் நானறிந்த வகையில் ஒரு காணொளியினை உருவாக்கினேன்..

அந்தக் காணொளி - இதோ!.. தங்கள் பார்வைக்கு!..

நிறை, குறை - எதுவாக இருப்பினும் கொள்க!..


ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்!..
அருந்தமிழ் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்!..

வாழ்க தமிழ்..
வெல்க தமிழ்!..
* * *

25 கருத்துகள்:

  1. புதுக்கோட்டையில் நண்பர்கள் சங்கமிக்கும் விழாவினைப் பகிர்ந்த விதம் அருமை. பாராட்டுகள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம்,
    அம்மாடியோ,,,,,,,,, எம்புட்டு செய்தி,,,,,,,,,,, கண்ணெல்லாம் கட்டுதே,, அங்கிருந்து இந்நிகழ்வினை பார்க்க தாங்கள் எவ்வளவு விரும்புகிறீர்கள் என்பது இப்பதிவே சொல்கிறது.
    தாங்கள் தொகுத்த தகவல்கள் அனைத்தும் அருமை.
    அதிலும் என் பதிவையும் சேர்த்ததற்கு நன்றிகள் என்றும்,,,,,,,,,
    தாங்கள் தந்துள்ள இணைப்புகள் அருமை. பயன்படுத்தனும்.
    காணொளி அழகாக அருமையாக உள்ளது.
    மொத்தத்தில் சூப்பருங்கோ,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      காணொளி அருமை எனச் சொல்லியதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. பல செய்திகள் தாங்கிவரும் பதிவு. காணொளி உங்கள் படைப்பா ? அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      காணொளியை நான் தான் உருவாக்கினேன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின் ஜி கலக்கலான பதிவு பார்த்தவுடன் அசந்து தூங்கிட்டேன் இப்பத்தான் எழுந்து மீண்டும் கருத்துரை எழுதுறேன் எனது பதிவையும் குறிப்பிட்டமைக்கு மனமார்ந்த நன்றி விழா சிறக்க வாழ்த்துவோம்.

    காணொளி ஸூப்பர் நம்மலோட அடுத்த படத்துக்கு நீங்கதான் எடிட்டர்.

    ஜி நீங்க மிகவும் கஷ்டப்பட்டு எனது தில்லாலே பாட்டை போர்டுல எழுதி வச்சதை ஒரு மொட்டை வெள்ளையடிச்சு அழிக்கின்றான் அவனை கீழே இறங்க சொல்லுங்க இல்லைனா ஏணியைப் பிடிச்சு இழுத்து விட்ருவேன்.. சொல்லிடுங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      உண்மையில் அந்த மொட்டை தான் பலகையில் ஒட்டினான்..
      இப்போது - Re Pasting செய்து கொண்டிருக்கின்றான்..
      பாவம் அவன் புள்ளகுட்டிக் காரன்.. ஏணியை இழுத்து விட்டுடாதீங்க!..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. ஆகா
    அருமை ஐயா அருமை
    புதுகை பதிவர் சந்திப்பு திருவிழாவினை தாங்கள் பகிர்ந்த விதம்அற்புதம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆகா! காணொளி பிரமாதம்! அதுவும் பின்னணியில் பறவைகளின் இனிய சங்கீதத்துடன்! எத்தனை திறமைகளை ஒளித்து வைத்துள்ளீர்கள்? ஏன் இன்னும் போட்டிக்குப் படைப்புகளை அனுப்பவில்லை? உங்களையும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். காணொளியின் முடிவில் விமானத்தைக் காட்டியபோது குவைத்திலிருந்து பறந்துவந்து நீங்கள் கலந்து கொள்வதை சிம்பாலிக்காக நீங்கள் காட்டுவது போலத் தோன்றியது. மிக அருமை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      போட்டிக்குப் பதிவினை அனுப்புதற்கு இன்னும் ஆயத்தமாகவில்லை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. காணொளி அருமை. நல்ல பகிர்வு.
    //அருந்தமிழ் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்// அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அழகான தொகுப்பு
    அருமையான அழைப்பு
    புதுக்கோட்டை எங்கும் மின்னுகிறது


    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. சிறப்பான தொகுப்பு.

    சந்திப்பு சிறப்புற எனது வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அத்தனை நிகழ்வுகளையும் மிக அழகாகத் தொகுத்துத் தந்துவிட்டீர்கள்!

    அருமை! விழா சிறக்க வேண்டி வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. அன்பின் நேசன்..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  12. புதுக்கோட்டையில் நண்பர்கள் சந்திக்கும் விழா பற்றிய தொகுப்பும், உங்கள் காணொளியும் மிக அருமை சார். விழா சிறக்க வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. அசத்தலோ அசத்தல்...

    மிக்க மிக்க நன்றி ஐயா...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்களது கருத்துரையை ஆவலுடன் நோக்கியிருந்தேன்.. மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..