செவ்வாய், ஜூலை 29, 2014

கனந்தரும் காந்திமதி

அன்று அகத்தியர் அமர்ந்து அருந்தமிழ் வளர்த்து அருளாட்சி செய்த பொதிகை மலை தொட்டு - 

விடுதலை வேட்கையின் மூலக்கனல் மூண்டெழுந்து அந்நியனுக்கு எதிராக கப்பல் ஓட்டிய கீழைக் கடல் வரைக்கும்,  

எத்தனை எத்தனையோ - வரலாற்றுத் தடங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் புண்ணிய பூமி!..

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் - எனும் ஐந்து வகைகளையும் தன்னகத்தே கொண்ட பெருநிலப் பரப்பு!..


பொருணை எனும் தாமிரபரணி - விளையாடிக் களிக்கும் தென்பாண்டித் திருநாட்டின் திலகம்!..

பேர் கொண்ட சிறப்பெல்லாம் - ஊர் கொண்டு நிற்கும் திருநெல்வேலி!.

இங்கே - சீர் கொண்டு நிற்கும் திருக்கோயில் -

ஸ்ரீ காந்திமதியம்மை உடனாகிய ஸ்ரீநெல்லையப்பர் திருக்கோயில்!..

அண்ட பகிரண்டம்  முழுதும் தாமுடைய வள்ளல் - தன்னை  வேணுவனம் எனப்பட்ட மூங்கில் காட்டினுள் வெளிப்படுத்திக்கொண்ட திருத்தலம்..

தன்னைச் சுற்றி நிறைய முளைகளுடன் வளர்வது - மூங்கில்.

மூங்கிலைப் போல நாமும் சுற்றமும் சொந்தமும் முசியாமல் வாழ வேண்டும் என்று -

மூங்கில் முளையில் -  மூலவன் வெளிப்பட்ட அற்புதத் திருத்தலம்.

தாமிரபரணி - அகத்தியர் அருவி - கல்யாணதீர்த்தம்.
மூர்த்தி தீர்த்தம் விருட்சம் - என,  மகத்துவமும் மருத்துவமும் பொருந்திய சிறப்பான திருத்தலம் - திருநெல்வேலி!..

பெருமானின் பஞ்ச சபைகள் - ரத்னசபை , பொன்னம்பலம், வெள்ளியம்பலம் , தாமிர சபை, சித்ர சபை - என்பன.

இவற்றுள் நான்காவதான தாமிரசபை - நெல்லை!..

தனக்கென வாழாது - பிறர்க்கென வாழ்ந்த உத்தமனின் பொருட்டு வெயிலில் உலர்ந்து கொண்டிருந்த நெல்லுக்கு நீரால் வேலியிட்டுக் காத்து தருளிய ஈசனின் திருப்பெயர் இங்கே  -  நெல்லையப்பர்.  

வேணு எனப்பட்ட மூங்கில் வனத்தில் மூங்கில் முளைகளின் ஊடாகத் தோன்றியதால் - வேணுவனநாதர். 


மலர்ந்த முகத்தாள். மலர் கொண்ட திருக்கரத்தாள்!. வடிவுடை நாயகி!.. 

அப்பனுடன் அன்னை ஒளி கொண்டு நின்றதால், அவள் - காந்திமதி!..

உலக உயிர்கள் உய்வடையும் பொருட்டு கம்பை நதிக் கரையிலும் காவிரிக் கரையிலும் அறம் வளர்த்ததைப் போல தாமிரபரணிக் கரையிலும்  அம்பிகை அறம் வளர்த்தனள் என்பது தல புராணம். 

அத்துடன் - எம்பெருமானை மணங்கொண்டு அகத்திய முனிவருக்கு திருக் கல்யாண கோலம் காட்டிய திருத்தலம்.

திருக்கோயிலின் உள்ளேயே - திருமூலத்தானத்தில் அருகில் - பள்ளி கொண்ட பெருமாள்!.. பெருமாளின் திருமார்பில் சிவலிங்கப் பதக்கம் இலங்குகின்றது.

ஒவ்வொரு நாளும் - உச்சி கால பூஜையை அம்பாளே நிகழ்த்துவதாக ஐதீகம் . 


அதன் அடிப்படையில், அம்மன் சந்நிதியின் அர்ச்சகர்கள் மேளதாளங்கள் முழங்க பலவகையான நிவேத்ய சித்ரான்னங்களுடன் ஸ்வாமி சந்நிதிக்கு வந்து - நெல்லையப்பருக்கு நிவேதனம் செய்வர். 

ஸ்வாமிக்கு நிவேதனம் செய்தபின் - அம்பாள் சந்நிதியில்  பூஜை நிகழ்கின்றது.

மூண்டெழும் வினை தீர்க்கும்  - முக்குறுணிப் பிள்ளையார். அழகு மயிலேறி வரும் ஆனந்த முருகன்.

ஈசனின் வலப்புறம் காந்திமதி அன்னையின் திருக்கோயில். அருகில் நீராழி மண்டபத்துடன் கூடிய பொற்றாமரைக் குளம்!..

கலைநயம் மிக்க சிற்பங்கள்!..
நெடுந்தூண்கள் நிறைந்த பிரகாரங்கள்!..
இணையில்லா அற்புதமாக ஏழிசைத் தூண்கள்!..
- என, தென் தமிழகத்தின் கலைப் பொக்கிஷமாகத் திகழும் திருக் கோயில்!..

இசைத் தூண்கள்
எண்ணரும் சிறப்புகளுடன் கூடிய திருக்கோயிலில் ஆனிப்பெருந் திருவிழா  ஜூலை முதல் வாரத்தில்  சீரும் சிறப்புமாக நிகழ்ந்தது.

காந்திமதி அம்மையும் நெல்லையப்பரும் திருவிழா நாட்களில் -

தங்கச் சப்பரம், வெள்ளிச் சப்பரம், வெள்ளி கற்பக விருட்சம்,  வெள்ளிக் கமலம், தங்க பூத வாகனம், வெள்ளி சிம்ம வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம்,  வெள்ளிக் காமதேனு வாகனம்  வெள்ளி ரிஷப வாகனம், தங்க கயிலாய பர்வதம், தங்கக்கிளி வாகனம் - இவற்றில் எழுந்தருளி திருவீதி வலம் வந்தனர்.

திருவிழாவின் ஒன்பதாம் நாளில் பெருந்தேர் கண்டருளினர்.

அதன் பின் -  ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு,

ஜூலை/21 திங்களன்று அம்மன் சந்நிதியில் துவஜஸ்தம்பத்திற்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றமும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவின் நான்காம் நாள் (ஜூலை/24) வியாழன்று மதியம் மூலஸ்தானத்தில் காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்தன.

பின்னர் - ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவநாயகிக்கு   வளைகாப்பு வைபவம் நிகழ்ந்தது.

இந்த மண்டபத்தில் தான் -  ஐப்பசி மாதம் திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலம் கொண்டருள்வர். 

பல ஊர்களில் இருந்தும் திரளாக வந்திருந்த இளம்பெண்கள் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபட்டனர். அனைவருக்கும் தேவி பிரசாதமாக குங்குமம் , மஞ்சள் சரடு மற்றும் வளையல்கள் வழங்கப்பட்டன,

அன்றிரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய காந்திமதி ரதவீதிகளில் வலம் வந்தருளினள்.


உலகேழும் பெற்ற உமையவளுக்கு வளைகாப்பு!..

பூத்தவள் - புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம் காத்தவள். பின் கரந்தவள். கறைக் கண்டனுக்கும் மூத்தவள். என்றும் மூவா முகுந்தற்கு இளையவள். 

மாத்தவம் உடைய மாதங்கி. மங்கையர்க்கு அரசி!.. 
மரகதவல்லி!..  இவளுக்கன்றோ மடி நிரப்பும் வைபவம்!..

பத்தாம் திருநாளான புதன்கிழமை (ஜூலை/30) இரவு ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைகட்டுத் திருநாள் நடைபெறும்.

காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வர, முளைகட்டிய பயறு மற்றும் பட்சணங்கள் கொண்டு அம்பிகைக்கு மடி நிரப்பும் வைபவம் மங்கலகரமாக நடைபெறும்.

விழாவினை ஒட்டி நாள்தோறும் சந்நிதியில் சோடச உபசாரத்துடன்  மகா தீபாராதனை நடைபெறும்.

தமிழகத்தில் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்களுக்கு அடுத்தபடியான  35 அடி உயரமும் 450 டன் எடையும் கொண்ட பெரிய தேரினை உடையது - நெல்லையப்பர் கோயில்!..

இந்த ஆண்டு நிகழ்ந்த தேரோட்டத்துக்கு வயது 510.


ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் அன்று திருஐயாறு தரிசனம் கண்டோம்.,
இரண்டாம் செவ்வாய் இன்று.  இறையருளால் திருநெல்வேலி தரிசனம்.

வாழும் வையகத்தில் ஒரு தாழ்வுறா வண்ணம் -
வாஞ்சையுடன் காப்பவள் காந்திமதி!.

வறுமைக் கோடு எனத் தொகுத்தவர் வகுத்தாலும் -
வறுமையாற் கேடு எதையும் அடையாவண்ணம் காப்பவள் காந்திமதி!.

இல்லறம் நல்லறம் ஆகும்படிக்கு அனைத்தும் அருள்பவள் காந்திமதி!..

தாமிரபரணியில் - தைப்பூச தீர்த்தவாரி நிகழும் தீர்த்தக் கட்டங்களுள் ஒன்று சிந்து பூந்துறை.  எனில் - தேன் சிந்து பூந்துறை!..

மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூவகையாலும் சிறப்புடைய திருநெல்வேலி ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.

நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற , பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலி!..  - என்பது ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு.

 
பைங்கண்வா ளரவணை அவனொடு பனிமல ரோனுங்காணாது
அங்கணா அருளென அவரவர் முறைமுறை இறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவைய ராடல்பேணத்
திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
!..(3/92)
திருஞானசம்பந்தர்.

சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே  நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!..
(28)

அபிராம பட்டர். 

ஓம் சக்தி ஓம்!..
காந்திமதி அம்மையே சரணம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

6 கருத்துகள்:

  1. ஆடிப்பூர விழா பற்றியும், திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவில் சிறப்புகள் பற்றியும். அழகாய் சொன்னீர்கள். படங்கள் எல்லாம் அழகு.
    வாழ்த்துக்கள்.
    ஓம் சக்தி ஓம்
    காந்திமதி அம்மையே சரணம்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்,
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கனம் தரும் காந்திமதி அன்னைபற்றிய
    கனமான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்,
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. இசைத்தூண்களைப்பற்றி நான் இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன் நன்றி.
    தங்களின் தெய்வீகத்தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்,
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..