ஞாயிறு, டிசம்பர் 23, 2012

திருப்பாவை - 08

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 08

கோதுகலமுடைய பாவாய்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம்! கோதுகலமுடைய
பாவாய், எழுந்திராய்!
பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளநதானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாஎன்றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்! 


எம் பாவாய்!... கீழ்த்திசையும் வெள்ளென வெளுத்து விட்டது. எருமைகளை அவிழ்த்து விட்டார்கள். அவைகளும் இளங்காலைப் பொழுதில் கொல்லைப் புறத்தில் சிறுவீட்டில் மேயத் தொடங்கி விட்டன.. 


விழித்து எழுந்த கன்னியரும் சுறுசுறுப்பாக மற்ற வேலைகளை  ஆரம்பித்து விட்டனர்.. நோன்பு நோற்கும் நாங்கள் எல்லோரும் கூடி இங்கே  - உன்னை அழைப்பதற்காக  வந்துள்ளோம்..


எப்பொழுதும் கோகுலனையே மனதில் கொண்டு குதூகலத்தில் திளைப்பவளே!.. எழுந்திராய்!... 


மாவாய் பிளந்த மணிவண்ணன்
கம்சனின் தூண்டுதலால் கொக்கு வடிவில் வந்த கொடிய அசுரனை - அவனுடைய கூர் அலகினைப் பிடித்துப் பிளந்து அவனை மாய்த்தவன். 

அது மட்டுமா!... 

கம்சனுடைய அரசவை மல்லர்களை  - தோளொடு தோளாகப் பொருது வீழ்த்தி வெற்றி கொண்டவன்..


தேவர்களுக்கெல்லாம்  தேவனாகத் திகழ்பவன்..  அந்தத் தேவாதிதேவனை நாம் சென்று சேவித்து பாடிப் பரவி நாம் உய்யும் வழியினைப் பெற்றுக் கொள்ள வேண்டாமா!....

வா... வா...என்று நம்மை  மகிழ்வுடன் வரவேற்று வாஞ்சையுடன் வரமளிக்கும் வள்ளல் அல்லவோ அவன்!...

நம்மையும் நம்முடைய பணிவையும் ஆய்ந்து - நம்மை ஆண்டளக்கும் ஐயன் அல்லவோ நம்பெருமான்!....

எழுந்திராய்!...எம் தோழி!...

தேவாதி தேவனை தேடிக் கொண்டாடிட எழுந்திராய்!....
***

2 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    இதன் மையப்பகுதி எழுத்துகள் குழறுபடியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி..

    இதெல்லாம் பழைய பதிவுகள்..

    சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததில் மீண்டும் வெளியாகி இருக்கின்றன..

    நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..