ஞாயிறு, செப்டம்பர் 06, 2026

சேற்று நண்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
 ஞாயிற்றுக்கிழமை


சுற்றுப்புறச் சூழலில் கவனம் வைத்திருப்பது ஒரு கலை... 

அது எல்லாருக்கும் கை கூடி வருவதில்லை..

இந்தப் பதிவு எதற்கு என்று ஸ்ரீராம் அவர்களுக்குத் தெரியும்..

தாமிரபரணியுடன் சிற்றாறும் கயத்தாறும் கலக்குமிடமே முக்கூடல்..

இவ்விடத்தில் எழுந்ததே  முக்கூடற்பள்ளு....

இதில் காட்டப்பட்டிருக்கின்ற மழைக் குறிகள்...

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல்
சூழ மின்னுதே..

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்று அடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடுகுதே..

சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்றடைக்குதே - மழை
தேடியொரு கோடி வானம்
பாடி ஆடுதே..

போற்று திருமால் அழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே...


ஆற்றில் நாளை வெள்ளம்  வரப்போகின்றது, அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன.

மலையாள  திசையிலிருந்தும், ஈழத் திசையில் இருந்தும் மின்னல்கள்  மின்னுகின்றன.

நேற்றும் இன்றும்  பலத்த காற்று சுழன்றடிக்கிறது.
கிணற்றுத் தண்ணீரில் கிடக்கும் சொறித்தவளைச் சத்தமிட்டு மழை வரப்போகும் செய்தியை மக்களுக்குச் சொல்கிறது.

மழையினால் வெள்ளம்  நிரம்பினால் சேற்று நண்டு என்ன ஆகும்? 
அதற்காக அந்த நண்டு முன்னெச்சரிக்கையாக அந்தச் சேற்றை கொண்டே தன்னுடைய வளையை அடைத்துக் கொள்கிறது.

மழையைத் தேடி ஒரு கோடி வானம்பாடி பறவைகள் விண்ணில் மகிழ்ச்சியாகப் பாடித் திரிகின்றன.

எல்லோரும் போற்றி வழிபடுகின்ற அழகர் கோயில்  பண்ணைச்  சேரியில் சேர்ந்து வாழ்கின்ற மக்களாகிய நாம் அனைவரும் மழையை வரவேறறுப் பாடுவோம், துள்ளித் துள்ளி ஆடுவோம்...

பிறத்தியான் வந்த பிறகு தான் கல்வி கிடைத்தது என்று அடி வருடிகள் சொல்வதற்கு முன்பே நண்டு சேற்றைக்  கொண்டு வளையடைக்கத் தெரிந்து வைத்திருக்கின்றது...

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கிய வகை...

இதனை இயற்றியவர் யார் என்று தெரிய வில்லை....

 நலம் வாழ்க
***

8 கருத்துகள்:

  1. // ஸ்ரீராமுக்கு தெரியும் //

    யோசிக்கிறேன்..  எதற்கு என்று...  வியாழன் வெள்ளி பதிவுகளை மனதில் அசைபோடுகின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்திய உங்கள் பதிவில் ஒரு கருத்துக்குத் தான் இந்தப் பதிவு

      நீக்கு
  2. முக்கூடற்பள்ளு பள்ளி காலத்தில் பரீட்ர்சைக்கு படித்தது.  இன்று வேறு நிலையில் நின்று ரசிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  3. ஆற்றுநண்டு சேற்று சுவர் மூடி உள்ளிருந்தால் உயிர் வாழ முடியுமா?  உணவு?  காற்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளைக்குள் பல மாதங்களுக்கு கடவுள் தான் துணை...

      கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவள் சக்தி...

      நீக்கு
  4. முக்கூடற்பள்ளு பாடல் முன்பு படித்து இருந்தாலும் கல்கியின் பொன்னியின் செல்வனில் வந்திய தேவன் ஆடி மாதம் காவிரிகரைக்கு வரும் போது பாடி கொண்டு இருப்பதை கேட்பதாக வரும்.
    படமும், பாடல் பகிர்வு அருமை.

    நண்டு தன் வளையை சேற்றை கொண்டு அடைத்து கொள்வது இறைவன் அதற்கு கொடுத்த அறிவு.

    மழை வருவதை சிறு உயிர்களுக்கு தெரியும்.
    எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை வரும் என்பார்கள்.
    தன் முட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை வரும் என்பார்கள்.

      உண்மை தான்...

      இயற்கையோடு கலந்திருந்த வாழ்வு நம்முடையது...

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..