செவ்வாய், மார்ச் 03, 2026

மணி மாலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி நிறைநிலா
செவ்வாய்க்கிழமை

சில ஆண்டுகளுக்கு முன் அன்னையின் 
பேரில் தொடுக்கப்பட்டு
தளத்தில் பதிவாகிய பாமாலை இது..

மீண்டும் 
தங்களுக்காக..
 

காப்பு
தனிமா மணியாய் மலரும்  பொருளே
ஒளிமா மணியாய் திகழும் அருளே
சிவமா மணியின் செல்வத் திருவே
தவமா மணியே கணபதி சரணம்..

மாணிக்கம் 
வருவாய்  வருவாய்
வாழ்வின் ஒளியாய் 
வருவாய் வருவாய்
வளர்தமிழ் வடிவாய்..
கடைக்கண் ஒளியால்
காரிருள் தீர்ப்பாய் 
திருவடி நினைந்தேன்
தினமும் காப்பாய்.. 
பேணிக் கொண்டாடிடும்
அடியார் தமக்கு 
காணிப் பொன்னளந்திடும்
கருணா சாகரி.. 
மாணிக்க மூக்குத்தி 
மதுரையின் மீனாள் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 1

வைரம்
உயிராவணமாய்
உன்புகழ் பாட 
பயிரார் வயல் தனில்
பாயும் புனலே 
வயிரம் அணிந்திடும்
வாழ்வே போற்றி 
வாழும் வகையில்
தருவாய் போற்றி 
பயில்வார் தனையே
பார்த் தருள்வாயே.. 
அருளும் அங்கயற்
கண்ணி போற்றி 
பாண்டியன் மகளே
பதமலர் போற்றி 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 2

மரகதம் 
மயில் வாகனனை
மார்பினில் ஏந்தும் 
மங்கல கௌரி
மலரடி போற்றி 
மதுரையின் அரசி 
மங்கலம் போற்றி 
மரகதப் பூங்கொடி 
பொன்னடி போற்றி 
போற்றும் அடியார்
அகத்தில் மலரும்
ஆனந்த மலரே
அருள்வாய் போற்றி 
பூத்திடும் சங்கத்
தமிழே போற்றி 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 3

கோமேதகம்
நாமேவிய நற் றமிழால்
போற்றி
தாமேவிய நல் லடியார்
தலையில் 
பாமேவிய நல் அருளே 
எழுதும்
கோமே தகமே சரணம்
சரணம்.. 
தீமேவிய தெள் ளமுதே
சரணம்
காமேவிய நற் கனியே
சரணம் 
பூமேவிய பொன் மயிலே
சரணம்
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 4

நீலம் 
பாலாம்பிகையே
பர்வத வர்த்தனி 
நீலாம்பிகையே
நின்னடி சரணம் 
நீள்விழி மலர்கள்
நீலம் என்றே 
தாள்மலர் போற்றி
தாயே சரணம்.. 
கனலாய் புனலாய்
விளைவாய் சரணம் 
கதிராய் நிலவாய்
ஒளிர்வாய் சரணம் 
வெயிலாய் புயலாய்
புவியாய்த் திகழ்வாய் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 5

வைடூரியம் 
வானவர்க் கரணாய்
வைடூரிய வாள் 
வளைக்கரம் ஏந்தி
கொடும்பகை  தீர்த்தாய் 
குஞ்சரங குடையுடன்
குலமகள் போற்றி 
கொடிமீன் படையுடன்
கோமகள் போற்றி 
நாமகள் போற்றும்
நங்காய் போற்றி 
நலந்தரு நாரணன்
தங்காய் போற்றி 
வளந்தரு மதுரையில்
என்தாய் போற்றி 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 6

முத்து 
பித்தாய் நானிங்கு
புகல்வதும் இனிதோ 
பேரருளே உன்னைப்
புகழ்வதும் எளிதோ 
பித்தா னவனின்
பெருந்திரு மேனியில் 
பிரியா தென்றும்
படருங் கொடியே 
பொற்றா மரையில்
பூத்திடும் நிலவே 
முத்தெனுந் தமிழாய்
முன்வரும் அமுதே 
பூத்தேன் பொழியும்
பொதிகையின் வாழ்வே 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 7

பவளம் 
பவளம் நகையாய்
நானிலம் காக்க 
நிகழும் பொழுதும்
நிழலாய் காக்க 
சுழலும் உலகில்
சூழ்வினை அகலத் 
திகழும் திருமலர்ப்
பாதங்கள் போற்றி 
புகழும் மதுரையின்
புனிதம் போற்றி 
புண்ணிய வைகைப்
பொலிவே போற்றி 
பூத்திடும் மல்லிகை
மாமலர் இதழாய் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 8 

புஷ்ப ராகம்
கதம்ப வனத்தில்
களிப்புறு குயிலாய் 
கருதிடும் மனத்தில்
மலர்ந்திடும் மயிலாய் 
வலக்கரம் ஏந்திடும்
கிளியாய் எனையே 
வார்த்திடுவாயே
எந்தன் அன்னையே 
பூமணி புஷ்ப 
ராகம் பொலிந்திடும் 
புகழ்மணி நூபுரத்
திருவடி போற்றி 
தேசம் உடையாய்
திருவடி சரணம் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 9


மணி மணியாக
நவமணி மாலை 
மங்கல மார்பினில்
மல்லிகை மாலை 
அணிதிகழ் மாலை
ஆயிரம்  இலங்கும் 
அன்பினில் மீனாள்  
மனமெனத் துலங்கும் 
மணியுடை நூபுரம
மணித்தமிழ் பேசும் 
திருவடி யதனில்
அருளொளி வீசும் 
சுந்தரன் பங்கில்
சுந்தரி போற்றி.. 
கைதொழுதேன் கழல்
அடிமலர் போற்றி.. 
**
ஓம் சக்தி ஓம்
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், மார்ச் 02, 2026

நவீனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி  
திங்கட்கிழமை

சமையலறையில்  இருக்க  வேண்டியவை 
என, எத்தனையோ  விதமான 
உபகரணங்கள் வந்து விட்டன..

அத்தகையவற்றுள் 
இலகு ரக மின் உபகரணங்களத் தவிர்த்து 

இன்றைய
சமையலறையில்
அவசியம் இருக்க வேண்டிய எளிய உபகரணங்களுள் சில ..

இவற்றுக்கு மேலும் பலவகை இருக்கலாம்...  அவை அவரவர் விருப்பம்...

ஒன்று மட்டும் நிச்சயம்...

அன்றைய 
சமையலறையின் தோற்றத்தை மாற்றி விட்ட காரணிகளால் - 

ஆரோக்கியத்தைக் கொண்டு வருவதற்கு இயல வில்லை...

 










படங்கள்
இணையத்தில்
பெறப்பட்டவை..

 உபகரணங்கள் யாதாயினும் அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்..

நலம் நம் கையில்

ஓம் நம சிவாய 
***