நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
ஞாயிற்றுக்கிழமை
சில பதிவுகளுக்கு முன்பு -
" மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்ணாடி பலகைகள் படம் அழகாக இருக்கிறது. உள்நாழி என்றால்!..
"
- என்று மதிப்புக்குரிய கமலா ஹரிஹரன் அவர்கள் கேட்டிருந்தார்கள்...
உள்நாழி என்பது வெளிப்புறத்தில்
கருவறையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கின்ற தொட்டி (போன்ற அமைப்பு)..
முன்பெல்லாம்
நோயினால் துயருற்று இருப்பவரோ அவருக்காக வேறு ஒருவரோ நலம் வேண்டி நேர்ந்து கொண்டு உள்நாழித் தொட்டியில் தண்ணீர் நிரப்புவர்..
இப்படி தண்ணீர் நிரப்புவதால் மூலஸ்தானத்தில் மூர்த்தியின் மனம் குளிரும் என்பது நம்பிக்கை..
இப்பழக்கம் கால வெள்ளத்தால் மறைந்து விட்டது...
தொன்மையான சிவாலயங்கள் பலலற்றில் உள்நாழி இன்னும் உள்ளது...
சிவாலயங்களில் ஜூர ஹரேஸ்வர லிங்கம் என தனியாக சந்நிதியில் பிரதிஷ்டை இருந்தால் உள்நாழித் தொட்டியில் தான் சிவலிங்கம் இருக்கும்..
தொற்று நோயாக காய்ச்சல் பரவிடும் போது அது தீர்வதற்காக மக்கள் உள்நாழித் தொட்டியில் தண்ணீர் நிரப்புவர்..
தனியொரு வீட்டில் ஜூரம் என்றாலும் குடும்பத்தினர் உள்நாழியை தண்ணீர் கொண்டு நிரப்புவர்...
இதற்கு ஏதுவாக கோயிலுக்குள் கிணறும் இருக்கும்..
கதிர் கண்ட பனி போல கஷ்டமும் விலகும்...
அதெல்லாம் மூட நம்பிக்கை என்றான பின் சொல்வதற்கு ஏதும் இல்லாமல் போனது...
தஞ்சை கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலிலும் கருவறையைச் சுற்றி உள்நாழி அமைப்பு உள்ளது..
ஜூரஹரேஸ்வர லிங்கமும் உள்நாழித் தொட்டியில் தான் இருக்கின்றது...
திரு ஐயாறு மூலஸ்தானத்தில் உள்நாழித் தொட்டி அமைப்பு உள்ளது...
மூலஸ்தானத்தைச் சுற்றி ஈசனின் ஜடாபாரம் (திருமுடிக் கற்றை) விரிந்திருப்பதாக ஐதீகம். அதனால் அங்கு வலம் செய்வதற்கு அனுமதி இல்லை..
திரு ஐயாறு கோயிலில் அகப்பேய்ச்சித்தர் ஜூரஹரேஸ்வர லிங்கம் என சாந்நித்யம் கொண்டுள்ளார்..
![]() |
| கும்பகோணம் |
கும்பகோணம் ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயிலில் உள்நாழி அமைப்பு பராமரிப்பு இன்றிக் கிடக்கின்றது..
![]() |
| தஞ்சை |
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலிலும் கருவறையைச் சுற்றி உள்நாழி அமைப்பு உள்ளது...
இந்தப் பதிவு அன்றே தயாராகி விட்டது...
புன்னை நல்லூர் கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது...
நேரம் கூடி வரவில்லை
எனினும் கமலா ஹரிஹரன் அவர்களால் ஆயிற்று..
உள்நாழி படங்களும் கிடைத்தன..
இருப்பினும்
சற்றே தாமதம்...
எனக்குத் தெரிந்தவற்றை இங்கே சொல்லியிருக்கின்றேன்... இதற்கு மேலும் இருக்கலாம்...
கோயில் குளம் கிணறு விருட்சம் பக்தி என்று எல்லாமும் ஒருங்கிணைந்திருந்த காலத்தில்
மக்களுக்கு அனைத்தும் சாத்தியமாக இருந்தன...
சத்தியமாகவும் இருந்தன...
பெரிய நோய்கள் சூழ்ந்து கொண்ட காலத்தில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உற்ற துணையாக இருந்தன...
இன்றைக்கு அப்படி இல்லை..
எனவேதான் -
நவீன மருத்துவமனைகளிலும் செயற்கைக் கருவூட்டல் மையங்களிலும் நெரிசல்..
ஓம் நம சிவாய
***










அருமை. படங்களுடனான விளக்கம் அருமை. நானும் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
வாழ்க்கை முறையே மாறிப்போகும்போது வழிபாட்டு முறைகளும் சுருங்கிப் போய் விடுகின்றன..
பதிலளிநீக்குஉண்மை.. உண்மை...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. என் கேள்விக்கென பிறந்த பதிவை படித்து, கோவில் அமைப்புகளை (உள்நாழி) குறித்த நல்ல சிறந்த விளக்கங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி. 🙏.
/ஜூரஹரேஸ்வர லிங்கமும் உள்நாழித் தொட்டியில் தான் இருக்கின்றது.../
இறைவனின் பெயரை கேட்பதற்கே ஆனந்தமாக உள்ளது. இறைவன் எப்போதுமே அனைவருக்கும் நன்மை தருபவன். அதிலும் அவன் மனம் குளிரந்தால், ஜூரத்தின் வேகங்கள் தணிந்து மக்கள் நோய்களிலிருந்து குணமடைந்து விடுவார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மை.
/புன்னை நல்லூர் கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது...
நேரம் கூடி வரவில்லை
எனினும் கமலா ஹரிஹரன் அவர்களால் ஆயிற்று..
உள்நாழி படங்களும் கிடைத்தன..
இருப்பினும்
சற்றே தாமதம்.../
புன்னை நல்லூர் மாரியம்மன் தரிசனம் உங்களுக்கு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நாங்களும் இரு வருடங்களுக்கு முன்பு அன்னையின் அருளால் அவளை தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றோம் . உங்களால் ஒவ்வொரு கோவிலின் அமைப்புகள், அதில் மக்களின் சேவைகள் என இதைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முடிந்தது. / முடிகிறது. இதற்கே நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இப்போது விளக்கமாக வந்த இப்பதிவுக்கும் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். அருமையான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனது கடமையைச் செய்திருக்கின்றேன்...
நீக்குஅன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ..
நன்றியம்மா..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவில் உள்நாழி படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.
/கோயில் குளம் கிணறு விருட்சம் பக்தி என்று எல்லாமும் ஒருங்கிணைந்திருந்த காலத்தில்
மக்களுக்கு அனைத்தும் சாத்தியமாக இருந்தன...
சத்தியமாகவும் இருந்தன...
பெரிய நோய்கள் சூழ்ந்து கொண்ட காலத்தில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உற்ற துணையாக இருந்தன...
இன்றைக்கு அப்படி இல்லை../
உண்மை. மக்கள் கால வெள்ளத்தின் அவசரங்களில் சிக்கி விட்டார்கள். முன்பெல்லாம் ஒரு நாள் என்பதே நீண்ட பொழுதாக, ஒரு நிறைவான மனதுடன் நகரும். ஆனால், இன்றைய விஞ்ஞான மாற்றங்களில் நேரம் பறப்பதே கண்களுக்குத் தெரியவில்லை. இதோ..! வருடம் ஆரம்பித்து இரு மாதங்கள் பறந்து விட்டது வியப்பைத் தருகிறது. ஆனாலும் அனைத்தும் இறைவன் அருளால், நல்லபடியாக நடக்க வேண்டி தினமும் பிரார்த்திப்போம். 🙏. நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆத்மார்த்தமான கருத்துரை...
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி ..
நன்றியம்மா..
உள் நாழியில் தண்ணீர் நிரப்பி , ஜுரஹரேஸ்வரருக்கு மிளகு ரசம் , சுட்ட அப்பளம் ,சாதம் வைத்து வணங்குவர் . நான் என் மகனுக்கு வேண்டி கொண்டு செய்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குபுன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் இப்படி தண்ணீர் நிரப்புவதை பார்த்து இருக்கிறேன்.
கோயிலில் உள்ள உள் நாழி படங்கள் பகிர்வு அருமை.
சிறப்பான நிவேத்ய குறிப்புகளுடன் தங்களது கருத்து...
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி ..
நன்றியம்மா
உள்நாழி என்பது கருவறையைச் சுற்றியுள்ள பகுதியா இல்லை இறைவனைச் சுற்றியுள்ள பகுதியா? கருவறையைச் சுற்றி, என்றால், அது இல்லாத கோவில்கள் மிக்க் குறைவு.
பதிலளிநீக்குதிருமலையில் உள்நாழியைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் வலம் வரும் வாய்ப்பு எனக்கு மூன்று முறை கிட்டியது.
திருவரங்கம் கருவறையைச் சுற்றியுள்ள பகுதி வருடத்திற்கு ஒரு நாள்தான் திறந்திருக்கும். அதன் முறை உள்ளவர்கள் அங்குள்ள கிணற்றில் நீர் இறைத்து கருவறையைச் சுற்றி வார்ப்பார்கள், கருவறை குளிர்ந்திருக்க வேண்டும் என்று. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
கருவறையைச் சுற்றியுள்ள பகுதிக்கும் உள்நாழி என்றே சிலர் சொல்கின்றனர்..
நீக்குதஞ்சை பெரிய கோயிலில் கருவறையைச் சுற்றியுள்ள பகுதிக்கு சாந்தாரம் என்று பெயர்...
மேலதிக விவரங்களுக்கு நன்றி...
மகிழ்ச்சி
உள்நாழிபற்றி விளக்கங்களுடன் தந்துள்ளீர்கள் .
பதிலளிநீக்குஅறிந்துகொண்டோம்.
உள்நாழி படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.
"தஞ்சை கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலிலும் கருவறையைச் சுற்றி உள்நாழி அமைப்பு உள்ளது..
ஜூரஹரேஸ்வர லிங்கமும் உள்நாழித் தொட்டியில் தான் இருக்கின்றது.." விரிவான தகவல்களுக்கு நன்றி.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி ..
நீக்குநன்றியம்மா.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஉள்நாழி குறித்த தகவல்கள் நன்று. சாந்தாரம் - நீங்கள் சொல்வது போல கருவறையைச் சுற்றி இருப்பதை திருநேமம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் பார்த்ததுண்டு - பராமரிப்பில்லாமல் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது அங்கே.
அன்பின் வெங்கட் நல்வரவு..
நீக்குகருத்துரையும் மேலதிக விவரங்களும் நன்றி...