சனி, பிப்ரவரி 28, 2026

மாசி மகம்

  


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 சனிக்கிழமை

 மாசி 18 திங்களன்று (மார்ச்/2)
மாசிமக தீர்த்தவாரி

கும்பகோணம் மகாமகக் 
குளக்கரையில்
பெருந்திருவிழா..

ஸ்ரீ கும்பேஸ்வரர் மங்களாம்பிகை

பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே. 5/22/1

நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படும்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.. 5/22/3

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே. 5/22/6
-: திருநாவுக்கரசர் :-
**

மாசிமகப் பெருந் 
 திருவிழாவின் அழைப்பிதழ்..


ஓம் நம சிவாய
***

வெள்ளி, பிப்ரவரி 27, 2026

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி  
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
குன்றுதோறாடல்


தனதன தனன தனதன தனன
     தனதன தனன ... தனதான

எழுதிகழ் புவன நொடியள வதனி
     லியல்பெற மயிலில் ... வருவோனே

இமையவர் பரவி யடிதொழ அவுணர்
     மடிவுற விடுவ ... தொருவேலா

வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
     வழிபட மொழியு ... முருகேசா

மலரடி பணியு மடமகள் பசலை
     மயல்கொடு தளர்வ ... தழகோதான்...

முழுகிய புனலி லினமணி தரள
     முறுகிடு பவள ... மிகவாரி

முறையொடு குறவர் மடமகள் சொரியு
     முதுமலை யழக ... குருநாதா

பழகிய வினைகள் பொடிபட அருளில்
     படிபவ ரிதய ... முறுகோவே

பருவரை துணிய வொருகணை தெரிவ
     பலமலை யுடைய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

இந்தத் திருப்புகழைப்
பாராயணம் செய்வதன் மூலம்
பல தலங்களையும் வழிபட்ட பேறு கிட்டும்..


முருகா முருகா
முருகா முருகா
***

வியாழன், பிப்ரவரி 26, 2026

ஜோதி தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 
வியாழக்கிழமை

ஸ்ரீ கோரக்க சித்தர்


ஸ்ரீ கோரக்க சித்தர் சந்நிதியில் தீப ஆராதனை

தலம்

வடக்கு பொய்கைநல்லூர், நாகப்பட்டினம்

காணொளிக்கு நன்றி

சித்தர் வழிபாட்டுக் குழு

ஓம் நம சிவாய

***

புதன், பிப்ரவரி 25, 2026

அன்பின் வழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 புதன்கிழமை


ராமாயணம் காட்டுகின்ற நெறி

காணொளிக்கு நன்றி


வாழ்க நலம்
***

செவ்வாய், பிப்ரவரி 24, 2026

கருப்பன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 செவ்வாய்க்கிழமை

சில ஆண்டுகளுக்கு முன் 
எங்கள் பிளாக் தளத்தில் வெளியான எனது சிறுகதை

கருப்பன்
**

" டிங்டிங் டிடிங்.. டிங்டிங் டிடிங்.. "

சொசைட்டிக்கு பால் கறக்கணும்... மூனே முக்கால் ஆச்சு.. செவலையை அவிழ்த்து அதன் முதுகிலேயே கயிற்றைப் போட்டாள் காவேரி.. 

அது நின்று கொண்டு திரும்பிப் பார்த்தது - கன்றைக் காணோமே!.. என்று..

அந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு..

உம் புள்ளய ஒன்னும் செஞ்சிட மாட்டோம் தாயி!.. - என்றபடி கன்றை அவிழ்த்து விட்டாள்.. 

துள்ளிக் குதித்த கன்றைப் பார்த்துக் கொண்டே நடந்தது பசு.. 

கையில் பால் குவளையையும் விளக்கெண்ணெய் சிமிழையும் எடுத்துக் கொண்டு நடந்த காவேரியின் கண்கள் எதிரில் தேடின - இப்போதாவது கருப்பன் வருகின்றானா!.. என்று...

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கருப்பனைத் தவிர மற்றெல்லாமும் தென்பட்டன..

எதிரில் வருபவர் யாராவது கருப்பனைப் பற்றி சொல்லுவார்கள் - என்று பார்த்தால் அவரவரும் அவரவர் வேலையோடு போய்க் கொண்டு இருக்கின்றார்கள்..

கருப்பன்.. கருப்பன்!..
யாரவன் கருப்பன்?.. - என்றால் 

அந்தக் காலத்து ஆடு.. அலமேலுவோட ஆடு ஞாபகத்துக்கு வருதா?.. அது மாதிரி.. அந்த ஆட்டைப் போல எழுதப் படிக்கத் தெரியாதே தவிர கருப்பனுக்கு  மற்றதெல்லாம் தெரியும்..

விடியற்காலை கட்டுத் தறியில் இருந்து அவிழ்த்து விட்டால் போதும்.. அக்கம் பக்கத்து குரால்களைக் கொஞ்ச நேரம் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு விட்டு மெதுவாக நடையைக் கட்டுவான்.. மந்தையில் மத்தியானம் வரைக்கும் நாட்டாமை.. ஒரு யோசனை வந்து விட்டால் வடக்கே ரயில்வே டேசனுக்குப் போவான்..  அங்கே சுற்றித் திரிந்து விட்டு நடுப் பகலில் திரும்புவான்..

" எங்கேடா ஊர் சுற்றப் போனாய்!.. " - என்று காவேரி அதட்டினால் தனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் அப்பாவியாக நிற்பான்..

ஒரு வாளி நிறைய கடலைப் புண்ணாக்கை கரைத்து வைத்திருப்பாள் காவேரி - இது மாதிரி ஊர் சுற்றும் பயல் உடம்புக்கு இது தான் நல்லது என்று... 

மூச்சு முட்ட அதைக் குடித்து விட்டு திண்ணையில் ஏறிப் படுத்தான் என்றால் அது தான் அவனுக்கு சொர்க்கம்..

இப்படியாகப்பட்டவன் சாயங்காலத்துக்கு மேலும் வீட்டுக்குத் திரும்பவில்லையே.. என்ற கவலை காவேரிக்கு..

புளியந்தோப்பில் வைத்து செவலையிடம் ரெண்டு லிட்டர் கறந்து சொசைட்டியில் ஊற்றி விட்டு  அட்டையிலும் பதிவு செய்து விட்டு வீட்டுக்கும் திரும்பியாயிற்று.. கருப்பன் வீடு திரும்பவில்லை..

காவேரியின் கண்களில் நீர் கோர்த்தது..

கருப்பனுக்கு என்று ஊறவைத்த கடலைப் புண்ணாக்கு நுரைக்க ஆரம்பித்திருந்தது..

தோட்டத்திலிருந்து அப்பாவும் அம்மாவும் திரும்பியாயிற்று..  பள்ளிக்கூடம் விட்டு தம்பியும் வந்து விட்டான்... 

விஷயம் தெரிந்ததும்
எல்லாரும் ஏகமனதாகச் சொன்னார்கள் - " எங்கே போயிடப் போறான்... வருவான்.. வருவான்!.. "

ஆனால் வரவில்லை..

அதோ - ஏழு தெருக்களையும் தபால் கட்டுடன் சைக்கிளில் சுற்றி வரும் போஸ்ட் ஆபீஸ் மாமா ..
இங்கிருந்தபடியே கத்தினாள்..

" மாமா.. கருப்பனப் பார்த்தீங்களா?.. '
சைக்கிளை நிறுத்தி காலை ஊன்றியவர் - 
" இல்லையே.. ம்மா!.. " - என்றபடி வீட்டை நோக்கி மெதுவாக நகர்ந்தார்..

கருப்பனைப் பற்றி அந்த ஊரில் எல்லாருக்கும் தெரியும்...

முனீஸ்வர சாமிக்கு நேர்ந்து விடப்பட்டிருந்தான்..

அது பெரிய கதை.. பன்னிரண்டு மைல் சுற்றளவுக்கு விசேசம் இந்த ஊர் குருதி  பூசை.. அதுவும் மூனு வருசத்துக்கு ஒரு தரம் தான்.. அந்தக் கெரகம் இந்த வருசம் பார்த்து வருது.. மற்ற படையல் பள்ளயம் எல்லாம் வருசா வருசம் வழக்கம் போல..

தை முதல் செவ்வாய் அன்னைக்கு குருதி பூசை.. 

இலுப்பைத் தோப்பு முனீஸ்வரன் கோயில்ல பரிவார சாமிகளுக்கு எண்ணெய்க் காப்பு.. புது வேஷ்டி சாத்தி அசைவ படையல்..
இதுல முனீஸ்வரன் ஒதுங்கியே இருப்பார்.. 

அவருக்கு தை முதல் வெள்ளியன்னிக்கு அமுது படையல்..  சுழியம், அதிரசம், இளநீர், பானகம், பஞ்சாமிர்தம், தயிர் பள்ளயம், பாயாசம்..

கடை வெள்ளிக்கு  முனீஸ்வரன் அழைப்பு.. வாண வேடிக்கை.. ஊர் கோலம்..
கடை செவ்வாய் அன்னிக்கு விடையாற்றி.. மஞ்சத் தண்ணி விளையாட்டு..

முனீஸ்வர சாமிக்கு.. ன்னு
கிடாக்கள் நேர்ந்து விடுறது .. படையல் மட்டும் பரிவார சாமிகளுக்கு!..

ஊர்ல பதினைஞ்சு கிடா குட்டிகள் குருதிப் பூசைக்காகவே சுத்திக்கிட்டு இருக்குதுங்க.. இருந்தாலும் காவேரியோட கருப்பனுக்குத் தான் முதல் மரியாதை.. பூசை..

இந்த நேர்ச்சை ஆடுகளோட அடையாளம் - சிவப்பு நிற கழுத்துக் கயிறும் அதுல சூலாயுத முத்திரையோட ஒரு தகடும் தான்.. 

முனி ஐயா கிடாக்களக் கண்டாலே போதும்.. 
களவாணிப் பயலுகளுக்கு பேதியாயிடும்..  ஒருத்தனும்  கிட்ட நெருங்க மாட்டான்...  கிடாக்கள் வெள்ளாமையில  இறங்கிட்டா கூட ஜனங்க கோவிச்சுக்க மாட்டாங்க.. 

" சேதாரம் ஆகிடாம பாத்துக்குங்க ஐயா.. " - ங்கற ஒரே பேச்சு தான்.. 

அந்த வருசம் அந்த வயல்ல மகசூல் அமோகமா இருக்கும்..  கல்லு எதையும் எடுத்து வீசினா - அவ்வளவு தான்..

காத்து வாக்குல சேதி ஊருக்குள்ள போயி - நாலு எட்டா சனங்க வந்து விட்டார்கள்..

" இருவது கிலோவுக்கு மேல தேருமே!.. "

" இந்தக் கிடாக்களை வச்சி பண்ணையம் பண்றதே பெரிய பாடு.. "

" எனக்கென்னமோ சந்தேகமாத் தான் இருக்கு.. "

" நாளைக்கு முனியன் கடுப்பாகி கெளம்பிட்டா யாரு தாங்குறது?.. "

ஆளுக்கு ஆள் பேசி விட்டுப் போனார்கள்...

" எலே.. தம்பி... வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டுப் போய் ஒரு சுத்து பார்த்துட்டு வர்றியா?.. " 

காவேரியின் அப்பாவுக்கு உண்மையிலேயே கவலை..

" ராத்திரியில அந்த அண்ணன் சைக்கிள் தர மாட்டார் அப்பா!.. " 

" அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. முனியன் கெடாய ஒருத்தன் தொட முடியுமா.. ன்னேன்.. ஏதாவது கொரால் பின்னால போயிருப்பான்... காலைல வருவான் பாருங்க... ஏ.. பாப்பா.. எதுக்கும் நீ கவலப்படாம  ஒரு ரூவா துட்டை எடுத்து முடிஞ்சு வை!.. " - என்று ஆறுதலாகப் பேசியபடி காவிரியின் தலையை வருடி விட்டாள் தாய்..

ராத்திரி சோறு ஒருவருக்கும் இறங்கவில்லை.. திண்ணை காலியாகக் கிடந்தது.. 

கையில் அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு வேலிப் படல் வரைக்கும் சென்று பார்த்து விட்டு வந்தாள் காவேரி..

ஈசான மூலை பல்லிக்குக் கூட கருப்பன் போன இடம் தெரிய வில்லை..  வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்தது..
கண்களைத் துடைத்தபடி தூங்கிப் போன காவேரி விடிவதற்கு முன்னால் எழுந்து வாசலுக்கு ஓடினாள்...

கருப்பனைக் காணோம்..
சொசைட்டியில் பால் கறக்க வேண்டும்... 

" ஏ... பாப்பா... பேசாம இரு.. அது கோயில் கெடா... அந்தக் கவலை முனியனுக்குத் தான்!.. " - என்றாள் அம்மா செவலையை அவிழ்த்துக் கொண்டே..

பொழுதும் நன்றாக விடிந்து விட்டது.. கருப்பன் காணாமல் போனது குரால்களுக்குத் தெரி ந்திருக்கும் போல.. எல்லாமே ஒரு மாதிரி மசங்கலாக இருந்தன...

அம்மா சொன்ன மாதிரி ஒரு ரூபாயை எடுத்து விளக்கு மாடத்தில் வைத்த காவேரி வாளியில் கடலைப் புண்ணாக்கைப் போட்டு தண்ணீர் எடுத்து ஊற்றினாள் - கருப்பன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையுடன்..

யார் யாரோ வாசலுக்கு வந்தார்கள்.. ஏதேதோ பேசி விட்டுப் போனார்கள்..

" கருப்பன் காணாமப் போய்ட்டான்.. முனியனுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!..
நல்லா மாட்டிக்கிட்டான் நல்ல தம்பி!.. " 

உள்ளூர சந்தோஷம் சிலருக்கு..

" போலீஸ்ல சொல்லுவமா?.. "

" எதுக்கு!.  போற போக்குல  பொங்க வைக்கிறதுக்கா?.. "

" ஏ.. நல்லதம்பி..  கருப்பன் காணாப் போனதுக்காக வருத்தப் படாதே.. கைக்கு கிடச்சதும் வர்ற கார்த்திகையில பாய்ச்சல் விட்டு குருதி பூச வச்சிடுவோம்.. இல்லேன்னா வேற கிடாக் குட்டி வாங்கி விட்டுடுவோம்.. அதனால ஒன்னும் தப்பு இல்லை.. காணாப் போன கருப்பன் வரலை.. ன்னா சாமி குத்தம் ஆகிடும்.. ன்னு பயப்படாதே "

வாத்தியார் தாத்தா பேசினார்.. 

" அதுவும் சரிதான்.." - என்ற பேச்சும் கூடவே எழுந்தது,.

காவேரி எழுந்து முன்னால் வந்தாள்..

" தாத்தா மன்னிக்கணும்... நான் முனி ஐயாவுக்கு நிறை காணிக்கை நேர்ந்திருக்கேன்!... "

வாசலில் கூடியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி...

" நெற காணிக்கையா!..  குருதி பூசைக்கு நேர்ந்துகிட்ட கிடா தானே கருப்பன்!.. "

" ஆமா.. ஆனாலும் நான் நேத்து மறு மாப்பு  கேட்டு வேண்டிக்கிட்டேன்.. "

எல்லார் முகத்திலும் இருள் - கறி சோறு போச்சே!.. - என்று..

நிறை காணிக்கை என்றால் நேர்ந்து விட்ட கிடாயை அப்படியே விட்டு விடுவது.. வாழும் காலம் வரை வாழ்ந்து முடிந்ததும்  அந்தக் கிடாயை கொட்டு முழக்கு மாலை மரியாதையுடன் அனுப்பி வைப்பது..

" யோசிச்சு தான் சொல்றியா காவேரி?.. "

" ஆமாங்க.. தாத்தா!.. "

" அப்போ நேர்ந்து விட்டுருக்கும் மத்த கிடாக்களை எல்லாம் என்ன பண்றது?...

திடீரென ஆவேசம் வந்து ஆடினான் கோவிந்தன் மகன்.. பதினைஞ்சு வயசுதான் அவனுக்கு..

" அவுத்து விட்டுடுங்கடா.. "

" அப்போ குருதி பூச?.. "

" கூஷ்மாண்டத்தை வெட்டிப் போடுங்க!.. "

" கூஸ்மாண்டமா.. அப்படி.. ன்னா!?.. "

" பூசனிக்காய்.. டா.. பூசனிக்காய்!.. "

" அது மட்டும் போதுமா!... "

" போதும்.. பள்ளயத்தை மட்டும் மாத்தக் கூடாது.. புரிஞ்சதா!.. "

" புரிஞ்சதுங்க சாமி!.. "

" ஊர்ல.. நாட்ல.. அநியாயம் அக்கிரமம் பெருகிப் போச்சு.. அயோக்கியன ஆக்கினை பண்ணனும்.. களவாணிய களை எடுக்கணும்.. எம் பரிவாரம் பூராவும் அங்கே பூந்து வெளையாடுவாங்க.. "

" எதுவும் குத்தம் குறை இல்லையே.. கோப தாபம் இல்லையே!.. " 

" அதான் சொல்லிட்டேனே.. நல்ல சனங்க  நிம்மதியா இருப்பாங்க.. ன்னு!.. "

விபூதி சம்படம் வந்தது.. விபூதியை அள்ளி மேலே வீசிய சாமி பெரிய சத்தத்துடன் மலையேறியது.. 

சிறுவன் மயங்கி விழுந்தான்..

" அடடே... கருப்பன் எங்கே... ன்னு கேக்கறதுக்கு  மறந்துட்டமே!.. "

கூட்டம் வருத்தப்பட்ட வேளையில் -
வேலிப் படலை முட்டித் தள்ளி விட்டு கருப்பன் வந்து கொண்டிருந்தான்..

காவேரி பொங்கி எழுந்து ஓடி கட்டிக் கொண்டாள்..

" எங்கே சாமி போயிருந்தே!.. "

" நான் இங்கே தானே இருக்கேன்!.. " - என்கிற மாதிரி காவேரியின் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டான் கருப்பன்..
***

திங்கள், பிப்ரவரி 23, 2026

ரயில் டிபன்ஸ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
திங்கட்கிழமை


தஞ்சாவூர் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுவையான நற்செய்தி: 

தஞ்சாவூர் ஜங்ஷனில் திறக்கப் பட்டுள்ளது 'ரயில் கோச் ரெஸ்டாரன்ட்'!.. 🚂

45 வருட பாரம்பரியமுடைய தஞ்சாவூரின் புகழ் பெற்ற 'ரயிலடி வி. சுப்பையா டிபன்ஸ்' (Railadi V. Subbaiya Tiffins) நிறுவனத்தினர் தங்களது புதிய ரயில் கோச் உணவகத்தை 
(AC) கடந்த வெள்ளிக்கிழமை (20/02/26) அன்று  தஞ்சாவூர் சந்திப்பு நிலைய - பிரதான வாயிலின் எதிர்ப்புறத்தில் கோலாகலமாகத் திறந்துள்ளனர்..

பாரம்பரிய  சுவையுடைய சைவ உணவுகளை ரயில் பெட்டிக்குள் குளுகுளு என, அமர்ந்து சாப்பிடுவது  மாறுபட்ட புதிய அனுபவம்! ..

ரயில் கோச் உணவகத்தின் உட்புறம் முழுவதும் தஞ்சையின்  மண் வாசம் கலையழகுடன் கூடி தனித்துவமாக நிரம்பியுள்ளது..







ரயில் பயணத்திற்கு முன்னோ அல்லது பிறகோ குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு இது ஒரு சிறப்பான இடம்...

படங்களுக்கு நன்றி
Fb

 தஞ்சை வாழ்க..
***

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026

உள்நாழி

   


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 ஞாயிற்றுக்கிழமை

சில பதிவுகளுக்கு முன்பு - 




" மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்ணாடி பலகைகள் படம் அழகாக இருக்கிறது. உள்நாழி என்றால்!.. 

- என்று மதிப்புக்குரிய  கமலா ஹரிஹரன் அவர்கள் கேட்டிருந்தார்கள்...

உள்நாழி என்பது வெளிப்புறத்தில்
கருவறையைச் சுற்றிலும்  அமைக்கப்பட்டிருக்கின்ற  தொட்டி (போன்ற அமைப்பு)..

முன்பெல்லாம்
நோயினால் துயருற்று இருப்பவரோ அவருக்காக வேறு ஒருவரோ நலம் வேண்டி நேர்ந்து கொண்டு உள்நாழித் தொட்டியில் தண்ணீர் நிரப்புவர்..

இப்படி தண்ணீர் நிரப்புவதால் மூலஸ்தானத்தில் மூர்த்தியின் மனம் குளிரும் என்பது நம்பிக்கை.. 

இப்பழக்கம் கால வெள்ளத்தால் மறைந்து விட்டது...

தொன்மையான  சிவாலயங்கள் பலலற்றில் உள்நாழி இன்னும் உள்ளது...

சிவாலயங்களில் ஜூர ஹரேஸ்வர லிங்கம்  என தனியாக  சந்நிதியில் பிரதிஷ்டை  இருந்தால் உள்நாழித் தொட்டியில் தான் சிவலிங்கம் இருக்கும்..

தொற்று நோயாக காய்ச்சல் பரவிடும் போது அது தீர்வதற்காக மக்கள் உள்நாழித் தொட்டியில் தண்ணீர் நிரப்புவர்..

தனியொரு வீட்டில் ஜூரம் என்றாலும் குடும்பத்தினர் உள்நாழியை தண்ணீர் கொண்டு நிரப்புவர்... 

இதற்கு ஏதுவாக கோயிலுக்குள் கிணறும் இருக்கும்..

கதிர் கண்ட பனி போல கஷ்டமும் விலகும்...

அதெல்லாம் மூட நம்பிக்கை என்றான பின் சொல்வதற்கு ஏதும் இல்லாமல் போனது...

தஞ்சை கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலிலும் கருவறையைச் சுற்றி உள்நாழி அமைப்பு உள்ளது..

ஜூரஹரேஸ்வர லிங்கமும் உள்நாழித் தொட்டியில் தான் இருக்கின்றது...

திரு ஐயாறு மூலஸ்தானத்தில்   உள்நாழித் தொட்டி அமைப்பு உள்ளது...

மூலஸ்தானத்தைச் சுற்றி ஈசனின் ஜடாபாரம்  (திருமுடிக் கற்றை) விரிந்திருப்பதாக ஐதீகம்.  அதனால் அங்கு வலம் செய்வதற்கு அனுமதி இல்லை..

திரு ஐயாறு கோயிலில் அகப்பேய்ச்சித்தர் ஜூரஹரேஸ்வர லிங்கம் என சாந்நித்யம் கொண்டுள்ளார்..


கும்பகோணம்

கும்பகோணம் ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயிலில் உள்நாழி அமைப்பு பராமரிப்பு இன்றிக் கிடக்கின்றது..


தஞ்சை

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலிலும் கருவறையைச் சுற்றி உள்நாழி அமைப்பு உள்ளது...




இந்தப் பதிவு அன்றே தயாராகி விட்டது...

புன்னை நல்லூர் கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது...

நேரம் கூடி வரவில்லை
எனினும் கமலா ஹரிஹரன் அவர்களால் ஆயிற்று.. 

உள்நாழி படங்களும் கிடைத்தன..

இருப்பினும்
சற்றே தாமதம்...

எனக்குத் தெரிந்தவற்றை இங்கே சொல்லியிருக்கின்றேன்... இதற்கு மேலும் இருக்கலாம்...

கோயில் குளம் கிணறு விருட்சம்  பக்தி என்று எல்லாமும் ஒருங்கிணைந்திருந்த காலத்தில் 
மக்களுக்கு அனைத்தும் சாத்தியமாக இருந்தன...

சத்தியமாகவும் இருந்தன...

பெரிய நோய்கள் சூழ்ந்து கொண்ட காலத்தில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உற்ற துணையாக இருந்தன...

இன்றைக்கு அப்படி இல்லை..

எனவேதான் -
நவீன மருத்துவமனைகளிலும் செயற்கைக் கருவூட்டல் மையங்களிலும் நெரிசல்..

ஓம் நம சிவாய
***

வெள்ளி, பிப்ரவரி 20, 2026

திருப்புகழ்

 நாடும் வீடும்

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
பொது

தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ... தனதான

ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
     மேவதுப ழிக்கும் ... விழியாலே

ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி
     லேமருவி மெத்த ... மருளாகி

நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
     நாரியர்கள் சுற்ற ... மிவைபேணா

ஞானஉணர் வற்று நானெழுபி றப்பும்
     நாடிநர கத்தில் ... விழலாமோ..

ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
     யாடுமொரு பச்சை ... மயில்வீரா

ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
     ஆருமுய நிற்கு ... முருகோனே

வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
     மேவியகு றத்தி ... மணவாளா

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ... பெருமாளே..
:- அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா  முருகா
முருகா  முருகா
***

வியாழன், பிப்ரவரி 19, 2026

ஞானசபை

   


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 வியாழக்கிழமை

வடலூர் ஞானசபை
உருவான வரலாறு


சித்தர் குழுவில்
கிடைத்த காணொளி


அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி
***

திங்கள், பிப்ரவரி 16, 2026

கதம்ப இட்லி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
திங்கட்கிழமை

கதம்ப இட்லி


தேவையான பொருள்கள் :-
வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு

பாசிப்பயறு 200 கி
கேரட், பீன்ஸ், சின்ன வெங்காயம், முட்டைக் கோஸ் இலைகள், பூண்டு, இஞ்சி அனைத்துமாக 200 அல்லது 250 கி

மல்லித் தழை சிறிது
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கல் உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

ஒருநாள் முன்னதாக பச்சைப் பயறை ஊற வைத்து முளை கட்டி வைக்கவும்..

வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு தயாராக இருக்கட்டும்..

முளை கட்டி வைத்திருக்கின்ற பச்சைப்  பயறை மிக்ஸியில் இட்டு சுழற்றி எடுத்து -  இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்..

கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ் இலைகள், சின்ன வெங்காயம், 
பூண்டு இஞ்சி இவற்றையும்
மல்லித் தழை கறிவேப்பிலை இலைகளையும்  மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..

இவை அனைத்தும் 250 கிராமிற்கு மிகாமல் இருப்பது நல்லது ....


இவற்றையும் இட்லி மாவுடன் நன்றாகக் கலந்து தேவை எனில் உப்பு சேர்த்து  இட்லித் தட்டில்   ஊற்றி பக்குவமாக அவித்தெடுத்து 
வற மிளகாய் இல்லாத தக்காளிச் சட்னி தேங்காய் சட்னி இவற்றுடன் பரிமாறவும்.

இலை மற்றும் காய் கிழங்குடன் அவிக்கப்பட்ட  உணவாதலால் இது உடலுக்கு மிகவும் இதமானது.. 

பச்சைப் பயறை தோலுடன் அரைத்திருப்பதால் கூடுதலாக நார்ச்சத்தும் புரதச் சத்தும் கிடைக்கும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

முருகா முருகா
முருகா முருகா
***

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026

சிவராத்திரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மாசி
 ஞாயிற்றுக்கிழமை

இன்று மகா சிவராத்திரி


தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயம் ஆய காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே..2/50
-: ஸ்ரீ திருஞானசம்பந்தர் :-

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95
-: ஸ்ரீ திருநாவுக்கரசர் :-


பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடு இருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே..7/29
-: ஸ்ரீ சுந்தரர் :-


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே..
-: ஸ்ரீ மாணிக்கவாசகர் :-


கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே..
-: ஸ்ரீ பட்டினத்தடிகள் :-

சிவாய
திருச்சிற்றம்பலம்
***

வெள்ளி, பிப்ரவரி 13, 2026

பத்ம மலர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
வெள்ளிக்கிழமை


அகல்யா த்ரௌபதி ஸீதா தாரா மண்டோதரி ததா .
பஞ்சகன்யா ஸ்மரேந் நித்யம் மஹாபாதக நாசனம்.

பழியேதும் இல்லாத
பதுமமலர் போற்றி
அழியாத கன்னிகை
ஐவரும் போற்றி..

ஓம் சக்தி ஓம்
***



வியாழன், பிப்ரவரி 12, 2026

புதுநெல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 வியாழக்கிழமை



இலங்கை
நல்லூர் திருத்தலத்தில்
அறுவடை மகோத்சவம்

காணொளிக்கு
 நன்றி


நற்றுணை வருவாய்
திருவடி சரணம்
நல்லூர் கந்தா
சரணம் சரணம்
***

புதன், பிப்ரவரி 11, 2026

விசாகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 புதன்கிழமை

தை விசாகம்
கடந்த திங்களன்று..


அன்றைய நாள்
அறுபத்து மூவருள் ஒருவரான
திருநீலகண்ட குயவனாரும் அவரது மனைவியாரும் இளமை நலம் எய்தி சிவ தரிசனம் பெற்ற நாள்...

தஞ்சை கரந்தையில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில் திருக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருநீலகண்டர் திருமடத்தில் ஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது..

தீர்த்தவாரியில் கலந்து கொண்டு நீராடும் பேறு எளியேனுக்கும் கிடைத்தது..

இன்றைய பதிவில்
தீர்த்தவாரியின் சில காட்சிகள்..















திருநீலகண்டத்து
குயவனார்க்கடியேன்

ஓம் சிவாய நம
***