ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2025

ஆடிப்பெருக்கு

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 18
ஆடிப்பெருக்கு
ஞாயிற்றுக்கிழமை


அன்னை 
காவிரிக்கு 
அடியேனின் பாமாலை

தங்கி வளம் தழைத்திடவே
தங்க மகள் பெருகி வந்தாள்
மங்கலங்கள் செழித்திடவே
எங்கும் விளைவாகி வந்தாள்..

தமிழ் மூன்றும் தழைத்திடவே
தானுவந்து ஓடி வந்தாள்
அமிழ்தென்று மகிழ்ந்திடவே
ஆனந்தமாய் பாடி வந்தாள்..

மாவிலையும் தோரணமும்
பொலிந்திடவே வருக
மஞ்சளுடன் செங்கரும்பும்
துலங்கிடவே வருக..

பசுமை எங்கும் நிறைந்திட வருக
செழுமை இங்கே சிறந்திட வருக
பகையும் பிணியும் நீங்கிட வருக
பாரில் தமிழகம் ஓங்கிட வருக..

நீரின்றி அமையாத உலகம்  தன்னில்
நின்புகழே எங்கும் துலங்கிட வேண்டும்
நெஞ்சார நின்னை நினைப்பவர் தம்மை
நீயே தாயாகி வாழ்த்திட வேண்டும்..


பெற்று வந்த வளங்களுடன் 
நெல் மணிகள் நிறைவாகி
உற்ற பசி தீர்ந்திடவே
உன் பாதம் சரணம் அம்மா..

காவிரி போற்றுதும்
காவிரி போற்றுதும்..

ஓம் சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2025

வெள்ளி 3

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
மூன்றாம் வெள்ளி


இன்று
இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் 
பாடிய பாடல்

பாடல் : திரு உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை : திரு TK புகழேந்தி

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி
அங்கையற்கண்ணி அன்பு மீனாட்சி
அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி (மங்கலம்)

திங்களைச் சூடிய சிவனுக்குத் துணைவி
செல்வி மீனாட்சி செந்தமிழ்ப் பாவை
திருமணக் கோலம் திகழ்ந்திடும் பூவை (மங்கலம்)

சங்கத் தமிழ் போல் தனித்தவள் சக்தி
தமிழின் சுவை போல் இனிப்பவள் சக்தி
குங்குமம் தருபவள் குலமகள் சக்தி
கும்பிட்டு நினைப்பதைக் கொடுப்பவள் சக்தி (மங்கலம்)


தாமரை போன்ற தலைநகர் நடுவே
தாமரைக் குளத்தைச் சார்ந்தவள் சக்தி
மாமதுரைக் கொரு மாபெரும் சக்தி
மாநிலம் எங்கணும் ஓம் சிவசக்தி (மங்கலம்)


பாடலைக் கேட்பதற்கு -
https://youtu.be/HzHvuUZSrec?si=poGRllZfUjP18Qw0

மீனாட்சித் தாயே போற்றி
சொக்கநாதப் பெருமானே போற்றி
**