சனி, நவம்பர் 23, 2024

சரணம் சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 8
முதல் சனிக்கிழமை 

ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்னம்


லோக வீரம் மஹாபூஜ்யம் 
ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயா நந்தம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் .1

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் 
விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 2

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

மத்த மாதங்க கமநம் 
காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 3

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

அஸ்மத் குலேஸ்வரம் தேவம் 
அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 4

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ 
நித்யம் சுத்த படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் 
சாஸ்தா வஸதி மாநஸே..  5

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா


ஸ்ரீ சாஸ்தா தியான ஸ்லோகம்

பூதநாத சதானந்த
சர்வ பூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ  நம:
              
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..


ஏற்றிடும் விளக்கு திருவிளக்காக 
ஏற்றம் அளித்திடும் ஐயப்பா..

சாற்றிய மாலை சந்தனம் குங்குமம் 
சங்கர மைந்தன் திருவடிக்கே..

போற்றிய சரணம் பொன்மலர் என்றே 
பொற்றிரு வடியில் சாராதோ..

காற்றினில் கலந்து கானக வாசனின் 
திருச்செவி தன்னில் சேராதோ...

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

இன்று 
கார்த்திகையின் தேய்பிறை அஷ்டமி


க்ஷேத்ர பாலகர் என விளங்கும்
ஸ்ரீ வைரவ மூர்த்தி தோன்றிய நாள்..

ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி, வழுவூர்..

விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.. 4/73/6
-: திருநாவுக்கரசர் :-

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஓம் ஹரி ஓம் 
ஓம்  சிவாய நம ஓம்
***

வெள்ளி, நவம்பர் 22, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
பொது


தய்யதன தானத் ... தனதான

துள்ளுமத வேள்கைக் ... கணையாலே
தொல்லைநெடு நீலக் ... கடலாலே

மெள்ளவரு சோலைக் ... குயிலாலே
மெய்யுருகு மானைத் ... தழுவாயே..

தெள்ளுதமிழ் பாடத் ... தெளிவோனே
செய்யகும ரேசத் ... திறலோனே

வள்ளல்தொழு ஞானக் ... கழலோனே
வள்ளிமண வாளப் ... பெருமானே..
அருணகிரிநாதர் -


துள்ளித் திரிகின்ற
மன்மதன்  கை வில்லில் இருந்து 
வருகின்ற மலர்க் கணைகளாலும்

 நெடுந் துயரத்தைத் தருகின்ற
 நீலக் கடல் அலைகளாலும்

 மெதுவாக வந்து கூவுகின்ற
 சோலைக் குயிலாலும்

 காதல் கொண்ட மானைப் போல உருகுகின்ற மனதைத் தழுவிக் கொள்ள மாட்டாயா..

இனிய தமிழில் பாடுகின்ற போது 
மனம் மகிழும் பெருமானே

 குமரேசன் எனத் திருப் பெயர் பெற்ற
 செந்திறலோனே

வள்ளற் பெருமானாம் சிவபிரான் மகிழ்ந்து புகழ்கின்ற ஞானத் திருவடிகளை உடையவனே

வள்ளிக்கு மணவாளன் ஆகிய
முருகப்பெருமாளே..
ஃஃ


முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

வியாழன், நவம்பர் 21, 2024

நல்லுரை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 6
வியாழக்கிழமை


வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் 
இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்..


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், நவம்பர் 20, 2024

நினைவெல்லாம் 6

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 5
புதன் கிழமை


தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் புகுமுக  வகுப்பில் பயின்ற போது தமிழ் உரை நடை வகுப்பை திரு. விவேகானந்தன் அவர்களும் துணை நூலினை திரு. அருளிளங்குமரன் அவர்களும் நடத்தினர்.. 

இருவருமே முதன்மைத் தமிழாசிரியர்கள்..

அப்போதைய (1972) அரசியல்  சூழலில்  புரட்சி எனும் சூறாவளி சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது..

திருச்சி விடுதியில் மாணவர்கள் மிகக் கடுமையாக அடித்து நொறுக்கப்பட்டது அப்போது தான்..

தமிழ் நாட்டில
எங்காவது ஆ ஊ என்றால் இங்கே தஞ்சாவூரில் கல்லூரிக்கு விடுமுறை என்றாகி விடும்..

இருப்பினும் கிடைக்கின்ற நாட்களில் நடத்தப்பட்ட வகுப்புகளில் மனதில் பதிந்தவை இன்றைய பதிவில்..


மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை..
(மனையறம். 73-80)
**
தனித்திருந்த பொழுதில் கண்ணகியைக் கோவலன் வர்ணித்த விதத்தை யார் அறிந்திருப்பர்!?.. 

அமிழ்தினும் இனிதான அந்தப் பொழுது - 
 
இளங்கோவடிகளின் தீந்தமிழ் திறத்தால் இதோ நமது கண்களின் முன்னே!..

அருவியைப் போலும் அமுதத் தமிழ்..

துறவு பூண்ட ஒருவரிடம் இருந்து இப்படியான அழகு எனில் அதுதான் - தமிழ்.


பெண்ணாகி வந்த மாயப் பிசாசு என்றும் ஒரு வர்ணனை இருக்கையில் இளங்கோவடிகள
 மாசறு பொன்னே.. வலம்புரி முத்தே என்று புகழ்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

அது இருக்கட்டும்..

வலம்புரி முத்தே எனபது என்ன நியாயம்? வலம்புரி என்றால் சங்கு தானே?!..

இதற்குத் தான் நுனிப்புல் மேயக் கூடாது - என்பது..

வலம்புரி முத்தே.. எனபதை வலம்புரியே!..  முத்தே!.. என்று பொருள் கொள்ள வேண்டும்..

(யாரும் குறுக்குக் கேள்வி கேட்கும் முன் - தெரிந்ததைச் சொல்லியாயிற்று)


சிலப்பதிகாரத்தில்
மாசறு பொன்னே.. எனும் இப்பாடல் பகுதியைப் படித்த பின்னர் தான் இப்பாடலை அப்படியும் இப்படியும் உரு மாற்றம் செய்து பூம்புகார் எனும் திரைப்படத்தில் வைத்திருந்தது தெரியவந்தது..

வாழ்க சிலம்பு..


அப்போதைய பாடத் திட்டத்தின்படி - அன்று நடத்தப்பட்ட வகுப்புகளில் மனதில் பதிந்த -
திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்..

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கது ஆமே..

படமாடுங் கோயிலில் உறைகின்ற இறைவனுக்கு  ஒன்றை அளித்தால், அது நடமாடும் கோயிலான எளிய மனிதருக்கு  -  வறியவர்க்கு - சென்று சேராது. நடமாடுங் கோயிலான ஏழை எளியவருக்கு அளித்தால், அது படமாடும் கோயில் இறைவனையே சென்று சேரும்..

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை எனும் உயரிய கருத்து  அப்பாடலில்..


உள்ளங்கை நெல்லிக்கனி எனப் பொருள் விளங்கக் கூடிய இன்னொரு இன்தமிழ்ப் பாடல் :

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே.
-: திருமூலர் ;-
**
நினைவெல்லாம் தொடரும்

அமுதே உந்தன் புகழ் வாழ்க

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், நவம்பர் 19, 2024

குதூகலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 4
செவ்வாய்க்கிழமை



காச் மூச் என்ற சத்தத்துடன்
வீட்டின் அருகில் சகஜமாக தத்தித் தத்தி திரிகின்ற பறவை..

பொதுவாக தவிட்டுக் குருவி என்பர்..

மஞ்சள் நிற அலகு  மெல்லிய கால்கள். சின்னதாக கண்கள். தவிட்டின் நிறத்தில் சிறகுகள்.. 




இவற்றின் வகைப்பாட்டியல் பெயர் Jungle Babbler.  

Green Babbler, Yellow  Babbler என இரண்டு வகை..
Yellow  Babbler  
தான் நம் நாட்டில் 
நம்முடன் தத்தித் திரிபவை..

இங்கே எங்கள் வீட்டருகில் தவிட்டுக் குருவிகள் ஏராளம்.. 

விடியற்காலை யிலேயே வந்து விடுவார்கள்... 

குடியிருக்கின்ற வீட்டின் மேல் தளத்தின் வெளிப் புற நடைவெளியில் துளசி கற்பூரவல்லி இருக்கின்றன..

அதைச் சுற்றி ராஜாங்கம்..

சோறு இட்லியை விட - தேங்காய்த் துருவல், ஓமப்பொடி, பிஸ்கட் - என்றால் குஞ்சு குளுவான்களுடன்
குதூகலம்..

வெளியில் வைக்கப்பட்டவை
தீர்ந்து விட்டால் உரிமையுடன் வீட்டுக்குள் எட்டிப் பார்த்து சத்தமிட்டுக் கேட்பது என்று சுதந்திரம்...

பெரும்பாலான சமயங்களில் காக்கைகளும் இவர்களுடன்..

கீழுள்ள படங்கள் 
Green Babbler இனம்... 

இவர்களைப் பற்றி விக்கியில் தெரிந்து கொண்டு இணையத்தில் சேகரித்த செய்திகள் இன்றைய பதிவில்.




இன்றைய
காணொளிகளுக்கு 
 நன்றி


சிறு குடும்பம்
சீரான வாழ்வு
என்றாலும்
கதைக்கு ஆகாது...


அன்பு அன்பு 
அன்பு

எங்களுடன் அவர்களும் அவர்களுடன் நாங்களும் மகிழ்கின்றோம்..


கொக்கின் இடத்தில் மனிதன் ஒருவனை நினைத்துப் பார்க்கவும்.

காக்கை குருவி
எங்கள் ஜாதி
-: மகாகவி :-

ஓம் நம  
சிவாய நம ஓம்
***

திங்கள், நவம்பர் 18, 2024

சோமவாரம் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 3
திங்கட்கிழமை

முதல் சோமவாரம்

சகல சிவாலயங்களிலும்
நூற்று எட்டு
 சங்குகளால் அபிஷேகம்
நடத்தப்படுகின்ற நாள்..


இன்றைய
தரிசனம்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்.,
தஞ்சாவூர்


ஸ்வாமி
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்



தேவர்களுக்கு தஞ்சம் அளித்துக் காத்தருளிய இத்தலத்தில்
குபேரன் வழிபாடு செய்து  மீண்டும் செல்வங்களைப் பெற்றதாக தல புராணம்..









அஷ்ட லக்ஷ்மி
மண்டபத்தில் குபேர தரிசனம்










இத்தலத்தில் 
ஸ்ரீ ஐயப்பனுக்கு நேர் எதிராக நவக்கிரகங்கள்..


ஸ்வாமி அவர்களை அடக்கி ஆள்வதாகவும் தோஷங்களை விலக்குவதாகவும் ஐதீகம்


ஸ்ரீ சிவவாக்கிய சித்தர்
**

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, நவம்பர் 17, 2024

முத்தான முத்து

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 2
ஞாயிற்றுக்கிழமை


நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் 
P. சுசீலா அவர்களின் குரலில் இடம்பெற்ற பாடல்..


 பாடலுக்கான சூழலைக் கேட்டதும்
கவியரசர்
உடனடியாக சொல்லிய பாடலுக்கு அப்போதே இசை அமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள்..


இனிய பாடல்
இன்றைய பதிவுக்கு அழகூட்டுகின்றது..


முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ



சின்னஞ்சிறு சிறகுகொண்ட 
சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து 
சிரித்து வரும் சிரிப்பல்லவோ..



மாவடுக் கண்ணல்லவோ 
மைனாவின் மொழியல்லவோ
பூவின் மனமல்லவோ 
பொன் போன்ற குணமல்லவோ..



வாழாத மனிதரையும் 
வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் 
பேச வைக்கும் தாயல்லவோ..



தாழங்குடை அல்லவோ 
தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ 
வந்தாடும் செண்டல்லவோ..


படங்களுக்கு நன்றி
-: பாரதீய சித்ரகலா :-

1965 - 70 களில் நாட்டில் 
அப்போதைய சூழ்நிலையில்
பரப்பப்பட்டதே சிறு குடும்பம் சீரான வாழ்வு, திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்ற கொள்கைகள்..

அன்றைக்கு குடும்பங்களில்
வறுமை இருந்தது உன்மை தான்... ஆனாலும் வாய்மை இருந்தது. ஒரு சில குறைகள் இருந்தாலும் உறவு முறை என்னும் பலம் இருந்தது.. உற்றார்  என்ற உணர்வு இருந்தது..

இன்றைக்கு ஒன்றும் இல்லை.. 
அநாதரவுகள் தான் மிச்சம்..

அடுத்தடுத்துப் பிள்ளைகள் என்றோ அடுக்கடுக்காகப் பிள்ளைகள் என்றோ இல்லாமல் அன்பிற்கும் ஆதரவிற்குமாக நமக்கு நல் வாரிசுகள் வேண்டும்..

நம் கிளைகள் தழைக்க வேண்டும்..
உறவுமுறைகள் துளிர்க்க வேண்டும்..

இறைவன் நல்லருள் புரிவானாக..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***