வெள்ளி, டிசம்பர் 31, 2021

மங்கல மார்கழி 16

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.. 125
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 16


நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்..16
*
-: ஆழ்வார் திருமொழி :-


ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.. 2155
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - திருக்கோளிலி


இறைவன்
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்


அம்பிகை
வண்டார்பூங்குழலி

தீர்த்தம் - சந்திர தீர்த்தம் 
தலவிருட்சம் - தேற்றாமரம்


சப்த விடங்கத் தலங்களுள்
திருக்கோளிலியும்
ஒன்று..


ஈசன் திருமுடியைக் கண்டதாக நான்முகன் பொய்யுரைத்ததும் அவரிடமிருந்த படைப்புத் தொழில் பறி போய் விடுகின்றது.. பூமியின் சமநிலையும் பாதிப்படைகின்றது..

கவலையுற்ற கிரகாதிபர்கள் ஒன்பது பேரும் ஈசனிடம் முறையிடுகின்றனர்..

நான்முகப் பிரம்மனும்
மனம் வருந்தியவராக இத்தலத்திற்கு வந்து பரமனைப் பணிந்து வழிபாடு செய்கின்றார்..

இதனால் மீண்டும் உயிர்களை சிருஷ்டிக்கும் வரத்தைப் பெறுகின்றார்.. 
 
எனவே ஸ்வாமி
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என வழங்கப்படுகின்றார்..


நவக்கிரக நாயகர்கள் இங்கே  குறையிரந்து நின்றதால் இத்தலத்தில் வக்ரம் இல்லை..
நவக்கிரக மூர்த்திகளை
நேர் வரிசையில்
தரிசிக்கலாம்.. 

எல்லாவித தோஷங்களும்  நீங்கும் என்பது ஐதீகம்..


இப்பகுதியில் வாழ்ந்த குண்டையூர்க் கிழார் என்பவர் ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுக்கு வழங்கிய நெல் மூட்டைகள் ஈசன் அருளால் மலை அளவு ஆனது..

இதைக் கண்டு வியந்த சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருப்பதிகம் பாடித் துதிக்க - ஈசன் தனது கணங்களை அனுப்பி நெல் மலையை திரு ஆரூருக்கு மாற்றி வைத்ததாக வரலாறு..

இந்நிகழ்வு வருடம் தோறும் மாசி மகத்தன்று நிகழ்கின்றது..

இன்றைய பதிவிலுள்ள
ஞானசம்பந்தப் பெருமான்
திருப்பதிகத்தில்  - நமது வழிபாட்டினால் நமது சந்ததியும் சிறப்படையும் என்று குறிப்பிடுவது சிந்தையில் கொள்ளத் தக்கது...

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன் கோளிலிஎம் பெருமானே.. 1/62
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருப்பாடல் எண் - 16


உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.. 230
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
திடீர் மழை என்று
தலைநகர் சென்னையில்
 இயற்கை தனது
சீற்றத்தை மீண்டும்
காட்டியுள்ளது..

நுண்தீக் கிருமியின்
தாக்கமும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது..
மக்கள் இன்னும்
திருந்தவில்லை

நம்மை நாமே
இறைவன் துணையுடன்
பாதுகாத்துக் கொள்வோம்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வியாழன், டிசம்பர் 30, 2021

மங்கல மார்கழி 15


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***

-: குறளமுதம் :-

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.. 114
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 15

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்15
*
-: ஆழ்வார் திருமொழி :-


பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்
செற்றார் படிகடந்த செங்கண்மால் நற்றா
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி
நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.. 2101
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - திரு ஐயாறு


இறைவன்
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
ஸ்ரீ ஐயாறப்பர்


அம்பிகை
ஸ்ரீ தர்மசம்வர்த்தனி
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி


தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - வில்வம்

எண்ணற்ற பெருமைகளை உடைய தலம்..
காசிக்கு நிகரான ஆறு திருத்தலங்களுள் இதுவும் ஒன்று..


சித்திரை விசாகத்தை அனுசரித்து நிகழும்
சப்த ஸ்தானத் திருவிழா
மிகவும் சிறப்புடையது..

அப்பர் ஸ்வாமிகள் திருக்கயிலாய திருக்காட்சி கண்டது இங்கு தான்..
*

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திரு ஐயாறே.. 1/130
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*

-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருகோத்தும்பி
திருப்பாடல் எண் - 15


நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ...
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

புதன், டிசம்பர் 29, 2021

மங்கல மார்கழி 14

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு..106
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 14


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்..14
*
-: ஆழ்வார் திருமொழி :-


மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்டு
 ஆலின் இலைத்துயின்ற ஆழியான் - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று.. 2100
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-

தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
திருக்கருகாவூர்


இறைவன்
ஸ்ரீ முல்லைவனநாதர்


அம்பிகை
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை
ஸ்ரீ கரு காக்கும் நாயகி

தீர்த்தம் ஷீர தீர்த்தம்
தலவிருட்சம்
முல்லைக் கொடி

கர்ப்பம் தரிக்கவும்
கரு நழுவாதிருக்கவும்
திருவருள் புரிந்து
கருவினைக் காத்து
கைகளில் தருபவள்..

குழந்தைப் பேறு வேண்டி
கண்ணீர் சிந்தும்
தம்பதியர்க்கு தாயாகி நிற்பவள்
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை..

கண்ணாரக் காணும் உண்மை இது..

நந்தி கணபதி
முல்லைவன நாதர் மூவரது திருமேனியும் சுயம்பு..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன..
*

முத்தி லங்குமுறுவல் உமை அஞ்சவே
மத்த யானைமறுக உரி வாங்கிய
கத்தை போர்த்தகட வுள்கரு காவூர் எம்
அத்தர் வண்ணம் அழ லும் அழல் வண்ணமே.. 3/46
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருகோத்தும்பி
திருப்பாடல் எண் - 14


கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய்  ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

செவ்வாய், டிசம்பர் 28, 2021

மங்கல மார்கழி 13

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.. 102
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 13


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்
மருதிடைபோய் மண்ணளந்த மால்.. 2099
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
திரு இடைமருதூர்


இறைவன்
ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்
ஸ்ரீ இடைமருதீசர்


அம்பிகை
ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை

தீர்த்தம்
காவிரி, ஐராவணத் தீர்த்தம்
தலவிருட்சம் - மருத மரம்.


இத்தலத்தில்
ஸ்ரீ மூகாம்பிகையின் சந்நிதி
சிறப்புடையது..


எழிலான சுதை நந்தி
மிகப் பெரியது..

காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் திரு இடைமருதூரும் ஒன்று..

வரகுண பாண்டியரது ப்ரம்மஹத்தி நீங்கப் பெற்ற திருத்தலம்..

பட்டினத்தடிகளும் பத்ருஹரியாரும் இங்கு சிலகாலம் இருந்திருக்கின்றனர்..
*

பொழிலவன் புயலவன் புயலியக்கும்
தொழிலவன் றுயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநக ரிடைமருதே.. 1/110
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருக்கோத்தும்பி
திருப்பாடல் எண் - 12


நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

திங்கள், டிசம்பர் 27, 2021

மங்கல மார்கழி 12

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (100)
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 12
 

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்12
*
-: ஆழ்வார் திருமொழி :-


வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தாம்தொழா - பேய்முலைநஞ்சு
ஊணாக உண்டான் உருவொடு பேரல்லால்,
காணாகண் கேளா செவி.. 2092
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

சோழ நாட்டின்
திவ்ய தேசங்களுள் 
ஒன்றாகிய
தஞ்சை 
ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள்
திருக்கோயிலில்
நேற்று மாலை
லட்சார்ச்சனையுடன்
திருக்கல்யாண வைபவம்
நடைபெற்றது..


திவ்ய தம்பதியராகிய
ஸ்ரீ தஞ்சபுரி நாயகி சமேத
ஸ்ரீமந் நாராயண முர்த்தி
சேவை சாதித்த காட்சி..
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்


திருத்தலம்
திருநாகேஸ்வரம்


இறைவன்
ஸ்ரீ நாகேஸ்வரர்
ஸ்ரீ செண்பகாரண்யேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை

தீர்த்தம்
சூரிய புஷ்கரணி
தலவிருட்சம் - செண்பகம்

ஐந்தலை அரவும்
சூரியனும் சந்திரனும்
வழிபட்ட திருத்தலம்

இன்றைய நாளில்
ராகு தலம் என்று
மருவிக் கிடக்கின்றது..

கீழுள்ள படத்தில்
ஸ்ரீ நாககன்னி,
ஸ்ரீ நாகவல்லி உடனாகிய
ஸ்ரீ நாகராஜர்..


இத்திருக்கோயிலின் அருகிலேயே
ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது..

அடுத்த 2 கி.மீ தொலைவில்
ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி
திருக்கோயில்
*

கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சுர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே..2/24
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருக்கோத்தும்பி
திருப்பாடல் எண் - 4


கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. .
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

ஞாயிறு, டிசம்பர் 26, 2021

மங்கல மார்கழி 11

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***

-: குறளமுதம் :-
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.. (96)
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 11 


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை,
இடராழி நீங்குகவே என்று.. 2082
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - பிரமபுரம்
(சீர்காழி)


இறைவன்
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
ஸ்ரீ தோணிபுரத்தீசர்


அம்பிகை
திருநிலைநாயகி
ஸ்ரீபிரஹன்நாயகி

தீர்த்தம் - பிரம்மபுரம்
தலவிருட்சம் - பவளமல்லி

பன்னிரண்டு பெயர்களை உடையது இத்திருத்தலம்.. அவை 1) பிரமபுரம், 2) காழி, 3) வேணுபுரம், 4) புகலி,
5) வெங்குரு, 6) தோணிபுரம்,
7) பூந்தராய், 8) சிரபுரம்,
9) புறவம், 10) சண்பை,
11) கொச்சைவயம்,
12) கழுமலம் - என்பன..

ஆதியில் நான்முகன் வழிபட்ட் தலம்.. ஊழியிலும் பெயராத திருத்தலம் என்பதால் தோணிபுரம்..

ஞான சம்பந்தப் பெருமான்
திருத்தோற்றமுற்ற
திருத்தலம்..

பிரம்ம தீர்த்தக்
கரையில் தான்
சம்பந்தருக்கு ஞானப் பாலூட்டினாள் அம்பிகை..

ஸ்ரீ சட்டநாதர் சந்நிதி விசேஷமானது..
*

எம்பிரான் எனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.. (2/40)
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
- திருக்கோத்தும்பி -

திருப்பாடல் எண் - 1


பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, டிசம்பர் 25, 2021

மங்கல மார்கழி 10


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்..(84)
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 10


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


ஊரிலேன் காணி இல்லை
உறவுமற் றொருவர் இல்லை
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா
அரங்கமா நகரு ளானே..900
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
திருமறைக்காடு (வேதாரண்யம்)


இறைவன்
ஸ்ரீ திருமறைக்காடர்
அம்பிகை
ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள்

தீர்த்தம் - மணிகர்ணிகா
தலவிருட்சம் - வன்னி..

அம்மையப்பனின்
திருமணக் கோலத்தினை
அகத்திய மாமுனிவர்
தரிசித்த திருத்தலம்..

இத்தலத்தில் வழிபாடு செய்த ஸ்ரீ ராமபிரான் கோடியக்கரையில் நின்று இலங்கையை நோக்கினன் என்பர் ஆன்றோர்..


தெற்கு நோக்கிய
எழிலார்ந்த துர்கை.
யம பயம் தீர்ப்பவள்..
வரப்ரசாதியானவள்..


அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப் பெருமானும் ஒரு சேர நின்று வழிபட்ட திருத்தலங்களுள் இதுவும் ஒன்று..

கோளறு பதிகம் பிறந்த திருத்தலம்..
இங்கிருந்தே 
ஞானசம்பந்தப் பெருமான் பாண்டிய நாட்டிற்குப் புறப்படுச் சென்றார்..
*
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே..(6/23)
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருப்பள்ளியெழுச்சி

திருப்பாடல் எண் - 10


புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 
*
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 19 - 20


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்..

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்..

இந்த அளவில்
ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான்
செய்தருளிய
திருப்பள்ளியெழுச்சியும்
திருவெம்பாவையும்
நிறைவடைகின்றன..

ஓம்
சிவாய
திருச்சிற்றம்பலம்
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ