தான் வணங்கிய ஈசனுக்கு அருகில் கொண்டு போய் காளையை வைத்தான்...
கடவுளை வணங்கியதோடு காளையையும் வணங்கினான்...
தனது வாழ்க்கைக்குத் துணையாய் இருந்த அத்தனைக்கும் வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினான்..
கல்லை வணங்குகின்றான்...
காற்றை வணங்குகின்றான்..
மண்ணை வணங்குகின்றான்... மரத்தை வணங்குகின்றான்...
மாட்டையும் வணங்குகின்றான்... காட்டுமிராண்டி!..
- என்று கதைத்து வைத்தார்கள் கருத்தழிந்தவர்களாய்!....,.
இப்படி இவன் இவற்றைச் சிறப்பித்து வணங்கி
அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்திராவிட்டால் -
கருத்தறிந்து கதைத்தவர்களும் காட்டுமிராண்டிகளாகவே இருந்திருப்பார்கள்..
வேளாண்மையும் தாளாண்மையும் தான் தமிழனின் முதுகெலும்பு...
அதனுள் ஓடும் உயிர் நாளம் தான் கால்நடைச் செல்வம்!..
- என்பதைப் புரிந்து கொண்ட ஆதிக்க வெறி பிடித்த அந்நியர்கள்
உயிர் நாளத்தை அறுத்து முதுகெலும்பை முறிக்க முனைந்தார்கள்..
அதிலே வெற்றியும் கண்டார்கள்..
அதன் விளைவாக -
இன்றைக்கு கிராமங்களில் கூட
கால்நடைகள் அறுகிப் போயின...
பாரம்பர்யங்களை மாற்றியதால்
கழனிகளும் களங்களும் கருகிப் போயின...
கால்நடைகளின் அழிவினால்
இயற்கை எருவிற்குப் பஞ்சமானது..
இரசாயனங்களைக் கொட்டியதால் வயல் வெளியும் பாழானது...
நாட்டுப் பசு ஒரு வேளைக்கு உழக்கு பால் கொடுப்பதே அரிது..
ஆனால், அந்த உழக்குப் பாலின் துளிகள் அத்தனையும் அமுதமாக இருந்தன..
காலம் மாறிய சூழ்நிலையில்
நாட்டுப் பசுவுக்கு மாற்றாக செயற்கை முறையில்
கருவூட்டப்பட்ட பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டன...
இதன்பின் -
ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த
நாட்டுப் பசுக்களும் செயற்கைக் கருவூட்டலுக்கு ஆளாயின...
அதனால் பொலி காளைகளுக்கு வேலை இல்லாமல் போனது..
ஏறு எனப்பட்ட காளைகள்
தமது இணைகளின் முகங்களைப் பாராமலேயே -
கொலைக் களத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டு
வீட்டுச் சட்டிக்குள் கொதித்து அடங்கின...
காளையின் தழுவல் இல்லாமல்
கருவுற்ற பசுக்கள் - கன்றினை ஈன்ற பின்
குடம் குடமாக பாலைக் கொடுக்கும் - என்று எதிர்பார்த்தால்
ஏமாற்றமே மிச்சமாகப் போனது பேராசைக்காரர்களுக்கு...
அத்தோடு விடாமல் பால் சுரப்புக்கு என்று ஒரு மருந்தைக் கண்டுபிடித்து
கறப்பதற்கு முன்பாக அந்த மருந்தை ஊசி மூலம் பசுவிற்குச் செலுத்தி
தனது ஆசையைத் தணித்துக் கொண்டான் மனிதன்..
இப்போதெல்லாம் மாடுகளின் உலர் தீவனத்திலேயே
பால் பெருக்கத்துக்கான மருந்துகள் கலக்கப்படுவதாக சொல்கின்றார்கள்...
இப்படி கிரியா ஊக்கிகள் மூலமாகப் பெறுவதனால் தான்
தமிழகத்தில் இரவு பகல் எந்நேரமும் பால் தடையின்றி
கடைகளின் குளிர் சாதனப் பெட்டிக்குள் கிடக்கின்றது...
சரி.. இந்தப் பால் நல்லது தானா?..
இல்லை..
இந்தப் பாலே கிரியா ஊக்கிகளின் மூலமாகப் பெறப்பட்டது..
இப்படிப் பெறப்பட்ட பாலின் கட்டமைப்பும்
இரசாயனங்களின் மூலமாக மாற்றப்பட்டு விடுகின்றது..
ஒருகாலத்தில் பாலைக் காய்ச்சி
உறையூற்றி தயிராக்கி
அதைக் கடைந்து அதிலிருந்து
வெண்ணெயையும் மோரையும் பிரித்து
அந்த வெண்ணெயை உருக்கி
நெய்யாக்கினார்கள்..
ஒரு வீட்டில் வெண்ணெயை உருக்கினால் அந்தத் தெருவே மணக்கும்...
சர்.... சர்... சர்... - எனத் தயிரைக் கடைவதனால் எழுந்த சத்தத்துடன்
நறுமணமும் எழுந்து தயிர் கடைந்த ஆய்ச்சியர்களின் மீது படிந்திருந்தது!..
வாச நறுங்குழல் ஆய்ச்சியர்!.. - என்கின்றாள் சூடிக் கொடுத்த சுடர்க்கோடியாள்...
இன்றைக்குக் கடைகளில் விற்கப்படும்
செயற்கை நெய்யில் மணம் என்பதே இல்லை..
பாட்டில்களில் அடைபட்டிருக்கும் நெய்யைப் போட்டுக்
கொளுத்தினால் கூட நறுமணம் கமழ்வதில்லை...
நெய்யில்லா உண்டி பாழ்!.. - என்றார் ஔவையார்..
ஔவையாரை விட அறிவாளியாகிய
இன்றைய நவீன மருத்துவம்
நெய்யை நினைத்துக் கூடப் பார்க்காதே!.. - என்கின்றது..
இதிலிருந்தே உண்மையினை உணர்ந்து கொள்ளலாம்...
ஆயிரம் ஆயிரம் டன் கணக்கில்
ஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பாவிலும்
வெண்ணெயையும் நெய்யையும் தயாரித்து
அவற்றை உலகின் பல நாடுகளுக்கும்
ஏற்றுமதி என - அனுப்பி வைக்கின்றார்கள்..
இவை நல்லவை தானா?..
இவற்றைக் கொண்டு தயாராகும் உணவு வகைகளை நாளும் உண்பவர்களின் கதி!?...
வீட்டில் கால்நடைகள் இல்லாவிட்டாலும் அவற்றின் நலனுக்காக பொங்கல் வைத்து விளக்கேற்றி வேண்டிக் கொள்வோம்..