காவேரீ புஷ்ப நகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..
சேர நாட்டில் கொடுக்கப்படும் மரியாதையும் மகத்துவமும்
நம்நாட்டில் கண்ணகிக்குக் கொடுக்கப்படுகின்றதா?...
- என்ற வினாவினை முந்தைய பதிவினில் வைத்திருந்தேன்..
கருத்துரையில் ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள்
மதுரை கோவலன் பொட்டல் , ஸ்ரீ செல்லியம்மன் கோயில் பற்றி எழுதியிருந்தார்கள்...
ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் பூம்புகாரை அடுத்த மேலையூரில் உள்ள கண்ணகி கோயிலைப் பற்றிக் குறித்திருந்தார்கள்...
ஸ்ரீமதி வல்லி சிம்ஹன் அவர்கள்
தனிப்பதிவு ஒன்றினை தங்கப்பதுமை படப் பாடலுடன்
வழங்கியிருந்தார்கள்...
அவர்களுக்கெல்லாம் அன்பின் நன்றி..
அவர்கள் சொல்லியிருந்த செய்திகளை நான் அறிவேன்..
என்றாலும் எனது கேள்வியின் நோக்கம் -
உணர்வு பூர்வமாக கற்புக்கரசியைக் கொண்டாடி
நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்குத் தலைப்படுகின்றதா - தமிழகம்?..
- என்பது தான்!...
1964 ல் பூம்புகார் என - கண்ணகி வரலாறு திரைப்படமாக்கப்பட்டபோது
திரைக்கதை ஆசிரியர் அவரது விருப்பத்துக்கு காவிய நிகழ்வை மாற்றியிருந்தார்...
பழுதடைந்த சிலம்பினை பொற்கொல்லரிடம் ஒப்படைக்கும்
அரசு ஊழியனே சிலம்பினைக் கையாடல் செய்து நடத்தை கெடுவது
போல தீர்க்க தரிசனத்துடன் இருக்கும் அந்தக் காட்சி..
அது போகட்டும்!..
1969 ல் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகு
1975 ல் காவிரிப்பூம்பட்டினத்தில் - வெகு ஆடம்பரமாக சிலப்பதிகாரக் கலைக்கூடம் திறந்து வைக்கப்பட்டது...
பாவை மன்றமும் இலஞ்சி மன்றமும் நெடுங்கல் மாடமும் உருவாகியிருந்தன...
காவிரிப் பூம்பட்டினத்தைப் பார்த்திருக்கியாடி?..
கண்ணகி பொறந்தது எங்க ஊருதான்டி!...
- என்று, கவியரசர் திரைப்பாட்டு ஒன்றில் கேட்டிருப்பார்..
அப்படிக் கேட்டது 1964 ல்..
நான் முதன்முதலில் பூம்புகாருக்குச் சென்ற ஆண்டு 1981..
அப்போது கூட
இந்தக் கலை மன்றங்கள் எல்லாம் பளிச் என்று தான் இருந்தன...
அதற்குப் பின் வந்த அரசு
திராவிடத்தைக் காப்போம் என்று
தோள் தட்டிக் கொண்டாலும் பூம்புகாரைக் கை விட்டது...
M.G.R. ஆட்சிக்குப் பின் மீண்டும்
கலைஞர் ஆட்சி பீடத்தில் அமர்ந்த போது பூம்புகார் பொலிவு பெற்றதா?..
தெரியவில்லை...
அதற்குப் பின் வந்த அரசும் அப்படியே...
முழுதாகவே பூம்புகாரைக் கை விட்டது...
சரி.. சரி.. நமக்கெதற்கு ஊர்வம்பு?...
சென்ற ஆண்டில் ஒருநாள் -
வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடவூர், திருவெண்காடு ஆகிய தலங்களைத் தரிசனம் செய்து வருவதற்குப் புறப்பட்டபோது இடையில் பூம்புகாரும் சேர்ந்து கொண்டது...
திருக்கடவூரில் தரிசனம் முடித்தபோது மதியமாகி விட்டது..
திருவெண்காடு நடை திறக்கப்படும் நேரம்
உத்தேசமாக மாலை நான்கு மணி...
இடைப்பட்ட நேரத்தைக் கழிப்பதற்கு - அருகாமையில் பூம்புகார்...
இப்படியான பயணத் திட்டத்துடன்
வழியில் சிறு உணவகம் ஒன்றில் மதிய உணவை முடித்து விட்டு
இதற்கு மேல் - இதோ நேர்முக வர்ணனை...
சோழ மண்டலத்தில் தொன்மை மிக்க நகர்களுள் ஒன்று....
கி.மு. ஆறு முதல் கி.பி. பன்னிரண்டு வரை சிறந்து விளங்கியதாகக் குறிக்கப்படும் துறைமுக நகர்...
பழந்தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை முதலான நூல்களிள் புகழ்ந்து பேசப்படுவது...
மேலை நாடுகள் பலவற்றுடன் ஈழம் சீனம் முதலான நாடுகளுடனும் வாணிகத் தொடர்பில் சிறப்புற்று விளங்கிய நகரம்...
ஆழிப் பேரலையால் கடலுள் ஆழ்ந்த நகரம்...
இதெல்லாம் அங்கே எழுதி விவரமாக வைத்திருக்கின்றார்கள்..
ஆனாலும் அவற்றை நின்று படிக்கத்தான் எவருக்கும் நேரம் இல்லை...
பூம்புகாரைச் சென்றடைந்ததுமே பெயரளவுக்கு
ஒரு நிழல் கூரையுடன் பேருந்து நிலையம்...
அங்கிருந்து நேராக அரை கி.மீ., தொலைவில் கடற்கரை...
வழியின் இருபுறமும் அகற்றப்படாத பல்வேறு குப்பைகள்...
சாலையின் தென்புறம் சற்றே உட்புறமாக
ஸ்ரீசீதளா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்...
அம்மனைத் தரிசிக்கச் சென்றோம்...
சப்த கன்னியர்.. ஆனாலும் அறுவர் தான் அலைபேசியின் விழி வழியே... |
அம்பிகையின் தரிசனம் கிடைத்தது...
கடற்கரைக்குச் செல்லும் வழியிலேயே
வலப்புறத்தில் கடலடி அருங்காட்சியகம்..
நாலு மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்றார்கள்...
அதைக் கடந்ததும் சிலப்பதிகார கலைக்கூடம்..
அதுவும் பூட்டிக் கிடந்தது..
சிலப்பதிகாரக் கலைக்கூடத்தின் அருகில்.. |
என்ன இது.. வெறும் பாட்டிலா!... |
ஒரு துளி கூட மிச்சம் வைக்கலையா!?.. |
எதை நோக்கிப் பயணம்!?.. |
எதற்காக ஆர்ப்பரிக்கின்றது கடல்?... |
வடபுறமாக பாவை மன்றம் - அடர்ந்த புதர்களுக்குள்...
அப்படியே நேராக நடந்தால் - காவிய நாயகி கண்ணகி...
கடலை நோக்கிய வண்ணமாக நின்று கொண்டிருக்கிறாள்...
இடது புறமாக சிறு தடாகத்துடன் கூடிய இலஞ்சி மன்றம்...
அந்த மதிய வேளையிலும் - பூம்புகார்க் கடற்கரையில்...
தலையில் துணியைப் போட்டுக் கொண்ட இளம் பெண்கள்...
பரட்டைத் தலையுடன் இளந்தாடி இளைஞர்கள்...
பெரும்பாலானோர் ஏதோ ஒரு சுமையைச் சுமந்தபடி
அந்த வெயிலில் - வெட்ட வெளியில் அலைந்து கொண்டிருந்தனர்....
இணை இணையாக வருகின்ற வாலிப வயதினர்
அழகின் மன்றமாக உருவாக்கப்பட்டிருக்கும் பாவ மன்றத்தின் பின்னால் அடர்ந்திருக்கும் கருவைக் காட்டுக்குள் மறைந்து விடுகின்றனர்...
இலஞ்சி மன்றத்தின் கிழக்காக அமைக்கப்பட்டுள்ள பார்வை மாடத்தின் வளைவான படிக்கட்டுகளில் ஆணும் பெண்ணுமாக!..
பதிவின் படங்கள் சிலவற்றை உற்றுக் கவனித்தால்
பட்டப்பகலில் நடக்கும் ஒழுக்கக்கேடுகள் புலனாகும்...
பட்டப்பகலில் நடக்கும் ஒழுக்கக்கேடுகள் புலனாகும்...
இவற்றையெல்லாம் இப்படிக் கூற வேண்டிய அவசியம் இல்லை...
ஆனாலும் -
அங்கு சென்றதும் கண்ணில் தென்பட்ட காட்சிகள் இவைதான்!..
நெடுங்கல் மாடம் |
கடற்கரை ஓரமாக தென்புறம் கொஞ்ச தூரம் நடந்தால் நெடுங்கல் மாடம்...
அங்கிருந்து சற்று தூரத்தில் புதிய கலங்கரை விளக்கு...
அதற்கு அப்பால் காவிரியின் முகத்வாரம்...
அதையொட்டி மீனவர் குடியிருப்புகள்...
கடற்காற்று இதமாக இருந்தாலும் வெயில் அதிகம்...
அதுமட்டுமல்லாமல் நெடுங்கல் மாடத்தின் படிக்கட்டுகளிலும்
மனதை நோகடிக்கும்படியான காட்சிகள்...
நெடுங்கல் மாடத்தின் தூண்களுக்குப் பின்னால் அநாகரிக சேட்டைகள்..
நெடுங்கல் மாடத்துடன் திரும்பி விட்டோம்..
அந்தப் பக்கம் கலங்கரை விளக்கிற்குச் செல்லவில்லை...
அங்கிருந்து திரும்பி நடந்து - இலஞ்சி மன்றத்தின்
பார்வை மாட படிக்கட்டுகளுக்கு அருகே சென்றபோது
ஏனடா.. இங்கு வந்தோம்?... - என்றிருந்தது...
இலஞ்சி மன்றமும் பார்வை மாடமும் |
இலஞ்சி மன்றமும் - தடாகமும் |
இளையோரின் அடாத செயல்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது...
ஆதி புகார் நகரில் - நோயாளர்கள் இறங்கிக் குளித்தால்
அவர்தம் பிணியை நீக்கும் அற்புதத் தடாகம் ஒன்று இருந்ததாம்...
அதன் நினைவாக அமைக்கப்பட்டது தான்
இலஞ்சி மன்றத்தின் எதிரில் இருக்கும் தடாகம்..
ஆனால் அந்தத் தடாகத்தின் அவல நிலை - இதோ கீழே!..
குளத்தில் கிடக்கும் குப்பைகள் |
அந்தத் தடாகத்தில் எப்போதோ தண்ணீர் இருந்திருக்கலாம்...
தற்போது பழுதான குழாய்களின் கசிவினால் சிறிதளவு நீர் தேங்கி
அதில் குப்பை கூளங்கள் தாராளமாகக் கிடந்தன...
தடாகத்தின் கரையைச் சுற்றி அழகழகாக யானை சிற்பங்கள்...
நடை தளத்தில் எழிலான சிற்பக் கோலங்கள்...
நடை தளத்தில் சிற்பக் கோலங்கள் |
அங்கிருந்து விலகி -
பாவை மன்றத்துக்கு வந்தால் அங்கேயும் அப்படியே!...
பாவை மாடத்துப் பதுமை |
கலையழகு கொஞ்சும் கவினுறு சிற்பங்கள் எல்லாத் தூண்களிலும்...
ஆனாலும் பறவைகளின் எச்சங்களுடன் அவலத்தின் உச்சத்தில்!..
பாவை மன்றத்தைச் சுற்றிலும் குப்பைக் கூளங்கள்...
துப்புரவு என்பதையே அறியாதிருந்தது - அந்தப் பகுதி..
அதையும் மிஞ்சியதாக இளங்காமுகர்கள் -
அந்தப் புதர் இடுக்குகளில்...
காரைக்காலை அடுத்துள்ள ஊரிலிருந்து இளஞ்சிறார்களை சுற்றுலா அழைத்து வந்திருந்திருந்த ஆசிரியைகள் நிலை குலைந்து - ...
அவசர அவசரமாக பிள்ளைகளுடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்...
மனம் வருந்தியது... என்ன செய்வது?.. எல்லாம் காலத்தின் கோலம்!...
இன்றைய பதிவில் நெடுங்கல் மாடம் மற்றும் இலஞ்சி மன்றம்
ஆகிய இடங்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன......
பாவை மன்றத்தின் படங்கள் தொடரும் பதிவுகளில்...
ஆகிய இடங்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன......
பாவை மன்றத்தின் படங்கள் தொடரும் பதிவுகளில்...
நல்லன எல்லாம்
நலங்கொண்டு வாழ்க
ஃஃஃ