வெள்ளி, நவம்பர் 30, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 06

மகிஷியின் தோற்றம்..

தனக்கு முன்பாக வந்தமர்ந்த லீலாவைக் கூர்ந்து நோக்கினார் -
அசுர குருவாகிய சுக்ராச்சார்யார். 

ஆதியில் இருந்தே அவரும்
என்னவெல்லாமோ - செய்து பார்க்கின்றார் -
அசுர குலத்தின் மேன்மைக்கு என்று!..

ஆனால் - அசுரர்கள் அவர்களுடைய அடாத செயல்களினால் -
அவர்களுக்கே எதிரியாகி விடுகின்றார்கள்!..

சொல் மகளே!..
- கனிவுடன் அவளுடைய குறையைக் கேட்டார் - சுக்ராச்சார்யார்.


குருவே!.. என் நிலைமை சிக்கலானது...
நான் காலவ மகரிஷியின் மகளும்
தத்த மகரிஷியின் பத்னியுமான - லீலா!..
நான் எந்தத் தவறும் செய்யவில்லை...

வாழ விரும்பினேன் - வாலிபம் இருக்கும் போதே!..
ஆனால், பிடிவாதமாக மறுத்தார் - என் கணவர்...

வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது... அநித்யமானது...
அதனால், புலனறிவு இருக்கும் போதே -
புலன்களை அடக்கி - புண்ணியத்தைத் தேடவேண்டும்...
எனவே - வானப் பிரஸ்தமே நன்று என்றார்!...  

சொல்லுங்கள் ஸ்வாமி!..
போகமும் ஒருவகையில் யோகம் தானே!..
போகத்தின் வழியே - யோக நிலை எய்தலாகாதா?..
நெய்யை விட்டு அக்னியை அவித்தார் யாரும் உண்டா!..
ஆசைகளை அடக்கி அழித்து விட்டு வா!... 
- என்றா  அமரலோகம் கூறுகின்றது?..
அந்த இந்திரனே - போகங்களுக்கு அதிபதி அல்லவா!..

வாழ்வதற்காகத்தானே -  வாலிபத்தை வரவு வைத்தான் ஈசன்!..
சாமான்ய மனிதர்களைப் போல - மகா முனிவர்களும் கூட
மனை மங்கலம் கண்டவர்கள் தானே!...


மனிதர் என்ன - தேவர் என்ன!.. 
புல்லும் பூச்சியும் பறவையும் மிருகமும் -
தாம் பெற்ற பேறு என்று தமக்கு விதிக்கப்பட்டவாறு
கொஞ்சி மகிழ்ந்து கூடிக் குலவி வாழவில்லையா?...'

வீணே மனதை விறகாக்கி
வெறுந்தரையில் -  யோகம் என்று அமர்ந்த நிலையில்,
அந்தக் காமவேள் எய்யும் பூங்கணைகளால்
தேகம் பற்றிக் கொண்டு எரியும் போது - 

அவர்கள் உருண்டு வந்து விழுந்த இடம் -
பெண்மையின் காலடியில் தானே!..


நீ சொல்வது எல்லாம் சரி.. மகளே!..
ஆனாலும் - காமத்தைக் கொன்று -
காலத்தையும் வென்றவர்களை நீ அறிய மாட்டாயா?..

காமனை வெல்வதாய்க் கூறி கரியைப்
பூசிக் கொண்டவர்களையும் அறிவேன் ஸ்வாமி!..

என்னுடைய கேள்வி எல்லாம் -
இல்லறத்துடன் கூடிய துறவறம் இனிக்குமா?.. கசக்குமா?..
வாலிபம் என்பது  - என் தவறா ஸ்வாமி?.. விடை கூறுங்கள்!..

மகளே!.. இல்லறம் துறவறம் - இவை இரண்டும் ஒன்றாகாது...
இரு நிலையின்  அடிப்படை தர்மங்களும்  வெவ்வேறானவை!.. 
அவற்றை, உன் கணவன் -  உனக்குப் புரியும்படியாக
விளக்கி இருக்க வேண்டும்!..

ஆனால், அவர் என்னை விலக்கி விட்டாரே!..
என்னை விட்டு விலகி விட்டாரே!..
மனம் அடக்கி வாழாத நீ மகிஷியாகப் போ!..
- என்று சபித்து விட்டாரே!..

நிலைமை சிக்கலாகத் தான் ஆகி விட்டது!..
- சுக்ராச்சார்யாருக்கும் மனம் வலித்தது...

தன்னிடம் இருந்து -
சஞ்ஜீவினி மகா மந்த்ரத்தினைக் கற்க வேண்டும் என,  
தேவ குருவின் மகன் கசன் வந்ததையும்,
தன் மகள் தேவயானி அவனிடம் மனம் பறி கொடுத்ததையும்
கடைசியில் அது மகா சோகமாக முடிந்து போனதையும் எண்ணி நெகிழ்ந்தார்..


நானும் பதிலுக்கு சாபம் கொடுத்து விட்டுத்தான் வந்தேன்..
என்னை அடையாமல் - உன்னை நீ அறிய முடியாது!..
என் மனதை அறிந்து வாழாத நீயும் மகிஷமாகப் போ!.. - என்று!..

சரி.. மகளே!.. மனதைத் தேற்றிக் கொள்...
இப்போது உனக்கு என்னால் ஆக வேண்டியது என்ன?..

வையகத்து மாந்தருக்கு வரமான வாலிபம் -
எனக்கு மட்டும் சாபமாகி விட்டது!..
பார்ப்பவர்கள் எள்ளி நகையாட பரிதவித்து நின்றேன்!..
என்னுடைய சாபம் பலிக்க வேண்டும்...
என் கணவன் என்னைத் தேடி வர வேண்டும்...
என்னுடன் கலந்து கரையேற வேண்டும்..
அதுவரைக்கும் - எனக்கொரு பாதுகாப்பு வேண்டும்!..

வானகமோ வையகமோ
பெண்மைக்கு எவ்விடத்திலும்
இன்றைய சூழ்நிலையில்
பாதுகாப்பு இருப்பதாகத் தெரியவில்லை...
சிக்கலான இவ்வேளையில்
எனக்கு நீங்கள் தான் அடைக்கலம் தந்தருள வேண்டும்!.. 

- என்று பணிந்து நின்றாள்.

தான் இயக்காமல்  -
நாடகம் அதுவாகவே இயங்குவதை -
சுக்ராச்சார்யார் புரிந்து கொண்டார். 


அம்பலத்தரசன் அம்மையுடன் ஆடுகின்றான்...
அவனே இந்த அகிலத்தையும் ஆட்டுவிக்கின்றான்...
அவர்தம் திரு உள்ளத்தை யார் அறியக்கூடும்?..

பொன்னம்பலம் மேவிய புண்ணிய மூர்த்தி,
பூங்கொடியாளுடன் கூடி - புதிதாய் நடத்தும் நாடகத்தில்
நாம் - நமது கடமையைச் செவ்வனே செய்வோம்!..
- என்று மனம் தெளிந்தார் - சுக்ராச்சார்யார்...

கமண்டல நீரைக் கையில் எடுத்தார்... 
கண்களை மூடி - ஸ்ரீ பஞ்சாட்சரத்தைத் தியானித்தார்...

ஸ்வாமி!.. என் மனமும் உடலும்
ஏதோ .. ஏதோ.. ஒரு மாறுதலுக்கு ஆளாகின்றன...
என் மனம் தடுமாறுகின்றது... என்னைக் காப்பாற்றுங்கள்!..
- என்றவளாய் மயங்கிச் சரிந்தாள் - லீலா...

அந்தத் தருணத்தில் -
கையில் வார்த்த கமண்டல நீரை மந்த்ர ஜபத்துடன்,
மயங்கிக் கிடந்த லீலாவின் மீது தெளித்தார் - சுக்ராச்சார்யார்...

அடுத்த சில விநாடிகளில் -
நடந்ததென்ன!?..

தொடரும் பதிவுகளில் காணலாம்...
***

ஸ்ரீ ஹரிஹர சுதனே!..
சரணம்!.. சரணம்!..

வியாழன், நவம்பர் 29, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 05

ஸ்ரீ பேச்சியம்மன் திருத்தோற்றம்..

ஸ்ரீ வீரமாகாளரால் தண்டிக்கப்பட்ட அஜமுகி -
அழுது புலம்பியவளாக - 

அந்த நிலையிலும் தன் பிழையினை எண்ணி வருந்தாமல் - 
வீரமாகாளரையும், அவரைச் சார்ந்த தேவர்களையும்
அழித்து ஒழித்து விடுவதாக சூளுரைத்தபடியே - 

அண்ணனாகிய சூரபத்மன் வீற்றிருக்கும்
வீரமகேந்திரபுரத்தை நோக்கி  - தனது தோழி துன்முகியுடன் விரைந்தாள்...


இங்கே சீர்காழியில் -
தனக்கு நேரிட்ட இடரைக் களைந்து
தன்னைக் காத்தருளிய ஸ்ரீவீரமாகாளரை
வலம் வந்து வணங்கி நின்றாள் - இந்திராணி!.. 

பெருகிய நன்றி உணர்வில் -
வீரமாகாளரின் திருவடிகளை கண்ணீர்ப் பூக்களால் அர்ச்சித்தாள்...

ஸ்ரீ வீரமாகாளரும் புன்னகைத்தபடி,

அம்மையே!.. அஞ்சற்க!..
இனி எந்தத் துன்பமும் உம்மை நெருங்காது...
மும்மைக்கும் முன்னின்று - தேவதேவனாகிய
ஸ்ரீ ஹரிஹரசுதன்  காத்து அருள்வார்!..
எவ்வித அச்சமும் இன்றி சிவபூஜையைத் தொடர்வீராக!.. 

- என்று ஆறுதல் கூறியபடி - தன்னுரு கரந்தார்...

இத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த தேவர்கள் -
வந்ததே நமக்கு ஒரு விடிவு காலம்!.. - என்று, ஆனந்தக் கூத்தாடினர். 

இந்த அற்புதத்தை இந்திரனிடம் சொல்ல வேண்டும்!..
என - கயிலை நோக்கி விரைந்தார் - சர்வலோக சஞ்சாரியான நாரதர்...

நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து கொண்ட இந்திரன் - ஒடோடிச் சென்று, 

ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீபுஷ்கலா தேவியருடன் வீற்றிருந்த
ஸ்ரீஹரிஹரசுதனின் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து வணங்கிக்
கண்ணீர் உகுத்தான்...


என் ஐயனே!.. என் அப்பனே!..
வார்த்தை ஏதும் இன்றித் தடுமாறுகின்றேன்...
எப்படி நன்றி சொல்வேன் ஐயா!..
உணர்ச்சிப் பெருக்கினால் என் நா தடுமாறுகின்றதே!..
ஆனந்தக் கண்ணீர் - அந்த கங்கையையும் மீறுகின்றதே!..
பெருமானே!.. எளியோரைக் காத்தருளும் ஏந்தலே!..
எங்கள் குலம் காத்து நின்ற ஸ்வாமி!..
அனாத ரட்சகனே!.. ஆபத்பாந்தவனே!..

அபயம் என்று நாங்கள் அலறிய போது -
ஆலகால விஷத்தையும் அருந்தி எம்மைக் காத்தருளினார் -
ஸ்ரீ பரமேஸ்வரன்!..

ஆதிமூலமே என்று அங்கே யானை அலறிய போது -
அஞ்சேல் என்று ஆட்கொண்டருளினார் - ஸ்ரீ ஹரி நாராயணன்!..

அத்தகைய அருட்பெருஞ்சோதிகளுக்கு
உள்ளிருந்து அவதரித்த ஆனந்த ஜோதியே!..
உன்னை அடைந்தார்க்கு ஏதுமில்லை - இடர்!..

என்னையும் தாங்கள் பணி கொண்டருளவேண்டும்!..
தங்கள் திருவடிகளுக்குச் சேவை சாதிக்கும் பாக்கியத்தை
எளியேனுக்குப் பிரசாதிக்க வேண்டும்!..

- என்று துதித்தவனாய் -
ஐயனின் திருவடிகளில் தலைவைத்துக் கிடந்தான் தேவேந்திரன்.

ஸ்ரீ ஹரிஹரசுதன் புன்னகைத்தார்.

தேவேந்திரா!..
எம்மைத் தஞ்சமடைந்தபின்
உனக்கொரு தாழ்வில்லை...எழுந்து நில்!..
எம்மை வந்தித்த போது -
ஐயனே!.. அப்பனே!..- என்று விளித்தாய்!..

அவ்வண்ணமே -
நாம் ஐயப்பன் எனும் திருநாமம் கொண்டு
கலியுகத்தில்- பூவுலக மக்களுக்கு இரங்கி -
அருள வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது...
அப்போது உன்னையும் ஆட்கொண்டருள்வோம்!..

- என்று திருவாய் மலர்ந்தருளினார்... தீர்த்தமும் திருநீறும் பிரசாதித்தார்.

பூர்ண புஷ்கலா காந்தனே சரணம்!.. பூமிப் பிரபஞ்சனே சரணம்!..

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து அருள வேண்டும் பெருமானே!..  

- என்று வேண்டிக் கொண்ட இந்திரன் -
ஐயனின் சந்நிதானத்திலிருந்து பிரிய மனம் இல்லாதவனாக - இந்திராணியைச் சந்திக்க விரைந்தான்...

அதன்பிறகு -
ஈசனின் திருவிழிகளில் இருந்து -
முன்னமே முளைத்தெழுந்த ஜோதியாய் -
அறுமுகச் செவ்வேள் உதித்தெழுந்து -
அவுணர் குலத்தின் வேரறுத்தருளினான்.

அச்சமும் அல்லலும் அகன்றவராய் -
தேவர்கள் களித்திருந்த வேளையில் -
மீண்டும் ஒரு புயல் - அமராவதியை நோக்கி வந்தது -
மகிஷன் எனும் பெயரில்!.... 


மகிஷனையும் அவன் கூட்டத்தாரையும்
அன்னை பராசக்தி ஸ்ரீ துர்க்கையாய் எழுந்து தொலைத்துக் கட்டினாள். 

ஆனாலும்,
வல்வினை தீராத வகையினால் - அசுரப் பெருங்கூட்டம் -
மகிஷனின் மனைவியை தமக்குத் தலைவியாய் அறிவித்தன. 

அதுவரையிலும் தானுண்டு
தன் வேலை உண்டு - என்று இருந்தவள் -
இன்று அசுரப் படைகளுக்குத்  தலைவி ஆனாள்..

அரக்கப் பெரும் படையை வழி நடத்தும் நிலைக்கு ஆளானாள். 

அந்தச் சூழ்நிலையின் கொடுமையினால் -
அதுவரை யாருமே செய்திராத ஒன்றைச் செய்யவேண்டியதாயிற்று. 

அவள் செய்த காரியம்  -
சகல லோகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!..

என்ன அது!?..

ஸ்ரீதுர்க்காம்பிகையின் திருக்கரத்தினால் -
மகிஷன் வதம் செய்யப்பட்டபோது -
மகிஷனின் மனைவி கருவுற்றிருந்தாள்...
அந்தக் கரு இப்போது அசுரர்களுக்குக் கை கொடுத்தது.

குறுக்கு புத்தி கொண்ட
கொடூரர்களின் திட்டத்துக்கு உடன்பட்ட மகிஷனின் மனைவி -
தனது மாயையினால் - பேறுகாலத்தைத் தள்ளிப் போட்டாள். 

காரணம் - கர்ப்பிணிக்கு யாரும் கெடுதல் செய்ய மாட்டார்களே!.. 

அப்படியிருக்க -
தேவரும் மூவரும் - கர்ப்பிணியுடன் போர் செய்ய முன்வருவார்களா!?..

நிச்சயம் வரமாட்டார்கள்!...

ஆகவே இந்த உத்தி - அசுரர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது...

அசுரர்கள் கர்ப்பிணியை முன் நிறுத்திக் கொண்டார்கள்...
அடிதடி வெட்டுகுத்து.. - என, மீண்டும் ஆரம்பித்தனர்.

மறுபடியும் கத்திகளும் ஈட்டிகளும் தீட்டப்பட்டன!.. 

இதென்னடா.. மறுபடியும் சோதனை!.. - என்று தேவர்கள் அலறினர்...
ஓடிச் சென்று,   ஈஸ்வரனின் திருவடிகளில் வீழ்ந்து அரற்றினர். 

ஐயன் அம்பிகையை நோக்க - அம்பிகை புன்னகை செய்தாள்.


கோர ரூப செளந்தர்யங்கொண்டு
ஸ்ரீ உக்ரகாளி என நின்றாள்!..

அப்போது - அவள் திருமேனியில் இருந்து
அகிலத்தைக் காப்பதற்கென்று அருள் மயமாய் -
அதே சமயம் ஆங்கார ஸ்வரூபிணியாய் வெளிப்பட்டாள் -
ஸ்ரீபேச்சியம்மன்!.. 

ஸ்ரீ பேச்சியம்மன்  
ஏதோ - ஒன்று புதிதாக - நடக்க இருக்கின்றது!..
- என்பதைப் புரிந்து கொண்ட தேவர்கள்
அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.

ஸ்ரீ பேச்சியம்மனை முன் நிறுத்தியவளாய்,
தேவர்கள் புடை சூழ வந்து நின்ற  - 
ஸ்ரீ காளிகாம்பாளைக் கண்டதும்
மகிஷனின் மனைவிக்கு கையும் காலும் வெடவெடத்தன!..
கண்கள் கசிந்து உருகின... பெருகின!..
கைகளைக் கூப்பித் தொழுதாள்... அழுதாள்!...

என் தாயே!.. தயாபரி!.. என்னை மன்னித்து விடு!..
பெண்ணில் நல்லவளாய் பெருந்தகையோடு அமர்ந்தவளே!..
இந்த மூடர்களின் பேச்சைக் கேட்டதனால் 
மாய கர்ப்பம் தாங்கி - மதியிழந்தவள் ஆனேன்...
பெண்மைக்கு பேரிடர் செய்து விட்டேன்..
என்னை உன் மலரடிகளில் தாங்கிக் கொள்!..

- என்றபடி, அன்னையின் திருவடிகளில்
பெருஞ்சிரமத்துடன் விழுந்து வணங்கினாள். 

ஆனாலும், அசுரப் பதர்களோ - போர்!.. போர்!.. - என, ஆர்ப்பரித்தன. 

அடப் போங்கடா!.. நீங்களும் உங்க போரும்!..
இனிமேலாவது புத்தியோடு நடந்து கொள்ளுங்கள்!.. 

- என்றவளாய் அன்னையைச் சரணடைந்தாள் மகிஷனின் மனைவி!.. 

அவளுடைய - நிறை கர்ப்பத்தை நீக்க வேண்டிய நேரமும் வந்தது!.. 

தேவர்கள் அங்கிருந்து அகன்றனர்...
அஞ்சி நடுங்கிய அசுரர்கள் ஓட்டம் பிடித்தனர்.

மாய கர்ப்பத்தை நீக்க வேண்டி -
மகிஷனின் மனைவியைத் தன் மடி மீது தாங்கிக் கொண்டாள் -
ஸ்ரீ பேச்சியம்மன்!..


மலரடியில் விழுந்தவளை 
மடி மீது தாங்கிக் கொண்டாள் - ஸ்ரீ பேச்சியம்மன்..
எனில், மகிஷனின் மனைவி செய்த தவம் தான் என்ன!..

தேவரும் மூவரும் மலர் மாரி பொழிந்தனர்...
சப்தரிஷிகளும் விண்ணில் கூடி நின்று  வேதமந்த்ரங்களை முழக்கினர்.

ஸ்ரீபேச்சியம்மன் தன் திருக்கரங்களால் -
மகிஷனின் மனைவியின் கர்ப்பத்தின் உள்ளிருந்த - சிசுவை எடுத்து - 
ஸ்ரீ காளிகாம்பிகையின் திருக்கரங்களில் கொடுத்தாள்!..

மாய மந்திரங்களால் உருவேற்றப்பட்டிருந்த
அந்த சிசுவை - உலக நன்மையைக் கருதி, 
வலது திருச்செவியில் குழையாக
அணிந்து கொண்டாள் ஸ்ரீ காளி!..

அந்தளவில் -
மகிஷாசுரனின் மனைவியின் ஆத்மா -
ஸ்ரீ பேச்சியம்மனுடன் ஒன்றி உடனானது!..

ஸ்ரீ பேச்சியம்மன் -
பெண்மையின் இயற்கையான,
இயல்பான  பிரச்னைகளைத்  தீர்த்து 
அருள்பவளாகத் திருக்கோலங்கொண்டு அமர்ந்தாள்!..

பைதற் பிணக்குழைக் காளி!.. - என்று,
காதில் குழையாய் சிசுவை அணிந்திருக்கும் கோலத்தை -
இன்னம்பர் திருப்பதிகத்தில் (4/100) அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார்!..


சிசுவைக் காதில் குழையாய் அணிந்தவளாக 
அம்பிகை திருக்காட்சி நல்கும் திருத்தலம் - திருவக்கரை!..

இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த
சுக்ராச்சார்யார் - அடுத்து என்ன?.. என்று யோசித்தபோது...

அவருக்கு முன்பாக - வந்து அமர்ந்தாள் -
காலவ மகரிஷியின் மகளும்
தத்த மகரிஷியின் மனைவியுமான -
லீலா!..

ஸ்ரீ ஹரிஹர சுதனே 
சரணம்!.. சரணம்!..
ஃஃஃ

புதன், நவம்பர் 28, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 04

ஸ்ரீ மகாகாளர் வருகை..

அடர்ந்த வனத்தினுள் -  இந்திராணியைக் கண்டு குதுகலித்தாள் அஜமுகி. 

அதுவும் ஆதரவின்றித் தனித்திருப்பதாக எண்ணியதில்
மேலும் சந்தோஷம் பீறிட்டது.

 

சப்த மாதருள் ஒருத்தியெனத் திகழ்பவள் - இந்திராணி
என்பதை அறிந்திராத சிறுமதியளான அஜமுகி -
இந்திராணியின் பின்புறமாகச் சென்று,
கையைப் பிடித்து இழுக்கவும் -  இந்திராணி நிலைகுலைந்தாள்.

அபயக் குரலெடுத்து வீறிட்டாள்!..

தன் கணவன்  - தனக்குத் துணை எனக் காட்டிச் சென்ற
ஸ்ரீஹரிஹர புத்ரனை எண்ணிக் கதறினாள். 

ஆரணச் சுருதி சார் அடல் உருத்திரன் என்று ஏத்தும் 
காரணக் கடவுள் ஓலம் கடல் நிறத்து எந்தாய் ஓலம் 
பூரணைக்கு இறைவா ஓலம் புட்கலைக் கணவா ஓலம் 
வாரணத்து இறைமேல் கொண்டு வரும் பிரான் ஓலம்!.. 

அந்த அளவில் - 
மின்னொளி போல வெய்யரில் பெரிதும் வெய்யோன்!..
- என வெளிப்பட்டு வந்தான் - வீரமாகாளன்!..
- என்கின்றார் - கச்சியப்ப சிவாச்சார்யார்!..

நான்முகன் முதற்கொண்டு
ஏனைய தேவர் எல்லாம் மலர்களைத் தூவி வணங்கிட,
பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்ட
சிவபெருமானின் திரு நாமத்துடன்  - காலனுக்கும் காலனைப் போல -

ஸ்ரீவீரமாகாளர் - வெளிப்பட்டார்.


அவர் வரும் போதே -

அஞ்சேல்!.. அஞ்சேல்!.. இவளைக் கண்டு அஞ்சேல்!..
அஜமுகியின் கொடுமையைத் தடிந்து காப்பேன்!..'

- என்று,  இடி போல முழங்கியவாறே வந்தார்.

வீரமாகாளரின் வரவைக் கண்டு மகிழ்ந்து,
தலை வணங்கி வரவேற்ற - இந்திராணி -
அவர் தம் ஆறுதல் மொழிகளால்
மழைமுகம் கண்ட பயிர் போல மகிழ்ந்தாள்!..

ஆனால்,
அஜமுகியோ - ஆணவத்தின் உச்சியில் நின்றவளாய், 

ஒருங்கு முத்தொழிலும் ஆற்றும் மூவரும்,
துறக்கம் வைகும் முதல்வனும்
திசை காப்பாளர் எவரும் என் முன் நில்லார்!..
அப்படி இருக்க இங்கு என் முன் நிற்பதற்கு
தைரியமும் உடையவனோ - நீ!.. - என்று தகித்தாள். 

அதைகேட்டு சினந்த வீரமாகாளர் -
தனது சினத்தை அடக்கிக் கொண்டவராக,

அசுர குலத்தினை அடியோடு அழிப்பதற்கு
அக்னி என - வந்த அஜமுகியே கேள்!..
தேவேந்திரனின் மனைவி -
தனியளாக வனத்தில் இருக்கின்றாள்!..
- என்று எண்ணி இறுமாந்து விடாதே!..
சசி தேவியைக் காக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளேன். பெண்மைக்கு இடறேதும் செய்யாமல் சென்று விடு!.. 
- என்றார்.

அத்துடன் மேலும் பல அறவுரைகளையும் கூறினார்.

ஆ!.. அதைச் சொல்லவும் என்னைத் தடுக்கவும் நீ யார்!..
- அண்ட பகிரண்டமும் அதிர ஆர்ப்பரித்தாள் அஜமுகி!..

நானா!.. ஆலகால நஞ்சினை  உண்டு கறுத்த நீல கண்டனும்
பொன் அனைய ஸ்ரீதேவி தங்கும் திருமார்பினன் மாதவனும்
கூடி நல்கிய நற்புதல்வனும் ,
வெள்ளை யானையின் மீது ஆரோகணித்து வரும் ஐயனும் ஆகிய ஹரிஹர சுதனின் படைத்தளபதிகளில் ஒருவன்!..
என் ஐயன் எனக்கு அளித்த பணி இது..
என் பேர் வீரரில் வீரன் ஆன வீரமாகாளன் !.. - என்றார். 

இதைக் கேட்டதும் அஜமுகி - கொஞ்சம் அரண்டாள்... மருண்டாள். 

எனினும், மறுபடியும் மனதினுள் வன்மம் தலை தூக்கியதால்  - 
மறுபடியும் சிலிர்த்துக் கொண்டாள்...

இவனெல்லாம் ஒரு பொருட்டா!.. 

 - என்றபடி, மாயை பெற்றெடுத்த  மகளாகிய அஜமுகி,
வீரமாகாளர் மீது - பற்பல மந்த்ராயுதங்களைப் பிரயோகித்தாள்.

ஆனால்,
அந்த மாய அஸ்திரங்கள் அத்தனையும்
வீரமாகாளரின் காலடியில் - வீழ்ந்து பயனற்றுப் போயின. 

அளப்பரிய ஆற்றலுடன் திகழும் அசுர குலத்தின்
அற்புத ஆயுதங்களுக்கு இது தான் கதியா!?..

- என்று சிந்தித்தவள் -
மீண்டும், கொடிய ஆயுதங்களை அவர் மீது ஏவினாள்.

ஒரு நிலையில், வீரமாகாளரும் -
தன் கை வாளைக் கொண்டு அஜமுகி ஏவிய
அஸ்திரங்களை  எதிர் கொள்ளவேண்டியதாயிற்று... 


நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எண்ணிய வீரமாகாளர்

இந்திரன் தேவியை விட்டு விட்டு சென்று விடு!..
இங்கொரு பழி நேரும்படி செய்து விடாதே!..
- என்று இறுதியாக எச்சரித்தார்... ஆனால்,  

பழுதுபட்ட செவிகளையுடைய பாதகியான அஜமுகி, பதிலுக்கு - 

வீரமாகாளனே!.. நீ மிகவும் நல்லவன்...
பெண்மையைக் காப்பதில் பெரும் சிரத்தையுடன் இருக்கின்றாய்!..
ஆனாலும் நான் இவளை என் அண்ணன் சூரபத்மனுக்கு
விருந்தாக்க முடிவு செய்து வெகு நேரம் ஆகிவிட்டது...
நீ என்னைத் தடுக்க முயற்சி செய்யாதே!..
உனக்கு வெற்றி கிடைப்பது என் கையில் உள்ளது!..
ஆயினும், அதற்கு நான் இடம் தர மாட்டேன்!...
எனவே, பெண்ணாகிய நானும் பெருந்தன்மையுடன் சொல்கின்றேன்!...
நீ, வந்த வழியே ஓடிப் போய்விடு!...
என் சகோதரர்கள் குறிப்பாக தாரகன் - 
உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கே வந்தானாகில் -
நீயும் உன்னைச் சேர்ந்த மற்றவர்களும் பிழைப்பது கஷ்டம்!.. 

- என்றபடி நச்சரவம் போன்ற முத்தலைச் சூலத்தை எறிந்தாள்.

இதைக் கேட்டு - எட்டுத் திக்குகளும் அதிரும்படி நகைத்தார் வீரமாகாளர். 

அந்த நகைப்பொலியைக் கேட்டு,
அதுவரையில் வெற்றிக் களிப்பில் மிதந்து களைத்திருந்த
அசுரர் பெருங்கூட்டம் அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தது.

வீரமாகாளரின் நகைப்பொலியால் -
அஜமுகி வீசிய முத்தலைச் சூலமும் பயனற்றுப் போனது. 

தன் திறம் அத்தனையும், தந்திரம் அத்தனையும்,
வீரமாகாளரின் முன்னிலையில் -
பயனற்றுப் போனதை எண்ணித் தகித்தாள் - அஜமுகி...

ஆத்திரம் தலைக்கேறியது...

வீரமாகாளரை வெல்லுதல் அரிது!.. - என்பதைத் தாமதமாக உணர்ந்தாள்...

இனி காலம் தாழ்த்தலாகாது - என்று எண்ணியவளாக
தன் தோழியுடன் கூடி - சசிதேவியின் கையைப் பிடித்து இழுத்தாள்.

கொதித்தெழுந்த  கோபத்தையெல்லாம்
அது வரையில் அடக்கி வைத்திருந்த வீரமாகாளர், சீறிச் சினந்தவராக,

நில்!.. -என்று கர்ஜனை செய்தார்.

கேளாச் செவியளாகிய அஜமுகி -
இந்திராணியை உந்தித் தள்ளி வழி நடத்தினாள்.

இனியும் பொறுப்பதற்கில்லை!.. எடடா கொடுவாளினை!..
- என்று ஓங்காரமிட்டபடி, எழுந்த வீரமாகாளர்,

தன் செயலால் தரங்குன்றிய அஜமுகியின் கூந்தலைத்
தனது செங்கையால் பற்றி ஈர்த்து -
தேவேந்திரனின் தோகையைத் தொட்டு இழுத்த கையைத் துணித்தார்... தீங்குறு மனத்தினளைத் தனது திருவடியால் உதைத்தார்.

இதைக் கண்ட வானோர் யாவரும் -
அதிர்ச்சி தாங்க மாட்டாமல் - துள்ளிக் குதித்தனராம்.


மதர்த்திடு துன்முகி வன்கை வாளினால் 
சிதைத்திடு மொய்ம்புடைச் சேனைக் காவலன் 
உதைத்தனன் அனையளும் ஓ என்றே உளம் 
பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே!.. 

என்கின்றார் கச்சியப்ப சிவாச்சார்யார்...

ஸ்ரீவீரமாகாளர் எத்தனை அறிவுரைகளைச் சொல்லியும்
தலைக்கேறிய ஆணவத்தினால் அதைக் கேட்டாளில்லை- அஜமுகி!..

அஜமுகி அரக்க குணத்தினள் தான்...

ஆனாலும்,
அவளுக்குத் துன்பம் விளைவிப்பது ஸ்ரீ வீரமாகாளரின் நோக்கம் அல்ல!..


அஜமுகியே தனது அடாத செயலினால்  - தனது கையை இழந்ததோடு -
அசுர குலத்தின் அடிவேரினையும் அறுத்தாள்!..
- என்பதே இச்சம்பவத்தின் உட்பொருள்!..

ஓம் ஹரிஹர புத்ர
ஸ்வாமியே சரணம்!..
ஃஃஃ