ஆனந்த நிலையத்தை மீண்டும் வணங்கி விடைபெற்றுக் கொண்டோம்...
திருப்பதியை வந்தடைந்து விட்டோம்...
அன்று பிரதோஷம்...
எங்கள் இலக்கு - திருக்காளத்தி...
திருக்காளத்திக்குப் புறப்படும்போதே மாலை மயங்கி விட்டது...
திருக்கோயிலுக்கு முன்பாகவே
கடைவீதியில் இறக்கி விட்டார்கள்...
சாலையெங்கும் பரவலாக ஜல்லிக் கற்கள்...
23 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்காளத்தி தரிசனம்...
கோயிலுக்கு வழியைக் கேட்டுக் கொண்டு வந்தடைந்தோம்...
வழியெங்கும் கடைக்காரர்களின் கூக்குரல்...
திருக்காளத்தியிலும் கோயில் வளாகத்தில் படங்களெடுக்கத் தடை...
பொருள்களை வைத்துச் செல்வதற்கு கட்டணம்...
கட்டணம் அதிகம் என்று தோன்றியது...
பொருள்களை அங்கே வைத்து விட்டு திருக்கோயிலுக்குள் நடந்தோம்...
திருக்கோயிலின் வரப்ரசாதி - ஸ்ரீ பாதாள விநாயகர்...
ஆனால், சந்நிதி அடைக்கப்பட்டிருந்தது...
மறுநாள் காலையில் தான் திறக்கப்படும் என்றார்கள்...
திருக்கோயிலுக்குள் செல்வதற்கு இடுக்கு முடுக்காக கம்பித் தடுப்புகள்..
அவற்றுள் புகுந்து -
ஸ்ரீ அதிகார நந்தியம்பெருமானை வணங்கியபடி தொடர்ந்து நடந்தோம்...
தங்கக் கொடிமரத்தைக் கடந்து -
இதோ - எம்பெருமானின் திருமூலத்தானம்...
திருத்தலம் - திருக்காளத்தி
இறைவன் - திருக்காளத்தி நாதன்
அம்பிகை - வண்டாருங்குழலாள்
தீர்த்தம் - பொன்முகலி (ஸ்வர்ணமுகி) ஆறு..
சந்தமார் அகிலொடு சாதித் தேக்கம் மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே..(3/36)
-: திருஞானசம்பந்தர் :-
சிலந்தியும் நாகமும் யானையும் வழிபட்ட திருத்தலம் - திருக்காளத்தி..
ஐம்பூதங்களுள் - வாயு தலமாகப் புகழப்படுவது...
திருக்கோயில் மேற்கு நோக்கி விளங்குகின்றது
வேடுவராகிய திண்ணப்பர்
நாளாறில் கண்ணப்ப நாயனாராகி
சிவதரிசனம் பெற்றதும்
எண்ணற்ற அருளாளர்களால்
போற்றி வணங்கப்பெற்றதும் ஆகிய திருத்தலம்...
மூலத்தானம் முழுதும் திருவிளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது...
திகட்டாத தேனமுதாக -
கண் நிறைந்த தரிசனம்....
இத்திருத்தலத்தில் திருநீறு வழங்கப்படுவதில்லை என்கிறார்கள்..
திருச்சுற்றில் சங்கு தீர்த்தம் வழங்கப்பட்டது...
ஈசனின் சந்நிதிக்கு வலப்புறமாக திருச்சுற்று மண்டபத்தில்
பதினாறு வயது மதிக்கக்கதாக ஐந்தரை அடியளவில்
வில்லைத் தாங்கிய வண்ணமாக காலில் செருப்புடன்
திரு கண்ணப்ப நாயனார்...
கண்ணப்ப நாயனார் காட்டிய அன்புக்கும் பக்திக்கும் ஈடு ஒன்றில்லை!...
அதனால் தான் -
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாஎன்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ!..
- என்று கசிந்துருகுகின்றார் மாணிக்கவாசகர்...
கண்ணப்ப நாயனாரின் திருவடிகளில் மலர்களைச் சமர்ப்பித்து
தலை வைத்து வணங்கினோம்...
திருமலையில் மீனின் மீதமர்ந்த
ஐயப்பன் கோலம் பற்றிச் சொல்லியிருந்தேன்...
அதே போல இங்கும் ஒரு சிற்பம்...
திருச்சுற்று மண்டபத்தில் கண்ணப்ப நாயனாரின் திருவுருவச் சிலைக்கு
முன்பாக இருக்கும் தூணில் காணப்படுகின்றது....
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன் காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காண் அவனென் கண்ணுளானே..(6/8)
-: திருநாவுக்கரசர் :-
திருச்சுற்றில் நடக்கும்போது
தமிழகத்துத் திருக்கோயிலில் இருப்பது போன்ற உணர்வு...
கலைநயமிக்க தூண்களுடன் கூடிய விசாலமான மண்டபங்கள்...
அழகழகான சிற்பங்கள்...
இத்தலத்தில் நவக்ரஹங்கள் இல்லை..
ஆனாலும், சனைச்சரனின் திருவடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது...
காளத்தியின் கடைத்தெருவில் வாங்கிய
உதிரிப் பூக்களை திருச்சுற்றில் விளங்கும்
தெய்வத் திருமேனிகளின் திருவடிகளில் சாத்தி வழிபட்டோம்...
திருச்சுற்றில் வலம் வந்து அம்பாள் சந்நிதியை அடைந்தோம்...
ஸ்ரீ ஞானப் பூங்கோதையாள்
அவ்வேளையில் திருச்சுற்றில் எழுந்தருளியிருந்தாள்..
அளவில் பெரியதான நிலைக் கண்ணாடியின் முன்பாக
தேவியின் திருவடிவத்தினை எழுந்தருளச் செய்து
சோடஷ உபசாரங்களுடன் மகா தீபஆராதனை நிகழ்ந்தது...
அம்பிகையின் சந்நிதியிலும்
அற்புத தரிசனம் அருளப் பெற்றது....
திருச்சுற்று வலம் செய்து வெளியே வந்தோம்..
இங்கே அர்த்த ஜாம பூஜை நிகழ்வதில்லை
என்பது குறிப்பிடத்தக்கது...
திருக்கோயிலிலிருந்து வெளியே வந்தோம்...
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆட்டோக்கள்..
ஒன்பது மணிக்கெல்லாம் ஊரடங்கி இருந்தது...
சிற்றுண்டியை முடித்துக் கொண்டு
கோயில் வாசலில் தலை சாய்த்துப் படுத்தோம்...
எங்களைப் போல இன்னும் பலர்...
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர்..
காரணம் கொசுக்கடி...
திருமலையுடன் ஒப்பிடுகையில்
காளத்தியின் சுற்றுப்புற சுத்தம் - சொல்வதற்கு ஒன்றுமில்லை...
பொழுது விடிந்தது...
அன்றைய தினம் தமிழ் வருடப் பிறப்பு...
அருகிருந்த குளியலறையில் குளித்து முடித்து விட்டு
சிவ தரிசனத்திற்கு ஆயத்தமானோம்...
நாகம் வழிபட்ட தலம் என்பதுடன்
ராகு கேது வணங்கிய தலம் எனவும் ஐதீகம்...
எனவே,
விடியற்காலையிலேயே -
ராகு கேது பரிகார பூஜைகள் தொடங்கி விட்டன...
அந்த அதிகாலைப் பொழுதில்
ஸ்ரீ பாதாள விநாயகர் தரிசனம்...
நாற்பதடி பள்ளத்தினுள் அமர்ந்திருக்கின்றார் ஸ்ரீ விநாயகர்...
ஸ்ரீ விநாயகப் பெருமானின் பீடமும்
ஸ்வர்ணமுகி ஆற்றின் படுமையும் ஒரே மட்டம்...
அதாவது ஆற்றின் மட்டத்திலிருந்து கோயிலின் உயரம் நாற்பதடி...
ஸ்ரீ பாதாள விநாயகர் கோயிலின் வாசல் மிகக் குறுகியது..
உள்ளிறங்கும் படிக்கட்டுகளும் மிகக் குறுகலானவை....
கீழே இறங்கியோர் மேலேறி வந்தபின்னர் தான்
மேலும் சிலர் இறங்கி தரிசனம் செய்ய இயலும்....
ஆனாலும், வழக்கம் போல - மக்கள் பொறுமையின்றி
முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்...
குறுகிய வாசல் வழியாக உட்புகுந்து -
அதனினும் குறுகிய படிகளின் வழியாக உள்ளிறங்கி
விநாயகப் பெருமானை தரிசித்தோம்...
அங்கிருந்து மேலே ஏறுவதற்குள்ளாக
விடாப்பிடியாக வேறு சிலர் கீழிறங்கினார்கள்...
புரிதலற்ற ஜனங்களை மேலே விரட்டிய பின்னரே
எங்களால் மேலேற முடிந்தது..
விநாயக தரிசனம் செய்தபின்
திருக்காளத்தி நாதனையும் ஞானப்பூங்கோதையாளையும்
மீண்டும் கண்ணாரக் கண்டு தரிசனம் செய்தோம்...
தமிழ்ப் புத்தாண்டு நாள்.. ஆயினும்,
பரிகாரம் தேடி வந்தவர்களைத் தவிர்த்து
பெரிதாகக் கூட்டமில்லை...
திருக்கோயிலிலிருந்து வெளியேறும்போது
கொடிமரத்தின் அருகில் - அருள்தரும் ரோமரிஷி சந்நிதி!....
பல்வேறு தலங்களிலும் எதிர்பாராத விதமாக
எதிர் கொண்டு திருக்காட்சி தருபவர் ரோமரிஷி..
மனதார அவரை வணங்கி மகிழ்ந்தோம்...
நுண்ணலை பேசிகள் முற்றாக செயலிழந்திருந்தன...
எனவே, எந்த ஒரு படமும் எடுக்க முடியவில்லை...
திருக்கோயிலிலிருந்து வெளியே வந்ததும்
தேவஸ்தானத்தின் பேருந்து வந்து நின்றது...
திருக்கோயிலுக்கும் காளத்தி ரயில் நிலையத்திற்கும் இடையே
எவ்வித கட்டணமும் இன்றி பக்தர்களுக்காக இயக்கப்படுகின்றது...
அதிலே பயணித்து
திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் இறங்கிக் கொண்டோம்...
சில நிமிடங்களில் திருப்பதி செல்லும் பேருந்து...
ஒரு மணி நேரத்திற்குள் திருப்பதிக்கு வந்து விட்டோம்...
சாலையோரத்தில் உணவகங்கள்..
சூடான இட்லி, தோசை, தக்காளி, கார சட்னி வகையறாக்கள்..
வா.. வா.. என்றன... அப்புறம் என்ன!...
பசியாறல் தான்!...