புதன், ஜனவரி 31, 2018

தைப்பூச தரிசனம் 1

இன்று தைப்பூசத் திருநாள்..

உலகெங்கும் உள்ள சைவப் பெருமக்கள் அனைவரும் 
முருகப் பெருமானைக் கொண்டாடி மகிழும் நன்னாள்...


தைப் பூசத் திருநாளினைப் பற்றி 
ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்
திருப்பதிகங்களில் குறித்தருள்கின்றனர்..

சிவாலயங்கள் தோறும் கோலாகலமாக வைபவங்கள் நிகழ்கின்றன..


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமான் ஜோதியாகிய நாளும் இதுவே..


இந்த நன்னாளில்

அருணகிரிப்பெருமான் அருளிய 
கந்தர் அலங்கார நூலில் இருந்து 
சில திருப்பாடல்களைச் சிந்தித்திருப்போம்..

சிவகுமரனின் திருவடிகளை வந்தித்திருப்போம்... 



பேற்றைத் தவஞ்சற்றும் இல்லாத என்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ்சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே..(01)

ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டுஅரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டுவெற் புங்கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே..(13)



தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலும் என்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே..(15)

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்

வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே..(22)


நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே..(26)

பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்

சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்திருக்கை
வேலென் கிலைகொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே..(30)


திருமுருகன் - கீழ்வேளூர் - திருஆரூர்..
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே..(38)

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்

மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்குஎன்தலை மேலயன் கையெழுத்தே..(40)




ஆலுக் கணிகலம் வெண்தலை மாலை அகிலமுண்ட
மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறும் ஐயன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே..(62)

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே..(70)

ஸ்ரீ வெற்றிவேல் முருகன்
தஞ்சை பெரியகோயில்
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவா தவர்க்கு ஒரு தாழ்வில்லையே..(72)

பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்குங்
கந்தா இளங்கும ராஅம ராவதி காவலனே..(79)

குமரகோயில் - கன்யாகுமரி
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே..(90)

சலங்காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன் சண்டைக்கு அஞ்சார்

துலங்கா நரகக் குழியணு கார்துட்டநோய் அணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தன் நன்னூல்
அலங்கார நூற்றுள் ஒருகவிதான்கற்று அறிந்தவரே..(101)
***


வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை...

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்.. 
***

செவ்வாய், ஜனவரி 30, 2018

அன்பின் மொழி

-: சத்திய சோதனையிலிருந்து சிறுபகுதி :-

அண்ணல் காந்திஜி அவர்கள் 
தம்மைச் சிறுவயதில் வழிப்படுத்திய 
அரிச்சந்திர நாடகத்தைப் பற்றிக் கூறுகின்றார்..


சிரவணன் நாடகத்தைப் பார்த்தது போன்ற மற்றொரு சம்பவமும் உண்டு..

நாடகக் குழுவினர் நடத்தி வந்த அரிச்சந்திரன் என்ற நாடகத்தைப் பார்ப்பதற்கு என் தந்தையாரின் அனுமதியைப் பெற்றேன்..

அரிச்சந்திர நாடகம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது..

எத்தனையோ தரம் அந்த நாடகத்தைப் பார்த்திருக்கின்றேன்..

இருந்தும் சலிப்பு ஏற்பட்டதேயில்லை..

ஆனாலும்
ஒரே நாடகத்தைப் பார்ப்பதற்கு எத்தனை தடவைதான் 
வீட்டில் அனுமதிப்பார்கள்?..

ஆயினும், அந்த நாடகம் சதா என் நினைவிலேயே இருந்து வந்தது..

எண்ணற்ற முறை எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருக்கின்றேன்..

அரிச்சந்திரனைப் போல எல்லாரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது?.. - என்று, அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கின்றேன்..

சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களை எல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது..

அரிச்சந்திரனின் கதை நடந்த சமயங்களில் உண்மையிலேயே அழுது விடுவேன்...

அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது - என்று
எனது பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகின்றது..

என்றாலும்,

என்னைப் பொறுத்தவரையில் 
அரிச்சந்திரனும் சிரவணனும் வாழ்வின் உண்மைகள்..

அந்த நாடகங்களைத் திரும்பவும் இன்று நான் படித்தாலும்
முன்போலவே என் மனம் உருகிவிடும் என்பது மட்டும் நிச்சயம்..
***


பேச்சாலோ அல்லது எழுத்தாலோ 
பிறரை நம் வசம் இழுக்க வேண்டும் என்ற தேவையில்லை.. 
நமது வாழ்வின் மூலமாகத் தான் அதை அடைய முடியும்.. 
***


வாழ்கநீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா.. நீ வாழ்க.. வாழ்க!.. 
-: மகாகவி பாரதியார் :- 

அண்ணலின் பாதக் கமலங்களுக்கு
அஞ்சலி.. 
*** 

ஞாயிறு, ஜனவரி 28, 2018

மாம்பழச் சாமியார் 1

சுவாமி!...

குழந்தாய்!..

சிவப்பழமாகிய தாங்களும் இளங்கன்றாகிய அடியேனும் வெகு நேரமாக நடந்து நெடுந் தொலைவினைக் கடந்திருக்கின்றோம்..

ஆமாம்!..

சூரியன் வேறு உச்சியில் நிற்கின்றான்...
வயது முதிர்ந்த தங்களுக்கு நோகாவிட்டாலும் -
எனது கால்கள் மிகவும் நோகின்றன.. 
அத்துடன் பசி என்பது எல்லாருக்கும் பொது.. ஆகையால்...

ஆகையால்!...

அதோ தெரிகின்றதே.. அந்த மாஞ்சோலையில் சற்று நேரம் தங்கி இளைப்பாறிச் செல்வதற்குத் தாங்கள் சித்தம் கொள்ளவேண்டும்!...


ஆகட்டும்.. அப்படியே ஆகட்டும்!...

அதன்படி அந்த மாஞ்சோலைக்குள் சுவாமியும் சீடனும் நுழைந்தவுடன்..

வரவேணும்... வரவேணும்!...
- என்றபடி இளம் வயதுடைய தம்பதியர் ஆவலுடன் ஓடி வந்து வரவேற்றனர்...

அங்கேயிருந்த வைக்கோற்போரில் இருந்து வைக்கோலை உருவி
நிழல் கவிந்திருந்த மாமரத்தினடியில் மெத்தை போல் பரப்பி -

அதன் மீது பழைய வேட்டியை விரித்து வயதான ஸ்வாமி அமர்வதற்கு உதவினர்....

மங்கலம் உண்டாகட்டும்!... - ஸ்வாமிகள் மனமார வாழ்த்தினார்..

சாமி... எங்கேயிருந்து வர்றீங்க?...

வடக்கே திருக்கயிலாய மலையில் இருந்து வருகின்றோம்...

ஈஸ்வரா... ஈஸ்வரா... இந்தா புள்ளே.. சாமியை விழுந்து கும்புட்டுக்க!...

மறுபடியும் -

மங்கலம் உண்டாகட்டும்!... - ஸ்வாமிஜி வாழ்த்தினார்..

ஏ... புள்ளே... அந்த பனை ஓலை விசிறிய எடுத்து வந்து வீசு!..

சாமீ... ரொம்ப களைப்பா இருக்கீங்க.. 
நாங்க கொண்டு வந்த கட்டுச் சோறு இருக்கு... 
ஒரு வாய் சாப்புடுறீங்களா?..

என்ன மச்சான் நீ... போய் அந்த வாழையில இருந்து நுனி எலை நறுக்கிட்டு வா... ஓடு... சீக்கிரம்!...

சாமீ.. கோவிச்சுக்கப்படாது.. எங்க கையால நீங்க சாப்புடுவீங்களா?...

மகளே... எல்லாவற்றையும் துறந்த எமக்கு மீண்டும் பற்றையும் பாசத்தையும் ஏற்படுத்துகின்றன உன்னுடைய பேச்சும் உபசரிப்பும்!...

ஏ.. புள்ளே.. என்னா இது.. சாமிகிட்ட நொய்..நொய்..ன்னு கிட்டு...
இந்தா இருக்கு எலை.... சாமிகள் கை கழுவ தண்ணி கொடு..
சோத்துல கை போடாம அகப்பையால எடுத்து வை...

தாயே!.. நீ உன்னோட கையாலயே சோற்றை எடுத்து வையம்மா!...

எங்க அப்பாரும் இப்படித்தான் வாயாரக் கூப்புடுவாங்க!..
மச்சான்... அந்த குடாப்புக்குள்ள மாங்கா பழுக்க வெச்சிருக்கேன்..
நல்லதா நாலு எடுத்து நறுக்கி வை!...


பெருந்துறவியின் கண்களும்
இளந்துறவியின் கண்களும் ஏக காலத்தில் கலங்கின...

அந்தக் காலத்தில் ஈசன் எம்பெருமானையும்
இப்படித்தான் மெய்யடியார்கள் உபசரித்தார்களாம்!...

நாங்க எங்க சாமி அதெல்லாம் கண்டோம்!...
உங்க மாதிரி பெரியவங்க இந்தப் பக்கம் வர்றப்போ
ஏதோ எங்களால ஆனது.. வயிறார உபசாரம் செய்வோம்!...

- வெள்ளந்தியாகச் சொன்னார்கள் தம்பதியர் இருவரும்...

மகனே.. பெரிய பெரிய மகான்களுக்குக் கிடைத்த பாக்கியம்
இன்று எனக்கும் கிடைத்திருக்கின்றது...

குனிந்த தலை நிமிராமல் தயிர் சோற்றையும் மாம்பழத் துண்டுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளந்துறவி வியப்புடன் ஸ்வாமிகளை நோக்கினார்...

அந்தத் தம்பதியரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

ஸ்வாமிகள் தொடர்ந்தார்...

பசித்த வயிற்றில் உணவு தெய்வம்.. பாலை வனத்தில் தண்ணீர் தெய்வம் என்பார்கள்... அந்த மாதிரி சாட்சாத் அம்பாளும் பரமேஸ்வரனும் நேரில் வந்து பரிமாறி பசி தீர்த்த மாதிரி இருக்கின்றது!...

சாமீ...  அப்படியெல்லாம் பெரிய வார்த்தை எதுக்குங்க...
நாங்க ஏழை பாழைங்க.. ஏதோ எங்களால ஆனது...

இந்த மாஞ்சோலை உங்களுடையதா?...

ஆமாங்க சாமி.. இந்த மாந்தோப்பும் சுத்தியிருக்கிற வயக்காடும் 
எங்க அப்பன் பாட்டன் எங்களுக்காக கொடுத்த சொத்து...
கொடுக்கறப்பவே சொன்னாங்க.. தர்மஞ் செய்யடா.. மகனே!.. - ன்னு...

வெள்ளாமையில முதல் பங்கு தர்ம காரியங்களுக்கு..
மறு பங்கு அரசாங்க வரி.. அதோட வர்ற வருஷ சாகுபடி செலவுக்கு..
மூனாவது பங்கு ஆடு மாடு கோழிகளுக்கு.. வீட்டு செலவுக்கு!..

ஆகா.. நிறைந்த குணம்.. நிம்மதியான மனம்...
உங்களை மாதிரி உயர்ந்தவர்கள் தான் நாட்டுக்குத் தேவை...
உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்!...

சாமீ... கேட்டா கொடுப்பீங்களா?..

நிச்சயம்!..

அப்படீ..ன்னா.. நீங்க இங்கேயே தங்கிடுங்க!...

இங்கேயேவா!.. - அதிர்ந்தார் ஸ்வாமிகள்..

எங்க அப்பன் பாட்டன் மாதிரி.. இருக்கீங்க...
வயசான காலத்துல.. ஏன்.. அங்கே இங்கே..ன்னு அலைஞ்சிக்கிட்டு!..
உங்களுக்கு வேணுங்கிறதெல்லாம் செஞ்சு தர்றோம்...
எங்க கூடவே இருந்து எங்க புள்ள குட்டிகளுக்கு நல்லவழி காட்டணும்!..

அதற்குள்ளாக விஷயம் கேள்விப்பட்ட ஊர் ஜனங்கள் ஒன்று திரண்டு ஓடி வந்து ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்திற்காக வரிசை கட்டி நின்றனர்...

சாமிகள் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறப்போ தொந்தரவு செய்யக் கூடாது...
இனிமே நம்ம ஊர்ல தான் சாமிகள் தங்கப் போறாங்க!...

ஓ.. - என்று ஆர்ப்பரித்தது ஜனத் திரள்...

சாமிக்கு என்ன பேர்?.. - கூட்டத்துள் கிசுகிசுப்பு எழுந்தது...

பெரியவங்க கிட்ட போய் ஒங்க பேரு என்னா...ன்னு கேக்கிறது தப்பு...
அதனால நாமளே சாமிகளுக்கு பேர் வெச்சிடுவோம்!...

என்னா...ன்னு பேரு வெக்கப் போறே!...

சாமிகளோட முகத்தைப் பாரு.. 
மாம்பழத்தைச் சாப்பிடுறப்போ எவ்வளவு சந்தோஷம் தெரியுது... 
மாம்பழம் அவங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் போல இருக்கு...
அதனால...

அதனால?...

இன்னையில இருந்து அவங்க பேரு மாம்பழச் சாமியார்!...

மாம்பழச் சாமியார் வாழ்க!... - மீண்டும் ஜனத்திரளிடையே ஆரவாரம்...

இதற்குள் ஸ்வாமிகள் சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தார்..

இரு கைகளையும் உயர்த்தி ஆசி கூறியதுடன்
வந்திருந்த அனைவருக்கும் திருநீறு வழங்கினார்..

ஜனங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

சாமிகள்... இனிமேல் நம்ம ஊர்ல தான் தங்கப் போறாங்க!...
ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க... கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்..
உங்களோட கஷ்ட நஷ்டத்தையெல்லாம் அப்புறமா வந்து பேசிக்கலாம்...

இப்போ சாமிகள் தங்குறதுக்கு ஒரு குடிசை கட்ட வேணும்...
அதனால ஆளுக்கு ஒரு வேலைய கையில எடுங்க!...

அன்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது...

அவ்வளவு தான்...

சற்று நேரத்துக்குள்
மூங்கில் கழிகளும் தென்னங்கீற்றுகளும்
பாளைகளும் - மளமள.. என்று குவிந்தன...

அவற்றுடன் அந்த ஊர் மக்களின் அன்பும் சேர்ந்து கொள்ள
ஆங்கொரு குடில் அழகாக எழுந்து நின்றது...

ஸ்வாமிகள் படுப்பதற்கு தாழை நார் கட்டில்..
தரை விரிப்புக்கு பனை ஓலைப் பாய்..
மண்பானைகள்... கலயங்கள்...

கூடத்தில் குத்து விளக்கு.. தாழ்வாரத்தில் சர விளக்கு..
வாசற்படியினில் அகல் விளக்குகள்..

எல்லாவற்றையும் ஏறிட்டு நோக்கினார் ஸ்வாமிகள்...


இறைவா.. பற்றறுத்து வந்த என்னை மீண்டும் பாசத்தினால் கட்டுகின்றாயே...
இங்கே என்னென்ன திருவிளையாடல்களை நிகழ்த்தத் திருவுள்ளமோ!...

சூரியன் மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தான்...

சாமீ... ராப்பொழுதுக்கு பணியாரமும் கேழ்வரகு அடையும் 
தேங்காய்ப் பாலும் கொண்டு வர்றோம்... வேறென்ன வேணும்..ன்னு சொன்னீங்க...ன்னா!..

ஸ்வாமிகள் நிறைவாகப் புன்னகைத்தார்...

சரி.. நீங்க ஓய்வெடுங்க சாமீ!.....
நாங்கள்...லாம் நாளைக்கு வர்றோம்..

ஊர் ஜனங்கள் அப்போதைக்கு அங்கிருந்து புறப்பட்டனர்..
***

நாமும் நாளைக்கு அவர்களுடன் வருவோம்...

நலம் பெருகட்டும்..
***

வெள்ளி, ஜனவரி 26, 2018

நாடு வாழ்க...

வாத்யாரே.. வாத்யாரே!..
இன்னைக்கு என்னா பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் லீவா?..

ஆமா.. இன்னைக்கு குடியரசு தினமாச்சே... விடுமுறை தான்!..
காலை..ல போய் கொடியேத்திட்டு இப்போ தான் வந்தேன்..


குடியரசு தினம்... ந்னா இந்த சுதந்திரக் கொடியேத்தி
மிட்டாய் எல்லாம் கொடுப்பாங்களே அதானே!..

சுதந்திரக் கொடி... ந்னு இல்லை... அது நம்ம தேசியக் கொடி...
வெள்ளைக் காரனுங்க கிட்டயிருந்து விடுதலையான நாளும்
குடியரசு ஆன நாளும் முக்கியமானவை..
அதனால அந்த நாளை சந்தோஷமா கொண்டாடுறோம்...

ஏங்க.. நாம மெய்யாலுமே விடுதலை ஆயிட்டமா!...

என்ன இது.. ஏன்.. சின்னமணி இப்படிக் கேக்கிற?...

குடியரசு.. அப்படி..ன்னா என்னாங்க!...

மக்களுக்கான.. மக்களின் ஆட்சி.. மக்களாட்சி.. குடியாட்சி!..

அப்போ அதுக்கு முன்னால?...

அது மன்னராட்சி.. முடியாட்சி!..

ஓஹோ!.. மக்களுக்கான.. ஆட்சி.. அப்படீ...ங்கிறீங்க...

ஆமா!...

மக்கள்.. அதாவது.. நம்மளோட ஆட்சி..

ஆமா..மா!..

அப்புறம்.. ஏங்க...
எங்க பேங்கு கணக்குல எங்க பணம் கம்மியா இருக்கு...ன்னு
எங்களோட பணத்தை அவங்க எடுத்துக்கிட்டாங்க!..

அது... நிர்வாகம்.. பராமரிப்பு!... அதுக்குன்னு சொல்றாங்க!..

அதாவது தினசரி எங்களோட பணத்தை வெளியில எடுத்து
சுத்தம் பண்ணி துடைச்சி வெச்சாங்களாமா!?..

.... .... ....

அந்த பேங்குல எழுதியிருக்கான்.. இது உங்களோட பேங்கு..ன்னு!...
உங்களோட பேங்கு..ன்னு எழுதிட்டு எங்களோட பணத்தை அவன்....ல
எடுத்துக்கிட்டுப் போயிட்டான்!...

பொன்னுமணி ரெண்டு நாளா அழுதுக்கிட்டு இருந்தா... தெரியுமா!..
அது அவ கஷ்டப்பட்டு சேத்து வைச்ச காசு...

போன வரைக்கும் சரி..ன்னுட்டு வேற பேங்குக்கு
பணத்தை மாத்தி வெச்சிருக்கா!...

இப்படித்தான்..
இது உங்கள் சொத்து...ன்னு சொல்லிக்கிட்டு இருந்தானுங்க..
திடீர்....ன்னு பஸ்ஸு டிக்கெட் விலை ஏறிப் போச்சு...
ஒரு நாளைக்கு எட்டு ரூவா ஜாஸ்தியா கொடுத்து
அரிசி மில்லுக்குப் போக வேண்டி இருக்கு...

பஸ் டிக்கெட்டு நமக்கு கட்டுப்படியாகாது...ன்னு
சுமாரான சைக்கிள் ஒன்னு வாங்கிட்டேன்...

பொழப்பு ஓடணுங்களே... இதெல்லாம் சொல்லி முதலாளி....கிட்ட
சம்பளம் கூடுதலா கேட்டா.. இஷ்டம்..ன்னா இரு.. அப்பிடிங்கிறார்...

பாலு சீனி மண்ணெண்ணை..ன்னு எல்லாம் ஏகத்துக்கு
வெலை ஏறினா எங்க மாதிரி ஏழை பாழைங்க.. என்னா செய்யிறது..ங்க!...

இது தான் நம்மளோட ஆட்சி...ங்களா!..

தெருவுல பொறம்போக்கு ஒருத்தன் இருக்கிறான்...
பொழுதுக்கும் சாராயக் கடையில சுத்துறதும்
பொண்ணுங்க...கிட்ட வம்பு வளர்க்கிறதும் தான் வேலை...
போன வாரம் அவனைப் புடிச்சி அடிச்சி உதைச்சி
போலீஸ்... ல கொடுத்தோம்...

இதோ நேத்து வெளியில வந்து சுத்திக்கிட்டு இருக்கான்...
அதுக்குத் தான் நாங்க ஒரு ஐடியா வெச்சிருக்கோம்!..

அட... சின்னமணி.. ஆத்திரத்து..ல ஏதாவது செஞ்சிடாதீங்க..
ஏடாகூடம் ஆகிடும்... அந்த வம்பெல்லாம் வேண்டாம்!...

அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது.. நீங்க பயப்படாதீங்க...

தெருக் குழாய்...ல தண்ணி வர்றதில்லை... 
ரோட்டு விளக்கு எரியறதே இல்லை...

குப்பை அள்ளுற லாரி இருக்கா.. இல்லையா..ன்னு தெரியலை...

இத்தனை வருசமா ஏழை ஜனங்களுக்கு..ன்னு ஒன்னும் செய்யலை..
இதுல.. மக்களாட்சி..மக்களாட்சி... ந்னு கூப்பாடு!..

வருத்தப்படாதே.. சின்னமணி...
இந்தக் கஷ்டம் எல்லாருக்கும் இருக்கு..
நிச்சயம் மக்களுக்கான ஆட்சி மலரும்!..

என்னமோ சொன்னீங்களே.. மன்னர் ஆட்சி...ன்னு..
அவங்க ஆட்சி செஞ்சப்போ ரோட்டு ஓரத்துல எல்லாம்
மரத்தை வெச்சாங்களாம்... குளத்தை வெட்டுனாங்களாம்...
தப்பு தண்டா செஞ்சா இழுத்துப் போட்டு மிதிச்சாங்களாம்..

ராஜாவும் மந்திரியும் மாறு வேசம் போட்டுக்கிட்டு
ஊரை சுத்தி வந்து ஜனங்களுக்கு எது நல்லது..ன்னு
யோசிச்சி செஞ்சு கொடுத்தாங்களாம்...
இன்னைக்கு அந்த மாதியா இருக்கு?..


நீ சொல்றதெல்லாம்..சரி தான்!...
காலகாலமா நல்லா இருந்த
நிர்வாகம் இப்போ புரையோடிப் போச்சி..
கொஞ்சம் கொஞ்சமாத் தான் சரியாகும்!..

என்னமோ..ங்க நான் அந்த அளவுக்கு படிக்காதவன்..
ஏதாவது குத்தங்குறையா சொல்லியிருந்தா பொறுத்துக்கணும்!...

நீ வேற சின்னமணி.. படிச்சவங்களும்
இப்போ இப்படித்தான் பேசிக்கிட்டு இருக்காங்க...

ஆனாலும் நம்ம நாடு நமக்கு முக்கியமில்லையா!..
ஜனங்க வருவாங்க..போவாங்க...
நம்ம நாடு நம்ம பூமி என்னைக்கும் நிலைச்சு இருக்கும்...

நீ சொன்ன மாதிரி பார்த்துப் பார்த்து ஆட்சி செஞ்ச
ராஜாக்களே போன இடம் தெரியாம போய்ட்டாங்க!...
இவங்கள்ளாம் எத்தனை நாளைக்கு?...

நீங்க சொல்றதும் சரிதான்..
எல்லாம் ஒரு நாளைக்கு மாறித் தானே ஆகணும்!..
எப்படியோ நாடு நல்லா இருக்கட்டும்..
நான் மாங்கா கதை கேக்கலாம்..ன்னு வந்தேன்!..

சின்னமணி... நம்ம நாட்டோட தேசிய பழம் எதுன்னு தெரியுமா!...

தெரியாதுங்களே!..


மாம்பழம் தான் நம்முடைய தேசிய பழம்!..

ஆகா!.. மாம்பழத்துக்குப் பெருமைதான்!..
அப்போ நான் புறப்படுறேன்...

நீ...வா.. மத்தியானத்துக்கு நம்ம வீட்ல தான் விருந்து..
பொன்னுமணிய அழைச்சுக்கிட்டு வந்துடு...

என்னா விசேஷங்க?...

குடியரசு நாள் தான் விசேஷம்!...

ஓகோ!...

பொன்னுமணி...ய சைக்கிள்.. ல வெச்சிக்கிட்டு தட...தட...ன்னு வராதே..
சாலையெல்லாம் குண்டும் குழியுமா கிடக்கு..
புள்ளத்தாச்சிப் பொண்ணு... உடம்புக்கு ஆகாது!..

சரிங்க வாத்யாரே!...
***


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறிமனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
- மகாகவி பாரதியார் - 

வாழ்க பாரதம்..
வளர்க தமிழகம்!..

அனைவருக்கும் 
குடியரசு தின நல்வாழ்த்துகள்..

ஜய் ஹிந்த்!..
 ***

புதன், ஜனவரி 24, 2018

மா... - 2

அக்கா... அக்கா..வ்!...

யப்பா... எத்தனை நாளாச்சு தாமரை.. இந்தப் பக்கம் வரனும்..ன்னு இப்பவாவது நெனைச்சியே!...

என்னக்கா நீங்க.. பொங்கல் அன்னைக்குத் தான் இங்கே வந்து பொங்கல்...லாம் சாப்பிட்டுப் போனேன்... அதுக்குள்ளயும் எத்தனை நாளான மாதிரி..ங்கிறீங்க!..

ஆமாண்டா... செல்லம்!... உன்னைப் பார்க்கலேன்னா எனக்கு என்னவோ மாதிரி இருக்கு...

தாமரையைத் தோளோடு சாய்த்துக் கொண்டாள் அக்கா..

இந்த வருஷம் கன்னிப் பொங்கல் அதுவுமா - கிராமத்துக்கு போக முடியலை.. அன்னைக்கு தை அமாவாசை வந்ததாலே அவங்க அவங்களும் வீட்டு வேலையா ஆகிட்டாங்க.. நாங்களும் திருக்கடவூருக்குப் போய்ட்டோம்...

ஆமாக்கா!... மாமாவும் அத்தையும் திருவையாறு போய் இருந்தாங்க...
இந்த வருஷம் செண்பகத்தைப் பார்க்க முடியலை..

அதுக்கு வேறொரு யோசனை வெச்சிருக்கேனே!...

என்னக்கா அது!?.. ஜொல்லுங்க.. அக்கா!...

ம்ஹூம்.. அப்புறமாத்தான்!...

சரி.. எங்கிட்ட சொல்லாம வேற யாருக்கிட்ட சொல்லப் போறீங்க!..
அப்புறம்.... உங்க அண்ணாச்சி நேத்து போட்ட பதிவைப் படிச்சீங்களா!...

ம்.. படிச்சேனே!... மா மரத்தைப் பத்தி எழுதியிருந்தார்.. 
ஏன்.. அதுல என்னபிரச்னை?..


பிரச்னை ஒன்னுமில்லை... அது..ல .... வந்து.. வந்து...

என்னம்மா?.. என்ன சந்தேகம்!?...

ஆமாக்கா!.. அது..ல... அந்த பொன்னுமணிக்கு மாவடு!..
அது.. ஏங்..க்கா மாசமா இருந்தா மாவடு வாங்கித் தரணுமா!...

திக்கித் திணறினாள் தாமரை...

அடிப் பைத்தியமே.... புள்ள உண்டாயிருந்தா மசக்கை ஆயிடும்...

மசக்கை..ன்னா!...

மசக்கை..ன்னா தெரியாதா?... இப்படியும் ஒரு அப்பாவியா!..

அச்சச்சோ... உள்ளே அத்தான் இருக்காங்களா?.. - தாமரைக்குத் தயக்கம்..

நீ பயப்படாதே.. அவங்க காலேஜுக்குப் போய்ட்டாங்க..
அவங்க கிட்ட இதக் கேட்டா இன்னும் விளக்கமாகவே சொல்லுவாங்க...

அத்தான்..கிட்ட கேக்குறதா!.. வேற வினையே வேண்டாம்!..
இதெல்லாமா போய் அத்தான்... கிட்ட கேக்க முடியும்?..

அம்மாடி.. அத்தானப் பத்தி என்ன நெனைச்சிக்கிட்டு இருக்கே.. 
அவங்க என் பின்னாடி சுத்துனப்பவே எனக்கு பாடம் நடத்துனவங்க....

என்னது பாடம் நடத்துனாங்களா!?...

அந்தக் காலத்தில ஊருக்கு ஊரு மாந்தோப்பு இருக்கும்...
ரகசியமா பார்த்துப் பேசற இடமே மாந்தோப்பு தான்..
அப்படியே கூடைய எடுத்துக்கிட்டு மாங்கா பறிக்கிற மாதிரி
மச்சானோட மனசையும் பறிச்சுக்கிட்டு வருவாங்க!...

சே.. இந்த ஆம்பிளைங்களுக்கு விவஸ்தையே கிடையாதுப்பா!...

தாமரை.... இதெல்லாம் தெரிஞ்சிருக்கிறது தான் சந்தோஷமான இல்லறம்.... உனக்கு என்ன சந்தேகம் அதைக் கேளு!..

அந்த மாவடு... மாங்காய்!..

கடைசி..ல - அந்த சின்னமணி  
மாங்காய்....ங்கறதுக்குப் பதிலா - 
மாவடு..ன்னு வாத்யார்..கிட்ட உளறிட்டான்!.
நம்ம நெல்லை அதக் கண்டு பிடிச்சுட்டாங்க!...

அது.. ஏங்..க்கா?...

கல்யாணத்துக்கு அப்புறம் கரு உருவான சில வாரங்கள்..ல மசக்கை ஆரம்பமாயிடும்... எதுவுமே சாப்பிடப் பிடிக்காது.. லேசா தலை சுற்றல் வாந்தி இருக்கும்...மனசுக்குப் பிடிச்ச எதையும் சாப்பிடப் பிடிக்காது.. 

ஆனா புளிப்பு ருசிக்கு மட்டும் வாயும் மனசும் ஏங்கும்..

ஓஹோ!..

சில பொண்ணுங்க.. புளி அது...இது...ன்னு இறங்கிடுவாங்க.. புளிப்புச் சுவை நல்லது என்றாலும் புளி ஆபத்து... அதனால தான் மாங்காய் மேல ஈர்ப்பு ஆகிடுது... புளிப்பு மாங்காய் இருந்தாலும் அது உடம்புக்கு நல்லதாகி விடுது...

இப்படி எத்தனை மாசத்துக்கு இருக்கும்?...

கர்ப்பப் பையில கரு தங்கினதும் சரியாகிடும்.. அதுக்கு அப்புறம் 
மூனு மாசத்துக்கு மேலயும் தலை சுற்றல் வாந்தி இருந்தா டாக்டரைப் பார்க்க வேண்டியது தான்...

நீங்க மாங்காய் தின்னுருக்கீங்களா!..

மரத்தில ஒரு காய் விடாம பறிச்சுக் கொண்டாந்துட்டாங்களே உங்க அத்தான்!.. இப்படி மாங்காய் திங்கிறதுக்கு உண்மையான காரணம் என்னா..னு தெரியுமா!..

நான் என்னத்தைக் கண்டேன்.. அக்கா!.. நீங்களே சொல்லுங்க!..

இனிய இல்லறம் நன்மக்கட்பேறு.. இதுக்கெல்லாம் காரணம் அன்பான காதல்!... இந்த காதலுக்கு அதிபதி யாருன்னு தெரியுமா?..


ஓ.. தெரியுமே!.. ரதியும் மன்மதனும் தானே!..

அப்பா.. நல்ல அறிவான பொண்ணு... அந்த மன்மதன் கையில கரும்பு வில்லும் அஞ்சு மலர் அம்புகளும் இருக்குது.. ன்னு சொல்வாங்க!..

அந்த அஞ்சு அம்புகளுக்கும் பேர் சொல்லவா...
முல்லை, தாமரை, மா, கருங்குவளை, அசோகம் - அப்படின்னு பூக்கள்...

ராசாத்தி!... இந்த அஞ்சு பூக்கள்...ல - 
மாம் பூ தான் மனக் கிளர்ச்சியை உண்டு பண்ணுதாம்..

ஓ!...

அதனால தான் மன்மதனுக்கு ஆத்மார்த்த நன்றி சொல்றதா 
மாங்காய் மேல ஈர்ப்பு.. அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க...

இதெல்லாம் எங்க போயி அக்கா படிச்சீங்க!...

இதெல்லாத்தையும் பள்ளிக் கூடத்தில.. யா சொல்லித் தருவாங்க...
நாம தெரிஞ்சுக்கிடட்டும்....ன்னே அரசல் புரசலா
வீட்டுத் திண்ணையில பெரியவங்க பேசிக்கிட்டு இருப்பாங்க...

நாம வீட்டுக்குள்ள இருந்துகிட்டே காதுல வாங்கி 
மனசு..ல பதிய வெச்சிக்க வேண்டியது தான்!...

மாங்காய்... ல இவ்வளவு ரகசியம் இருக்கா...
நீங்க...ல்லாம் கொடுத்து வெச்சவங்க அக்கா!...

முக்கனிகள்...ல முதல் கனி மாம்பழம் தானே!..
இந்தப் பழத்தால தானே கயிலாயத்து..ல கலவரம் உண்டானது!..

ஆமா.. நானும் திருவிளையாடல் பார்த்திருக்கேன்...

ஈஸ்வரனுக்கு தயிர் சோற்றோட மாம்பழம் கொடுத்தவங்க யாரு..ன்னு
தெரியுமா?...

ஓ.. தெரியுமே!.. நம்ம காரைக்கால் அம்மையார்!..

சரி... ஈஸ்வரனுக்கு செந்நெல் சோறும் செங்கீரைக் கூட்டும்
உப்பிட்ட மா வடுவும் கொடுத்தவர் யாருன்னு தெரியுமா?...

தெரியாதே!... உப்பு போட்ட மா வடு யார் கொடுத்தாங்க.. அக்கா!..


அவர் பேர் தாயனார்.. திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில கணமங்கலம் ...ங்கற ஊர்க்காரர்... ஈசனுக்கு தினமும் நிவேத்தியம் கொண்டு போறப்ப ஒருநாள் வயல்...ல தடுக்கி விழுந்து சோற்றுப் பானை ஒடைஞ்சி போகுது..

அடப்பாவமே!...

கடவுளுக்கு கொண்டு போனது இப்படி ஆயிடிச்சே..ன்னு வருத்தப்பட்டு கழுத்தை அறுத்துக்கிறப்போ பூமியில இருந்து ஈசன் வெளிப்பட்டு மா வடுவை
விடேர்..விடேர்..ன்னு கடிச்சு சாப்பிட்டுட்டு..

தாயனே.. நீ கொண்டு வந்த சோற்றையும் கீரையையும் மா வடுவையும் நான் சந்தோஷமா சாப்பிட்டேன்.. நீ கழுத்தை அறுத்துக்காதே!..ன்னு - அருள் செஞ்சதா புராணம்..

இதனால அரிவாள் தாய நாயனார்.. அப்படின்னு சிறப்பு..
அறுபத்து மூன்று அடியார்கள்...ல இவரும் ஒருவர்...

ம்.... அப்போ பக்தியோட கொடுத்தால் கடவுள் வந்து சாப்பிடுவார்..ங்கிறீங்க!..
அக்கா.. மாங்காய்..ல என்னென்ன செய்யலாம்?...

உப்பு தடவி வைக்கிற அடை மாங்காய், வற்றல், ஊறுகாய், தொக்கு, 
மாங்காய் இனிப்பு பச்சடி, கார பச்சடி...

சாம்பார், கார குழம்பு, வற்றல் குழம்பு 
இதுல எல்லாம் மாங்காய் போடறதே தனிச்சுவை...

வண்டு துளைக்காத மாங்கொட்டைய உடைச்சி 
உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து தக்காளியோட சேர்த்து
மாங்கொட்டை ரசம் வைக்கலாம்...

அந்தத் துவர்ப்பு உடம்புக்கு ரொம்பவும் நல்லது... ஆனா - 
மாம்பிஞ்சில இருக்குற பால் உதட்டுல பட்டால் புண்ணாகி விடும்.. 

அப்புறம் மாம்பழ லஸ்ஸி, மில்க் ஷேக்!.. 

சரி.. அவ்வளவு தானா மாவடு புராணம்!..

இருக்குதே.. இன்னும் இருக்குதே!..
அம்பாளுக்கே வடு வகிர் கண்ணி..ன்னு திருப்பேர்..
மீன் மாதிரி கண்.. அதனால மீனாட்சி... அவ இருக்கிறது மதுரையில...

இங்கே அம்பிகைக்கு மாவடு மாதிரி கண்களாம்!..
மாவடுவுக்கு அவ்வளவு பெருமை...

எந்த ஊர்ல அக்கா... இப்படியான பேர்?...

மேலப் பெரும்பள்ளம் .. பூம்புகார் போற வழியில் இருக்கு..
தேவாரப் பதிகம் பெற்ற கோயில்.. திருவலம்புரம்..ன்னு தொன்மைப் பேர்...



ஜாக்கெட்..ல மாவடு எம்பிராய்டரி எல்லாருக்கும் பிடிக்கும் தானே...
மாம்பழ நிறச் சேலை கட்டுனா பொண்ணுங்களுக்கே தனியழகு...  

பட்டு ஜரிகை..ல கூட மாங்காய் டிசைன்... 
எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!..



அதுமட்டுமா!.. எனக்கு ரொம்பப் பிடிச்சது மாங்காய் மாலை...நெக்லஸ் தான்!..
பத்தாவது படிக்கிறப்போ மூனரை பவுன்...ல போட்டிருந்தேன்...
மாம்பிஞ்சு மாதிரி தொங்கலும் இருந்துச்சு..

அக்கா... ஆச்சர்யமா இருக்கு!..
மாவடு மாங்காய்... க்கும் பெண்களுக்கும் இவ்வளவு தூரம் ராசியா!..

இன்னொன்னும் கேளும்மா!...
மாம்பழக் கன்னத்தை வர்ணிக்காதவங்க யாரு!..
மாம்பழக் கன்னத்தை பிடிக்காதவங்க யாரு!..

ஆமா.. இந்தப் பாட்டுக்காரனுங்களுக்கு வேற வேலை இல்லை... 
எதையாவது ஆபாசமா எழுதி...

அதை விடு... பராசக்தி படத்தில 
கண்ணே கண்மணியே.. கண்ணுறங்காயோ... - ங்கிற பாட்டுல

உந்தன் மாம்பழக் கன்னத்திலே
முத்தமாரி பொழிந்திட வருவார்..

- அப்படின்னு தாலாட்டு வரும்... நல்ல இனிமையா இருக்கும்!..

கவியரசரும் 
மாவடுக் கண்ணல்லவோ.. 
மைனாவின் மொழியல்லவோ!.. - ன்னு பாடுவார்..

மாந்தோப்புக் கிளிகள்
நாணத்தைப் பற்றிச் சொல்றப்போ,
செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி!.. - என்பார்..

இன்னொரு பாட்டில்,
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்..
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்!.. - அப்படின்னு வரும்...

மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்..
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலைத் தோரணங்கள்...

இது வாலி எழுதுன பாட்டு...

மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ.. - ந்னு ஒரு பாட்டு..
மாஞ்சோலைக் கிளி தானோ.. மான் தானோ.. - ந்னு ஒரு பாட்டு..
மாம்பூவே.. சிறு மைனாவே.. - ந்னு ஒரு பாட்டு..

மாம்பழம் மட்டுமா....
மாம்பழத்து வண்டு கூட பாட்டுக்குள்ள வந்திருக்கு...

சரி.. அக்கா நான் கிளம்பறேன்!...

இரு.. தாமரை.. நேத்து நெல்லை அவங்க சொன்ன பக்குவத்துல 
மாங்கா ஊறுகாய் செஞ்சேன்.. நீ கொஞ்சம் எடுத்துக்க...

அவ்வளவு சீக்கிரம் செஞ்சிட்டீங்களா!..

மாங்கா ஊறுகாய் செய்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்!..
அது சரி.. நீ எப்போ மாங்காய் திங்கப் போகிறாய்!...

என்ன கேக்கிறீங்க... ஒன்னும் புரியலையே...


உன்னோட டார்லிங் எப்போ துபாய்...ல இருந்து வர்றார்?...
நீ எப்போ மாங்காய் திங்கப் போகிறாய்!...
நீ எப்போ தாலாட்டு பாடப் போகிறாய்!...

அவங்க பங்குனிப் பொங்கலுக்கு வர்றாங்களாம்!..

ஓகோ... மாங்காய்க்கு இப்பவே சொல்லிட வேண்டியது தான்!...
முத்தத்துல மணித்தொட்டில் கட்டிட வேண்டியது தான்!...

போங்க அக்கா.. எனக்கு வெக்கமா இருக்கு!...

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள் தாமரை...
*
வாழ்க நலமுடன்..
வளர்க வளமுடன்.. 
***