மானம்பாடி ஸ்ரீ நாகநாதர் திருக்கோயிலின் இன்றைய நிலை:-
தொடர்புடைய பதிவுகள் -
அற்றைத் திங்கள் 1
அற்றைத் திங்கள் 2
***
நான் பயணித்த பேருந்து மானம்பாடியில் நின்றது..
இங்கே இறங்கிக் கேளுங்கள்.. சொல்லுவார்கள்.. பக்கம் தான்!..
விவரம் கூறிய நடத்துனர் இறக்கி விட்டார்.. பேருந்து புறப்பட்டுச் சென்றது..
இன்றைய மானம்பாடியில் -
ராஜேந்திர சோழன் எழுப்பிய கோயிலுக்கு
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயர்
மாதா கோயில்!..
இப்படிப் பெயர் ஏற்படக் காரணம் -
நாகநாதர் ஆலயத்திற்கு வடபுறமாக நூறடி தொலைவில்
மிகச் சமீப காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம்...
பேர்கொண்ட மன்னனால் கட்டப்பட்டு
ஆயிரம் வருடங்களாக அங்கிருக்கும்
சிவன் கோயிலுக்கான பேருந்து நிறுத்துமிடம் -
சோழனின் பெயரால் இல்லை!..
அவன் எழுப்பிய கோயிலின் பெயரால் இல்லை!..
இதுவே மிகப்பெரிய சாட்டையடி..
கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் கட்டப்படுவதற்கு முன்பாக
சிவாலயத்துக்கு அருகில் இருக்கின்ற பேருந்து நிறுத்தத்திற்கு என்ன பெயர்?..
அதை எல்லாம் விசாரிக்கும் மனநிலை எனக்கு இல்லை..
எதிரில் வந்த இளைஞரிடம் விசாரித்தேன்..
நாகநாதர் கோயிலுக்கு எப்படிச் செல்வது?..
சாலையின் தென்புறம் தெரிந்த மதிற்சுவரைச் சுட்டிக் காட்டினார்..
அதுதான் கோயில்.. - என்றார்..
|
அம்பாள் சந்நிதி |
கோயில் கோபுரம் எதையும் காணவில்லையே!.. - எனக் கேட்டேன்..
அவர் சொன்னார் - அதைத்தான் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டார்களே!..
அதைக் கேட்டதும் மனம் திடுக்கிட்டது.. கண்களில் நீர் திரையிட்டது..
காலமகள் காப்பாற்றித் தந்த கலைச் செல்வங்களைக்
கை நழுவ விட்டோமே.. கை கழுவி விட்டோமே!..
நாம் மன்னிப்புக்கு உரியவர்கள் தானா?..
மனம் பேதலித்தது..
அந்த இடத்திலிருந்து கோயிலை நோக்கி என்னால் நடக்க முடியவில்லை..
கால்கள் தளர்ந்தன..
கால்கள் வலிக்கவில்லை ஆயினும் மனம் வலித்தது..
பரபரப்பான சாலையைக் கவனமாக கடந்தேன்..
இன்றைய நாளில் -
ஸ்ரீ நாகநாதர் கோயில் எனப்படும் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயிலை நெருங்குவதற்குள் தொண்டையை அடைத்துக் கொண்டது துக்கம்..
மாமன்னன் ராஜேந்திர சோழன் இந்த சிவாலயத்தை எழுப்பும் போது
எப்படியிருந்ததோ இதன் தோற்றம்.. நாம் அறியோம்..
ஆனால், இன்றைக்கு?..
செங்கல் கொண்டு பிற்காலத்தில் கட்டப்பட்ட நுழைவாயில்..
அதுவும் பாளம் பாளமாக வெடித்திருந்தது..
சாதாரணமான மூங்கில் தட்டிகள் தான் கதவுகளாக இருக்கின்றன..
அவற்றில் பச்சை நிறத்தில் வலை ஒன்று பார்வை மறைப்பாக கட்டப்பட்டிருக்கின்றது..
நான் அங்கே சென்ற நேரத்தில் கோயிலின் முன்பாக சிலர் நின்றிருந்தனர்..
அவர்களுக்குள் வாக்கு வாதம்..
கோயிலுக்கு உள்ளே போகணும்!..
அதெல்லாம் முடியாதுங்க.. எங்களுக்கு வந்த உத்தரவு தான்..
அப்படி..ன்னா அதை காட்டுங்க!..
அதையெல்லாம் உங்க கிட்ட காட்டணும்..ன்னு அவசியமில்லை..
நாங்க இன்னது செய்யணும்..ன்னு சொல்றதுக்கு நீங்க யாரு?..
நான் சாமி கும்பிடப் போறேன்!...
கோயில் வேலை ஆகிக்கிட்டு இருக்கு.. இப்ப யாரையும் உள்ளே விட முடியாது.. இங்கேயே நின்னு கும்பிட்டுப் போங்க!..
நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த
எனக்குள் கலக்கம்..
இவ்வளவு தூரம் வந்ததற்குப் பயனில்லையோ!.. மனம் பதறியது..
ராஜேந்திர சோழன் எழுப்பிய திருக்கோயில் தரை மட்டமாகக் கிடப்பது
கோயிலின் மதில் ஓரமாக - நின்ற இடத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது..
தனியார் தொலைக்காட்சியிலிருந்து வந்திருந்தவர்கள் சற்றே அலுப்புடன் நின்றிருந்தார்கள்..
அவ்வழியாக வந்தவரிடம் மைக்கினை நீட்டினார் ஒருவர்..
அவர் பேசுவதற்குத் தடுமாறினார்..
இன்னொருவர் வெளியில் இருந்தபடியே இடிந்து கிடந்த மதிலின் வழியாக கோயிலின் சிதைவுகளை வீடியோ படமாக்கிக் கொண்டிருந்தார்..
அதற்குள் அங்கிருந்த மற்றொருவர் - என்னைப் பார்த்து,
நீங்க யாருங்க?.. - என்றார்...
நான் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறேன்!..
கையில் இருந்த பூச்சரத்தினைக் காட்டினேன்..
அதெல்லாம் பூசை முடிஞ்சி போச்சு.. ஐயரு பூட்டிட்டு போய்ட்டார்!..
கோயிலின் வடக்கு பக்கமாக இருந்த குடிசையைக் கைகாட்டினார்..
அவர் சுட்டிக் காட்டிய குடிசைக்கு தகரம் வேயப்பட்டிருந்தது..
சாதாரண மரச் சட்டங்களால் ஆன கதவு..
அருகில் ஒரு கொட்டகை.. அதுவும் தகரங்களால் அமைக்கப்பட்டிருந்தது..
அதன் மூன்று பக்கமும் அடைப்புகள் இல்லாமல் திறந்து கிடந்தது..
மறுபடி எப்போது வருவார்?..
எப்போ வருவார்,,ன்னு தெரியாதுங்க.. வந்தா தான் உண்டு.. பெரிய ஆபீசர் எல்லாம் வர்றாங்க.. பிரச்னையா இருக்கு..போங்க.. போங்க!...
இதற்கிடையே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த ஒருவர் -
யோவ்.. நீ யாரு?.. வர்றவங்கள வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு.. கோயிலு..ன்னா நாலு ஜனம் வரத் தான் செய்வாங்க.. நீ என்ன விரட்டுறது?..
உடனே இவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் மூண்டது.. ஒரே கூச்சல்..
அந்தவேளையில் -
அதோ வர்றாருங்க வாட்ச்மேன்.. அவரைக் கேளுங்க நீங்க!.. - என்றார் ஒருவர்..
அவரிடம் சென்று விவரம் சொல்லிக் கேட்டேன்...
அருகிருந்த பெண்மணியிடம் விக்ரகங்கள் வைக்கப்பட்டிருந்த குடிசையைத் திறந்து விடச் சொன்னார்...
அவருக்கு நன்றி கூறிய நான் -
இங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாமா?.. - எனக் கேட்டேன்...
அதற்கெல்லாம் இப்போ அனுமதி இல்லைங்க.. பிரச்னை ஆகி விட்டது!.. - என்றார்..
இதற்கு மேல் கேட்பதற்கு ஏதும் இல்லை..
கோயில் பழுது பட்டிருந்தாலும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தபோது
வந்து தரிசிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட மடமையை எண்ணி வருந்தினேன்..
துக்கம் தொண்டையை அடைத்தது..
அதற்குள் - கோயிலாக இருந்த குடிசை திறக்கப்பட்டது..
பழுதுபட்டிருந்த தலைவாயிலின் -
மூங்கில் கதவுகளைக் கடந்து கோயிலுக்குள் நடந்தேன்..
ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்திலும்
அதற்குப் பின் பல நூறு வருடங்கள் வரையிலும் -
இத்திருக்கோயிலில் என்னவெல்லாம் நடந்திருக்கும்!..
எத்தனை எத்தனை பேரிகைகள்
எத்தனை எத்தனை துந்துபிகள்
எத்தனை எத்தனை முழவுகள்
எத்தனை எத்தனை சங்குகள்..
அவையெல்லாம் எழுப்பிய பேரொலி என் காதுகளில் கேட்டது..
தீபங்கள் ஏற்றியவர் எத்தனை பேர்?..
தேவாரம் இசைத்தவர் எத்தனை பேர்?..
பல்லாண்டு பாடியவர் எத்தனை பேர்?..
பதம் காட்டி ஆடியவர் எத்தனை பேர்?..
செவிகளுக்கு அருகாக ஜதிஸ்வரங்களுடன் திருமுறை இன்னிசை கேட்டது..
திறக்கப்பட்ட தகரக் குடிசையின் உள்ளே -
வெண்கொற்றக் குடையினோடு சூரிய சந்திர பட்டங்களுடன்
ரிஷப வாகனத்தில் தேவியுடன் வலம் எழுந்தருளிய ஸ்ரீ கயிலாய நாதர்
இன்றைக்கு ஏழையினும் ஏழையாய் வீற்றிருந்தார்!..
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மாறாத பேரெழிலுடன்!...
அப்படியே மனம் மடங்கியது.. குரல் வற்றியது.. ஜீவன் ஒடுங்கியது..
ஓலைக்குடிசையின் படல்களைத் திறந்து விட்ட அம்மையாரிடம் பூச்சரங்களை கற்பூரக் கட்டிகளை ஒப்படைத்தேன்..
பூச்சரத்தினை அம்மையப்பனுக்கு சாத்தி கற்பூர ஆராதனை செய்தார்..
ஏதேதோ நினைவுகள் அலையலையாய் நெஞ்சிற்குள் மூண்டெழுந்தது..
கண்களில் நீர் வழிந்தது.. ஏதோ பிதற்றினேன்..
அந்த அம்மையார் ஆற்றுப்படுத்தினார்...
திருநீற்றினைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்..
சோழன் எழுப்பிய ஆலயம் பிரிக்கப்பட்டுக் கிடந்தது..
பிரித்துக் கிடக்கின்ற கற்களை நான் புகைப்படங்கள் எடுத்து விடாதபடிக்கு - என்னைக் கண்காணித்துக் கொண்டே ஒருவர் தொடர்ந்து வந்தார்..
சிவாலயம் பிரிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகின்றது..
அஸ்திவாரத்திலிருந்து சில அடி உயரத்திற்கு கற்களை அடுக்கி ஏதோ ஒருவகை சிமெண்ட்டினால் பூசி வைத்திருக்கின்றார்கள்..
பிரகாரம் முழுதும் பிரிக்கப்பட்ட கருங்கல் பாளங்கள்..
தெற்கு மேற்கு வடக்கு - என, மூன்று கோட்டங்களிலும் இருந்த
நடராஜர், கணபதி, கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை முதலான திருமேனிகள் -
மூல மூர்த்தி இருக்கும் தகரக் குடிலின் அருகில் -
தகரக் கொட்டகையின் நிழலில் கிடத்தப்பட்டிருக்கின்றன..
மகர தோரணம் முதலான சிற்ப வேலைப்பாடுகளுடைய தூண்களும் கற்களும் கோயில் பரப்பில் ஆங்காங்கே கிடந்தன..
இவற்றுக்கிடையே நான் காண வந்த திரவியம் எங்கே கிடக்கின்றது?..
எதைத் தேடி வந்தேன்!?..
கலைப் பெட்டகம் ஒன்றினைத் தேடி வந்தேன்!..
அதனை விழிகளால் தேடினேன்!.. எங்கே.. எங்கே?..
அதோ.. அதோ.. அந்த இடுக்குக்குள்!..
ராஜேந்திர சோழனுடன் அவனுடைய தேவியர் திகழும் கருங்கற்படைப்பு
கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது...
|
நன்றி - திரு குடவாயில் பாலசுப்ரமணியன் |
ராஜேந்திர சோழனுடன் அவனுடைய தேவியர் மற்றும் அரசு அலுவலர்கள்..
இப்படித்தான் திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் கூறுகின்றார்..
ஆனால்,
அந்தக் கலைப்படைப்பில் விளங்குபவர்கள் -
|
நன்றி - திரு பாலகுமாரன் |
ராஜராஜசோழனுடன் அவனுடைய தேவியர் மற்றும் இளவரசன் ராஜேந்திரன்!..
- என்று திருமிகு பாலகுமாரன் கூறுகின்றார்..
எதுவாயினும் காண்பவர்க்குக் கலைவிருந்து..
சரிந்து கிடக்கும் கலைச் செல்வங்களுக்கு இடையே -
அந்தக் கலைச் சிற்பத்தைச் சுட்டிக் காட்டி -
இதை மட்டும் படம் எடுத்துக் கொள்கின்றேன்!.. - என்று மன்றாடினேன்..
ஈவு இரக்கம் காட்டப்படவில்லை...
ஆனால் - கோயில் வளாகத்தின் வெளியே நின்று படங்கள் எடுத்துக் கொள்வதற்கு எந்தத் தடையும் சொல்லவில்லை...
அந்த அளவில் கோயிலுக்கு வெளியே நின்று
மதிற்சுவரின் வழியாக எடுக்கப்பட்ட படங்களைத் தான்
இன்றைய பதிவில் வழங்கியுள்ளேன்!..
கோயில் இப்போது பிரித்துப் போடப்பட்டிருந்தாலும் -
தொடர்ந்து வேலை நடக்கும்.. அடுத்த சில ஆண்டுகளில் சிறப்புடன் விளங்கும்.. - என்று சொல்லப்படுகின்றது...
எந்த அளவுக்கு சிறப்பு என்பது தான் கேள்வி!..
தகரக்குடிசைக்குள் -
ஸ்ரீ நாகநாத ஸ்வாமி, சௌந்தர்ய நாயகி அம்பாள் - திருமேனிகளுடன்
விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டீசர், சூரியன் - ஆகிய திருவுருவங்கள் வைக்கப்பட்டிள்ளன..
குடிசைக்கு வெளியே நடராஜர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்கை - முதலான திருவுருவங்கள் கிடத்தப்பட்டுள்ளன..
ராஜேந்திரன் எழுப்பிய தொன்மையான கருங்கல் கட்டுமானத்தின் ,ஏலாக எழுப்பட்ட செங்கல் விமானம் காலப் போக்கில் பழுதுற்றது,,
அங்கே முளைத்த செடி கொடிகளால் விமானம் பிளவு பட்டது..
அம்பாள் கோயிலும் இப்படியே ஆகியிருக்கின்றது..
ஏனைய சந்நிதிகளான விநாயகர், முருகன், சண்டீசர் - ஆகிய சந்நிதிகள் பல வருடங்களுக்கு முன்பே சிதிலமடைந்து விட்டன..
வருமானம் இல்லாத கோயில் என்று அறநிலையத்துறையும் கண்டு கொள்ளவில்லை..
பழுதான கோயில் என்று மக்களும் கண்டு கொள்ளவில்லை..
அம்பாள் சந்நிதி சிதிலமடைந்திருந்தாலும்
இடிக்கப்படவோ பிரிக்கப்படவோ இல்லை..
விநாயகர், முருகன், சண்டீசர் - சந்நிதிகள் முற்றிலும் சிதிலமாகி உருக்குலைந்த நிலையில் அப்படியே நிற்கின்றன..
ராஜேந்திர சோழன் எழுப்பிய கற்றளி மட்டுமே முற்றாகப் பிரித்துப் போடப்பட்டிருக்கின்றது...
சில ஆண்டுகளுக்கு முன்பு
இந்தக் கோயிலைப் பற்றி அறிந்த பின்
வந்து தரிசிக்காமல் காலம் கடத்தி விட்டதற்கு மிகவும் வருந்தினேன்...
கடல் கடந்த நாட்டில் வேலை செய்யும் எனக்கு
ஆண்டுக்கு ஒரு முறை விடுப்பு..
அங்கிருந்து தாய்நாட்டிற்கு வரும்போது
நெஞ்சில் நிறைந்திருக்கும் எண்ணங்களையெல்லாம் -
இங்கே குறுகிய நாட்களுக்குள் நடத்தி விடுவதற்கு முடியவில்லை...
என்ன செய்வது!..
எனக்கென்று கேட்கவும் காணவும் எவையெல்லாம் விதிக்கப்பட்டிருக்கின்றனவோ - அவை மட்டுமே!..
கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் செல்லும் சாலையில் ( இது தான் சென்னை நெடுஞ்சாலை) சோழபுரத்தை அடுத்து உள்ளது மானம்பாடி..
வட மாவட்டங்களின் நகரங்களுக்குச் செல்கின்ற
அரசுப் பேருந்துகள் உள்பட எவையும் இவ்வூரில் நிற்பதில்லை..
குடந்தையிலிருந்து அணைக்கரை - திருப்பனந்தாள் முதலான சிற்றூர்களுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகள் மட்டுமே மானம்பாடி கோயிலின் அருகே நின்று செல்கின்றன..
மானம்பாடி திருக்கோயிலின் இன்றைய நிலை மிகவும் சோகம்..
மிகுந்த வருத்தமாக இருக்கின்றது...
ஊடக வெளியில் - எதையெல்லாமோ சொல்கின்றார்கள்..
யார் யாரோ - பொங்கியெழுகின்றார்கள்.. ஆர்ப்பரிக்கின்றார்கள்...
எது எப்படியிருந்தாலும் -
கோயிலின் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடக்க வேண்டும்..
அதுவும் கவனமாக நடக்க வேண்டும்..
நம் முன்னோர்களின் சிறப்புகளை எல்லாம் சிந்தாமல் சிதறாமல்
அடுத்த தலைமுறையிடம் சேர்க்கவேண்டும்..
அது தான் நல்லோர்களின் நாட்டமாக இருக்கின்றது..
அவ்வண்ணமே நாமும் விரும்புவோம்..
நல்லதே நடக்கட்டும்!..
***