நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 17, 2016

கன்னித் தமிழ்ப் பொங்கல்

அக்கா!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

பொங்கல் நல்வாழ்த்துகள்!.. நல்லாயிருக்கீங்களா அக்கா?.. 

நல்லா இருக்கேன் தாமரை.. உனக்கும் நல்வாழ்த்துகள்.. நீ எப்படி இருக்கிறாய்!..

நலந்தான் அக்கா.. அதென்ன கூடையில.. மூட்டை முடிச்சு மாதிரி தெரியுது?..

ஆமாம்... தாமரை.. அதெல்லாம் கட்டு சாத மூட்டை.. சாயுங்காலமா பெரிய கோயிலுக்குப் போறோம்.. இன்னிக்கு கன்னிப் பொங்கல் இல்லையா!.. கோயில்ல சாமி கும்பிட்டுட்டு.. அப்படியே பிரகாரத்தில இருந்து எல்லோருமா சாப்பிட்டு வருவோம்.. அதுக்காகத் தான் உன்னையும் வரச் சொல்லி அனுப்பினேன்..

அதுதானா விஷயம்!.. நானும் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்!.. அக்கா.. எனக்கொரு சந்தேகம்?..

என்னம்மா.. என்ன சந்தேகம்.. கேளேன்!..


கன்னிப் பொங்கலா.. காணும் பொங்கலா?.. இல்லே.. கனுப் பொங்கலா!..

எல்லாமும் ஒன்றுதான்.. அவங்க அவங்க வழக்கத்தைத் தான் இப்படி எல்லாம் சொல்றாங்க!..

எப்படி?.. 

கனுப்பொங்கல்..ங்கறது ஒரு சாரார் அவங்க குடும்பத்துக்குள்ள அண்ணன் தம்பி நல்லாயிருக்கணும்..னு வேண்டிக்கிட்டு நோன்பு இருந்து காப்பு கட்டி சாமி கும்பிடுவாங்க..

சரி!.. 

இன்னொன்னு காணும் பொங்கல்..ன்னு.. இது இவங்களா ஒரு புது அர்த்தம் சொன்னது.. ஒருத்தரை ஒருத்தர் போய்ப் பார்த்து நலம் விசாரிக்கிற நாள்.. அப்படின்னு புதுசா பேர் சொல்றாங்க.. சென்னையில உள்ள ஜனங்களுக்கு கடற்கரையில பெருந்திரளாக் கூடுவது சந்தோஷம்..

ஓ!.. 

ஆனா.. நம்ம ஊர்ப்பக்கம் எல்லாம் கன்னிப் பொங்கல்..ன்னு சொல்லி செய்ற வழக்கம் தான் பழைமையானது..

அது எப்படிக்கா!?.. எங்க கிராமத்தில பசங்களுக்கு மஞ்சு விரட்டு.. பொண்ணுங்களுக்கு கோலம் போடுறது.. அது இது..ன்னு விளையாட்டுப் போட்டிகளா நடக்கும்.. கன்னிப் பொங்கல் ..ன்னு தனியா செய்ததில்லை. .

இருந்திருக்கும் தாமரை.. கால சூழ்நிலையில நாமே நம்ம பாரம்பர்யத்தை ஒழித்துக் கட்டுகிறோம் இல்லையா.. அதனால மறைஞ்சு போயிருக்கும்!..

நீங்க சொல்லுங்க அக்கா!.. கன்னிப் பொங்கல்..ன்னா என்னான்னு!.. அது சரி.. அத்தானும் பிள்ளைகளும் எங்கே?.. 

அவங்க எல்லாம்.. மஞ்சு விரட்டு பார்க்கப் போயிருக்காங்க!..

எவனாவது கொண்டு போயிறப் போறான்..
மஞ்சு!. மாட்டை பத்திக்கிட்டு வாம்மா!..

அதான் நடத்தக் கூடாதுன்னு தடை போட்டிருக்காங்கள்..ல!..

அது ஜல்லிக்கட்டுக்கு!.. இது மஞ்சு விரட்டு!..


என்னக்கா.. சொல்றீங்க!.. எல்லாம் ஒன்றுதானே!.. 

இல்லேம்மா.. வேற.. வேற!..

என்னவோ போங்க!.. 
அந்தப் பக்கம் >>> குமார் அண்ணன் ஒன்னு சொல்றார்.. 
இந்தப் பக்கம் >>> இளங்கோ ஐயா ஒன்னு சொல்றாங்க..  
இங்கே நீங்க ஒன்னு சொல்றீங்க.. எனக்கு தலை சுத்துது!.. 

ஓ.. வலைப்பூவெல்லாம் படிக்க ஆரம்பித்தாயிற்றா!..  

எல்லாம் நீங்க பழக்கி வைத்தது!.. 

அதுசரி... உங்க இல்லத்தரசு தீபாவளிக்கும் வரவில்லை.. பொங்கலுக்கும் வரவில்லை.. என்ன சேதி!..

அதையேங் கேக்கிறீங்க... கூட வேலை செஞ்ச எகிப்துக்காரன் போட்டுட்டு ஓடிட்டானாம்.. அதனால வேலைப்பளு அதிகமா ஆயிடிச்சாம்.. ஒருவழியா சித்திரையில குலதெய்வம் கொடைவிழாவுக்கு வர்றாங்களாம்... 

ஓ.. சித்திரையா!.. அப்ப நித்திரை?..

அக்கா.. அக்கா.. நீங்க கன்னிப் பொங்கலைப் பத்தி சொல்லுங்களேன்... 

இது பொதுவா நம்ம தஞ்சாவூர் கிராமங்கள்..ல நடக்கிறது.. மற்றபடி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பழக்கம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்..

சொல்லுங்க.. அக்கா!.. 

இந்த கன்னிப் பொங்கல் வழக்கமா தை மூணாம் நாள் அப்படின்னாலும் மார்கழி முதல் தேதியிலயிருந்தே ஆரம்பமாயிடும்..



எப்படி?.. 

அதான் வாசல்ல கோலம் போட்டு விளக்கேற்றி பசுஞ்சாணத்தில பூசணிப் பூ வைக்கிறார்களே அப்போதே ஆரம்பித்து விடுகின்றது..

என்னக்கா.. சொல்றீங்க!.. 

ஆமாம்மா!.. அப்போதெல்லாம் பொண்ணுங்க பெரியவளாகி விட்டதுமே - படிப்பு நின்னுடும்.. வீடே கதின்னு.. கிடப்போம்.. ஆனாலும் சும்மா இல்லே.. அடுத்த வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் அத்துப்படியாயிடும்..

இந்த வீட்டுல பெண்கள் இருக்காங்க.. அப்படிங்கிறதை ரசனையோட சொல்றதுதான் வாசல்ல மாக்கோலமும் பூசணிப் பூவும்!..

அடடா.. இப்படியொரு உத்தியா!.. 

அதுவரைக்கும் தெருவில விளையாடிட்டு இருந்த பொண்ணுங்க வீட்டுக்குள்ள உட்கார்ந்ததும் - பசங்களுக்கு இருப்பு கொள்ளாது..

இப்படியும் அப்படியுமா தாவுவானுங்க.. சைக்கிள்..ல பாய்வானுங்க.. கன்னுகுட்டிய விரட்டிக்கிட்டு ஓடுவானுங்க...

இலை மறைவு காய் மறைவு.. இல்லையா!.. 

கிளித் தோப்பு பொங்கல் எப்போதடா வரும் ..ன்னு பேய் மாதிரி அலைவானுங்க!..

அதென்ன கிளித்தோப்பு பொங்கல்?.. 

இது தான்.. மாட்டுப் பொங்கல் கழித்த மறுநாள் ஊரே கலகலப்பாயிடும்... அது ஒரு பெரிய இலுப்பைத் தோப்பு..   இலுப்பை மரத்தில மரங்கொத்தி ஏகப்பட்ட பொந்து போட்டு வெச்சிருக்கும்.. இலுப்பை மரப் பொந்து, இலுப்பைப் பழம் இதெல்லாம் கிளிக்கு ரொம்ப இஷ்டம்.. அதனால நூற்றுக் கணக்கான மரத்தில ஆயிரக்கணக்கான கிளிகள்..

இனி அந்த சந்தோஷம் என்றைக்கும் வராது.. இல்லையா!.. 

இந்த இலுப்பைத் தோப்பு தான் கன்னிப் பொங்கல் அன்றைக்கு இளம்பெண்கள் கூடும் இடம்..

சரி.. ஊர்ல.. இப்படி ஏதாவது தோப்பு இல்லேன்னா?.. 

கோயில் மந்தை, குளத்தங்கரை, ஆற்றங்கரை... இப்படி ஏதாவது ஒரு இடம் இல்லாத ஊர்கள் ஏது தாமரை!..

அட.. ஆமா.. இல்லே!.. 

எங்களோட விரதம் இருக்கறவங்களும் வருவாங்க.. உச்சிக்கு அப்புறம் சூரியன் இறங்கற வேளையில எல்லாருமே கிளித் தோப்புக்கு வந்துடுவாங்க..
பொங்கலுக்கு வேண்டியதும் பூஜைக்கு வேண்டியதும்..ன்னு எல்லாவற்றையும் கணக்கா கொண்டு போய்விடுவோம்..

அங்கே - வயதான சுமங்கலிகள் எல்லாரும் கூடி மண்ணால மேடை கட்டி அதில பூங்கரகம் மாதிரி செஞ்சு வைப்பார்கள்.. கிளித் தோப்புக்கு பக்கத்திலயே பொன்னளந்த மாரியம்மன் கோயில்!.. கோயிலுக்கு எதிரே பெரிய தாமரைக் குளம்!..

அதென்னக்கா.. பொன்னளந்த மாரியம்மன்?.. 

மக கல்யாணத்துக்குன்னு யாராவது பூ அளவுக்கு வரங்கேட்டா - மகமாயி மனமிரங்கி பொன்னளந்து கொடுத்து கல்யாணத்தை நடத்தி வைப்பாளாம்.. அதனால தான் பொன்னளந்த மாரி!..

எல்லா ஊர்லயும் இப்படி இருந்தா எப்படி இருக்கும்!.. 

புது செங்கல்லால அடுப்பு.. புதுப்பானையில பச்சரிசி கழுவிப் போட்டு கோயில் குளத்தில தண்ணீர் எடுத்து - அதில தேங்காய உடைச்சி ஊத்தி தயாரா இருப்போம்.. கோயில் திருவிளக்கில இருந்து ஜோதி எடுத்து வருவார் பூசாரியார்.. முதல் அடுப்பை ஏற்றி அதிலயிருந்து ஒவ்வொரு அடுப்பாக தீ மூட்டி பொங்கல் வைப்போம்..

இதுவரைக்கும் யார் கண்ணுலயும் படாம இருந்த எங்களை நேருக்கு நேராப் பார்த்ததும் விடலைகளுக்கு குஷி பிய்த்துக் கொண்டு போகும்!..

அப்படிப் போடுங்க அருவாளை!.. 

பாவாடை தாவணி.. ரெட்டை ஜடை.. குஞ்சம் வைத்த பின்னல்.. மருதாணி, நெத்திச் சுட்டி, வளையல், கொலுசு அப்படின்னு பொண்ணுங்க அழகைப் பாத்ததும் ஏகத்துக்கும் தவிச்சுப் போய்டுவானுங்க..

அந்தப் பக்கம் இந்தப் பக்கம்.. ன்னு சுத்திச் சுத்தி வருவானுங்க.. ஆனா - எங்க கூட வந்திருக்கிற கிழவிங்க விடமாட்டாங்க...

அடடா!..

இவளுங்களும் சும்மா இருக்க மாட்டாளுங்க..  ஊஞ்சலாடுறது அம்மானை விளையாடுறது கோலாட்டம் ஆடுறது கண்ணைக் கட்டிக்கிட்டு தேடுறது அப்பப்பா!.. மருதாணி போட்ட கையைக் காட்டி காட்டி ஒரே களேபரம் தான்!..   

ஓஹோ.. இது வேறயா?.. 

புது மஞ்சளைக் குடைஞ்சி அதுக்குள்ள இத்தினுயூண்டு சுண்ணாம்பை வெச்சதும் அது ஒரு மாதிரியான சிவப்பாகி விடும்.. அதை கால்..ல செம்பஞ்சுக் குழம்பு மாதிரி பூசிக்கிட்டு லேசா கொலுசு தெரியிற மாதிரி இங்கிட்டும் அங்கிட்டும் நடந்தாளுங்க..ன்னா.. பசங்க மயக்கம் போட்டு விழுந்திடுவானுங்க!..

சும்மா சொல்லக் கூடாது.. அக்கா.. உங்களையெல்லாம்!..

போங்கடா அந்த பக்கம்!.. ந்னு துரத்திக்கிட்டு போனால் - எவனாவது ஒருத்தன் - ஏ.. கிழவி!.. உனக்கும் தாத்தா இப்படித்தானே கொக்கி போட்டு இருப்பாரு!.. - அப்படின்னு கூச்சல் போடுவான்!...

அதான்.. சரி!.. 

இவங்களும் அவனுங்களை விரட்டுற மாதிரி விரட்டுவாங்க.. அவனுங்களும் போற மாதிரி போய்ட்டு வந்துடுவானுங்க.. திரும்பி வந்து எங்களைப் பார்த்து சிரிப்பானுங்க!..

அவ்வளவு பேரழகு.. நீங்கள்..லாம்!.. இல்லையாக்கா!.. 

இல்லயா.. பின்னே!..

ஆமாங்க்கா!.. உங்க அழகெல்லாம் எங்களுக்கு வரவே வராது!.. பாருங்க இந்த வயசிலயும் உங்களுக்கு தலைமுடி எவ்வளவு ஆரோக்யமா!.. 

இதற்கெல்லாம் காரணம் இயற்கையடி தாமரை!.. இயற்கை!..

நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.. பாருங்கள் என் தலையில்!.. கண்ட கண்ட எண்ணெயையும் தேய்த்து கரிக்குருவி வால் மாதிரி!.. 

அதுக்கும் வைத்தியம் இருக்குதடி தங்கம்.. அப்புறமா சொல்கின்றேன்.. நீ இப்போ கதையைக் கேளு!..

சொல்லுங்க அக்கா!.. 

கிளித்தோப்பு பொங்கல்..ன்னு வளையல், ரிப்பன், குஞ்சம், சோப்பு, சீப்பு, கண்ணாடி இதெல்லாம் கூட ஜோரா வியாபாரம் ஆகிட்டு இருக்கும்.. ரங்க ராட்டினம் போட்டிருப்பாங்க.. பலூன் காத்தாடி.. ன்னு ஒரு திருவிழாவே நடக்கும்..

கண்ணைக் காட்டினா போதும்.. பசங்க கிட்ட இருக்கிற நாலணா எட்டணா எல்லாம் - வளையல் ரிப்பன் குஞ்சமா மாறி பொண்ணுங்க கைக்கு வந்திருக்கும்.. இதை எல்லாம் இந்தக் கிழவிங்க பார்த்தும் பார்க்காத மாதிரி கமுக்கமா இருப்பாங்க!..

ஓஹோ.. அந்த காலத்திலேயே இந்த வேலை எல்லாம் உண்டா!.. உங்களுக்கு யாரும் குஞ்சம் ரிப்பன் எல்லாம் கொடுக்கலையா!.. 

கொடுத்தாங்களே!...

யாரு?.. 

வேற யாரு!.. உங்க அத்தான் தான்!..

ஓ.. இதுவும் பால் குடித்த பூனை தானா!.. 

நீ கேளம்மா. கதையை!.. பொங்கல் பொங்கி வந்ததும் அலங்காரமா இருக்கிற பொங்கல் மேடையில் பூங்கரகத்தைச் சுற்றி தலைவாழையில் பானையோடு வைத்து குத்து விளக்கை ஏத்தி வைப்போம்.. வயசான பெரியவங்க கும்மி பாட்டு பாடுவாங்க வந்திருக்கிற சுமங்கலிகளும் பாடுவாங்க.. நாங்கள்...லாம்.. பூங்கரகத்தைச் சுத்தி வந்து கும்மி கொட்டுவோம்..

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் - கன்னிப் பொண்ணுங்கள்..ல யார் மேலயாவது சாமி இறங்கிடும்.. பெரியவங்க ஓடி வந்து தாங்கிப் பிடித்து மேடையில உட்கார வைப்பாங்க.. மாலை போட்டு கூந்தல்ல பூ வெச்சு... சந்தனம் மஞ்சள்..ல்லாம் பூசி குங்குமம் தீட்டுவாங்க.. வளையல் போட்டு விடுவாங்க.. நேர்ந்துகிட்டு இருக்கிறவங்க வெள்ளிக் கொலுசும் போட்டு விடுவாங்க..

அப்படின்னா.. பொண்ணுங்க யார் மேலயாவது சாமி வரும் ..ன்னு முன்னாலேயே தெரியும் இல்லையா!.. 

ஆமாம்.. தெரியும்.. முதல் வருஷம் அம்மன் அருள் வந்த பொண்ணு இந்த வருஷம் கல்யாணமாகி சுமங்கலியா இருப்பா.. அவள் வந்து - இந்தப் பொண்ணுக்கு மாலை போட்டு தேங்காய் பழம் கொடுத்து சேதி கேட்பாள்..

முதல் சேதி அவள் கேட்டதும் - மற்ற எல்லாரும் தொடர்ந்து கேட்பார்கள்..

எந்த திசையிலயிருந்து மாப்பிள்ளை வருவான்.. சொத்து சுகம் இருக்குமா.. இந்த வருஷம் செய்யலாமா.. சொந்த மாப்பிள்ளை குடிகாரனா இருக்கான்.. திருந்துவானா.. இல்லே வேற இடம் பார்க்கலாமா.. அப்படின்னு எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க!..

யாரும் கேட்டு இருக்க மாட்டாங்களே.. எம்பொண்ணை மேல படிக்க வைக்கலாமா.. ன்னு!.. 

எம்மகளை படிக்க வைக்க உத்தரவு கொடும்மா.. ந்னு கேட்டவங்களும் இருக்காங்க.. ஆனா.. அம்பாள் வரங்கொடுத்தும் சொந்தக்காரனுங்க வரம் கொடுக்கல.. வரன் தான் கொடுத்தானுங்க!..

அப்ப.. அந்த சொந்தக்காரனுங்க கண்ணை அம்பாள் குத்தலையா?. ஏன்டா பிள்ளைங்க வாழ்க்கைய கெடுக்கிறீங்க..ன்னு!.. 

அதெல்லாம் நடந்திருக்கு தாமரை.. சொல்லணும்..னா நாலு நாள் வேணும்!..

உங்களுக்கு ஒன்னும் கேட்கலயா!.. 

கேட்டாங்களே!.. குஞ்சம் கொடுத்தவனே குங்குமம் கொடுப்பான்..ன்னு சொன்னா மகமாயி!.. அப்ப தான் எங்க விவகாரமே வீட்டுக்கு தெரிஞ்சது!..  அத்தோட எங்க அப்பத்தாவுக்கு ரெண்டு பாட்டு கிடைச்சது.. இதுதான் நீ புள்ளய பாத்துக்கிட்ட லட்சணமா..ன்னு..

அப்புறம்?.. 

அப்புறம் என்ன.. ஆத்தா கொடுத்த வாக்குன்னு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணப் பந்தல் தான்.. கெட்டி மேளம் தான்.. மஞ்சக் கயிறு தான்!..

பால் பழந்தான்.. பன்னீர் சாரல்தான்!.. பவளமல்லி பந்தல் தான்!.. 
ஆகா.. அக்காவுக்கு வந்த வெட்கத்தைப் பாருங்களேன்!.. 

அதுக்கப்புறம் சாமி மலையேறி விடும்.. மக்களெல்லாம் சந்தோஷமா ஒருத்தருக்கொருத்தர் பொங்கல் கொடுத்துக்குவாங்க.. வந்திருக்கிற எல்லாருக்கும் வித்தியாசம் இல்லாம சந்தனம் தேங்காய் பழம் தாம்பூலம் கொடுப்பாங்க.. வேட்டி துண்டு புடவை கொடுக்கிறதும் உண்டு!..

அந்தப் பூங்கரகம்.. சாமி வந்த பொண்ணு.. 

பூங்கரகத்தை மூன்றாம் நாள் ஆற்றில் விட்டு விடுவார்கள்.. அந்தப் பொண்ணு அந்த ஒரு வருஷத்துக்கும் எல்லா நல்ல காரியத்திலயும் முன்னால இருப்பா.. கல்யாணப் பொண்ணுக்கு எல்லாம் பூச்சூட்டி மஞ்சள் பூசி வளையல் போட்டு விடுவா..

சரி.. இதையெல்லாம் அவங்க தான் செய்யணும்.. இவங்க தான் செய்யணும்.. அப்படின்னு ஏதாவது.. 

அடடா.. அந்த மாதிரியெல்லாம் ஏதும் கிடையாது.. ஊர் ஜனங்க எல்லாரும் ஒன்னா இருந்து தான் கொண்டாடுவார்கள்.. கன்னிப் பொங்கல் என்றால் தான் இத்தனை குதூகலங்கள்.. காணும் பொங்கலுக்குள் இதெல்லாம் ஏது?..

உண்மைதான் அக்கா.. நீங்கள் சொல்வது!.. ஆனாலும் நாம் ஏன் கன்னிப் பொங்கலைக் கைவிட்டோம்?.. 

சில சம்பிரதாயங்கள் மாறுபாடு ஆனாலும் தஞ்சாவூர் கும்பகோணம் பக்கம் சில கிராமங்களில் இன்னும் இந்தப் பழக்கம் இருக்கின்றது.. ஆனாலும் -
அந்த நாட்கள் எல்லாம் கனவாகிப் போனதடி தாமரை.. கனவாகிப் போனது!..

அந்த நாட்கள் இனியும் வருமோ.. அக்கா!.. 

தெரியவில்லையம்மா!..

சரி. அக்கா.. கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்.. நான் வீட்டுக்குப் போய் விட்டு வருகின்றேன்.. சாயுங்காலம் எல்லாருமாக கோயிலுக்குப் போகலாம்!.. 

ஆகட்டும் தாமரை.. நேற்று பெரிய கோயில்..ல சங்கராந்தி விழா.. எனக்குப் போக இயலவில்லை..








ஆனாலும், தவறாமல் படங்கள் வந்து விட்டன..
அவர்களுக்கு எல்லாம் நெஞ்சார்ந்த நன்றி.. நீ சீக்கிரம் வந்து விடு தாமரை!..

சரி அக்கா!.. இதோ.. வந்து விடுகின்றேன்!..

அப்படியே.. >>> தேவகோட்டை கில்லர்ஜி  எதையோ தேடிக்கிட்டு இருக்கார்.. என்னான்னு பார்த்து சொல்லிட்டுப் போம்மா!..

ஆகட்டும் அக்கா!.. போய்ட்டு வர்றேன்!.. 

கன்னிப் பொங்கல் வாழ்க!..

கன்னிப் பெண்களும் சுமங்கலியாகி 
காலமெல்லாம் வாழ்க!..

அன்பின் 
நல்வாழ்த்துகள்!..  
* * * 

17 கருத்துகள்:

  1. ”கன்னிப் பொங்கல்’ பற்றிய முழு விவரங்களையும் (கிளித் தோப்பு, குமரிகள் – கிழவிகள் என்று சுவாரஸ்யமான தகவல்களோடு) தெரிந்து கொண்டேன். எனக்கு புதிய தகவல்தான். எல்லா இடத்திலும் இதுபோல் கொண்டாடுகிறார்களா என்று தெரியவில்லை. எனது உளங்கனிந்த கன்னித் தமிழ்ப் பொங்கல் வாழ்த்துக்கள்!. (உங்கள் தமிழ்ப் பற்று வாழ்க!)

    தஞ்சை பெரியகோயில் சங்கராந்தி பண்டிகைப் படங்களைக் கண்டு ரசித்தேன்.

    ஜல்லிக்கட்டு பற்றிய இருவேறு கருத்துக்களில் எனது பதிவினை (ஜல்லிக்கட்டு – தடை வேண்டும்) இங்கு சுட்டி காட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அதிகமான செய்திகளைத் தெரிந்துகொண்டேன். கன்னிப்பொங்கல் என்று நாங்கள் இளம் வயதில்கூறியது இன்னும் நினைவில் உள்ளது. ஆழமான கருத்துக்களை மிகவும் எளிதாகப் புரியும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி வணக்கம்
    ஜல்லிக்கட்டில் ஒட்டகம் பிடிப்பதற்காக 2 தினங்களாக துபாய், சார்ஜா என அலைச்சல் எனக்கும் அரேபியர்கள் தலையில் இடும் வட்டு இரண்டு கிடைத்தது (பாக்கிஸ்தானி கடையில் வாங்கினேன் என்று நினைத்து விடாதீர்கள்) ஆகவே கணினி பக்கம் வரமுடியவில்லை

    நிறைய விடயங்கள் எவ்வளவவு பழமையான விசயங்கள் அனைத்தும் ஏக்க மனதுடன் படிக்க வேண்டியது இருக்கின்றது நல்ல உரையாடல் முறையில் சொல்லிச்சென்ற விதம் அருமை
    புகைப்படங்கள் அனைத்தும் அழகு
    ஜி தாமரை எனது வீட்டுப்பக்கம் வரவில்லையே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தாமரையின் வீட்டுக்காரர் துபாயில் தான் இருக்கின்றார்.. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வருவார்கள் என நினைக்கின்றேன்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஐயா... மிகவும் அழகான பகிர்வு... மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கன்னிப் பொங்கல் பற்றிய முழு விவரங்களையும அறிந்து கெர்ண்டேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நிறைய அறிந்து கொண்டேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்பின் ஐயா...
    தஞ்சையில் நடக்கும் கன்னிப் பொங்கல் குறித்து ஒரு அழகான சிறுகதை போல் அற்புதமாய் விளக்கியிருக்கிறீர்கள்...

    விவரமான பகிர்வு... படங்களும் அருமை...

    அட என் "ஜல்லிக்கட்டு"க்கும் இணைப்பு... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு,, நான் தான் தாமதமாக படிக்க வேண்டியதாயிற்று,,,

    நல்ல விளக்கம்,,

    குஞ்சம் கொடுத்தவனே குங்குமம் கொடுப்பான்,, ஆஹா அருமை அருமை வாழ்த்துக்கள்,,
    மலரும் நினைவுகள்,, படிக்க படிக்க ஆர்வமாக இருந்தது,,,

    புகைப்படங்கள் அனைத்தும் அருமை,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..