புதன், டிசம்பர் 31, 2014

மார்கழிக் கோலம் 16

குறளமுதம்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. (039)

அறவழியில் வாழ்வதனால் அதன் பயனாக வருவதுதான் இன்பம்.
அதை விடுத்த மற்றெல்லாம் எந்தஒரு புகழும் இல்லாதவை.
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 16



நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்போனே கொடிதோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே நீ
நேயநிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
* * *

ஆலய தரிசனம்
தேரழுந்தூர்


மூலவர் - ஸ்ரீதேவாதிராஜன்
உற்சவர் - ஆமருவியப்பன்
தாயார் - செங்கமலவல்லி
தீர்த்தம் - தர்சன புஷ்கரணி, காவிரி
ஸ்ரீ விமானம் - கருட விமானம்

ப்ரத்யட்க்ஷம் - அகத்தியர், காவிரி, கருடன்

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார்

உபரிசரவஸ் என்பவன் - தனது தேர் வானில் வரும் போது - அதன் நிழல் எதன் மீதெல்லாம் படுகின்றதோ அதெல்லாம் கருகிச் சாம்பலாகிப் போகும்படியான வரத்தைப் பெற்றிருந்தான்.

இப்படி ஒரு வரத்தை எங்கிருந்து பெற்றான் எனத் தெரியவில்லை..

மற்ற உயிர்களின் துன்பத்தை ரசித்து மகிழ வேண்டும் என கொடூர எண்ணம் அவனுக்கு!..

தான் பெற்ற வரத்தை சோதித்துப் பார்க்க முனைந்த அவன் விமானத்தில் ஏறி பறந்தான்.

இவன் மேலே பறந்த போது - பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களின் மேல் விமானத்தின் நிழல் பட்டது. வரத்தின் தன்மையால் - பசுக்கள் கதறித் துடித்தன.

பசுக்களின் கதறலைக் கேட்ட ஹரிபரந்தாமன் - சினங்கொண்டு - தேரின் நிழலில் தன் கால் விரலை வைத்து அழுத்தினான்.

அந்த அளவில் - வானில் பறந்து கொண்டிருந்த தேர் பூமிக்கு இறங்கி மண்ணுள் அழுந்தி - புதையுண்டு போனது. அந்தக் கொடூரனின் அகந்தையும் அத்துடன் அழிந்தது.

தேர் அழுந்தியதால் - தேரழுந்தூர் என்பது பெயராயிற்று.

ஒரு முறை பெருமாளும் சிவபெருமானும் பொழுது போகவில்லை என்று சொக்கட்டான் ஆடினர்.

இந்த விளையாட்டுக்கு பார்வதி நடுவராக இருந்தாள். சொக்கட்டான் காய் உருட்டும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் - பெருமாளுக்கு சாதகமாக தீர்ப்பு கூறினாள் - அம்பிகை.

அதனால் சினம் கொண்ட சிவபெருமான் - அம்பிகையை பசுவாகக் கடவது !.. - என்று சபித்து விட்டார்.

பசுவாக பூமிக்கு வந்த அம்பிகைக்குத் துணையாக - லக்ஷ்மியும் சரஸ்வதியும் வந்தனர்.

இவர்களை மேய்ப்பவராக -  பெருமாளும் பூமிக்கு வந்தார்.

ஆமருவியப்பன் என திருப்பெயர் கொண்டு இத்தலத்தில் அருளாட்சி செய்கின்றார்.

அம்பிகைக்கும் சாப விமோசனம் ஆகும்போது - இடையனாகிய பெருமாளும் பசுவாகிய அம்பிகையும் காவிரியில் நீராடியதாக ஐதீகம்.

எனவே -  மூலஸ்தானத்தில் ஸ்வாமியை வணங்கியவாறே காவிரியும் உடன் இருக்கின்றாள்.


மூலவர் தேவாதிராஜன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக சேவை சாதிக்கின்றார். வலது புறம் பிரகலாதனும் இடது புறம் கருடனும் இருக்கின்றார்கள்.

நரசிங்கமாக நின்ற ஹரிபரந்தாமன் - பிரகலாதனுக்கு சாந்த ரூபத்தினைக் காட்டியும் அவனுக்கு அச்சம் குறைந்தபாடில்லை.

எனவே - ஆமருவியப்பனாக காட்சி நல்கி தன்னருகில் இருத்திக் கொண்டதாக ஐதீகம்.

இந்திரன் கொடுத்த விமானத்தை - கருடன் பெருமாளுக்கு சமர்ப்பித்ததால் - கருடனும் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியம் பெற்றான்.

ஆநிரை மேய்க்க வந்த அமரர் கோனுடன் உபய நாச்சியார்கள்..  ஆமருவியப்பனின் முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் கொள்ளை அழகு.

ஆமருவியப்பன் திருச்சந்நிதியில் மார்கழி பகல் பத்து உற்சவம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த மங்கல வைபவத்தின் திருக்காட்சிகளைக் கண்ணாரக் கண்டு மகிழுங்கள்..










படங்களை வழங்கிய ஸ்ரீமதி ராதா வாசன் அவர்களுக்கு அன்பின் வணக்கமும் நன்றியும் உரியன.

மேலும், தரிசனம் கண்டு களிக்க - தேரழந்தூர் பகல் பத்து உற்சவம்.

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருப்பாசுரங்கள்.

திருவாழ்மார்வந்தன்னைத் திசைமண்ணீரெரிமுதலா
உருவாய் நின்றவனை ஒலிசேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென்அழுந்தையில் மன்னிநின்ற
கருவார்கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே!..(1604)

நிலையாளாக என்னை உகந்தானை நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்
அலையாரும் கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே!.. (1605)
பெரிய திருமொழி/ஏழாம் பத்து/ஆறாம் திருமொழி.
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 15



ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!.. 
* * *

திருக்கோயில்
அழுந்தூர்

இறைவன் -  வேதபுரீஸ்வரர்
அம்பிகை - சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் - வேத தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம், சந்தனம்

தலப்பெருமை

வேதங்களும் தேவர்களும் வணங்கி நின்ற திருத்தலம்.

ஸ்வாமி சுயம்பு மூர்த்தி. ஆதியில் இத்தலம் சந்தன வனம் எனப்பட்டது.

ஒருமுறை ஐயனும் அம்பிகையும் சொக்கட்டான் விளையாடினர்.

இப்படியும் அப்படியுமாக காய் நகர்த்துவதில் வாக்குவாதம் மூண்டது.

அதற்கப்புறம் கேட்கவும் வேண்டுமோ!..

ஈசனின் கோபத்தினால் - அம்பிகை பசுவாகப் பிறந்தாள்..

இதையறிந்த ஹரிபரந்தாமன் - தன் தங்கையின் மீது இரக்கம் கொண்டு இடையனாகத் தோன்றியருளினார்.


இப்படி அம்பிகை பசுவாகவும் பெருமாள் இடையனாகவும் தோன்றிய திருத்தலமே - சந்தன வனம்!..

தன் நினைவை மறந்து அம்பிகை பசுவாக விளங்கினாள்.. அன்புடன் அதனை அங்கும் மேய்த்து பராமரித்து பாதுகாத்துக் கொண்டிருந்தான் பரந்தாமன்.

மஹாலக்ஷ்மியும் சரஸ்வதியும் தேவ கன்னியரும் கூட பசுக்களாக உருமாறி அம்பிகையுடன் துணைக்கு இருந்தனர்.

சாப விமோசனம் ஆகுங்காலம் வந்தது.

பசு மேய்ந்து கொண்டிருந்த போது குளம்பு பதிந்த இடத்தில் - பசுவின் பதி - பூமியைப் பிளந்து கொண்டு லிங்க வடிவாக வெளிப்பட்டார்.

வெருண்ட பசுவை - வேதநாயகன் சாந்தப்படுத்தி - மீண்டும் பழைய நினைவுகளைத் தந்தருளினார்.

பசுவுடன் நின்று கொண்டிருந்த பரந்தாமன் -
தன் சகோதரிக்கு சாப விமோசனம் அருளுமாறு வேண்டினார்.

ஈசனும் காவிரியில் நீராடும்படி - பணித்தார்.

அதன்படி - பரந்தாமன் பசுவைக் காவிரியில் நீராட்டி - தானும் நீராடினார்.

அம்பிகை தன் வடிவம் பெற்று சௌந்தர்யநாயகியாகப் பொலிந்தாள்.

காவிரிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை..

கன்னிகையாக வெளிப்பட்டு பரந்தாமனையும் சௌந்தர்ய நாயகியையும் வலம் வந்து வணங்கினாள்..

உத்தால விருட்சத்தின் கீழ் பரதமுனி தவம் இருக்கின்றார். அம்பிகை தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று. அவரது தவத்தினை நிறைவு செய்து மகளாக வளர்க!..  யாம் வந்து ஆட்கொள்வோம்!.. - என்று பரமன் அருளினார்.

அதன்படியே - அனைத்தும் நிகழ - உரிய காலத்தில் பெருமான் அம்பிகையை ஆட்கொள்ளும் பொருட்டு எழுந்தருளினார்.

அம்பிகையோ - முறைப்படி பெண்கேட்டு வந்து என்னை ஏற்றுக் கொள்க!.. - என மொழிந்தாள்..

உலகோருக்கு உணர்த்திய நீதியாக நந்தியம்பெருமானின் தலைமையில் மகரிஷிகளும் தேவகணங்களும் வந்திருந்து பெண்கேட்டு - மங்கலகரமாக தேவியின் திருமணம் நிகழ்ந்ததாக ஐதீகம்.

அம்பிகை பசுவாக வந்தபோது இடையனாக வந்த பரந்தாமன் ஆமருவியப்பன் என இங்கேயே கோலங்கொண்டார்.

தேரழுந்தூர் பெருமாள் கோயிலில் ஆமருவியப்பனுடன் பசுவும் எழுந்தருளி இருப்பது சிறப்புக்குரியதாகும்.

பெருமாள் நீராடியதால் மகிழ்ச்சியடைந்த காவிரி - சந்நிதியில் பெருமாளை வணங்கிவளாக விளங்குகின்றாள்.


பின்னொரு சமயம் -  வேதபுரீசருக்கு - அகத்திய முனிவர் வழிபாடு செய்து கொண்டிருந்த வேளையில் - அதை மதிக்காமல் ஊர்த்துவ ரதன் எனும் அரசன் ஒருவன் வானில் விமானத்தில் சென்றான்.

பிழையான அந்தச் செயலால் - விண்ணில் பறந்து கொண்டிருந்த விமானம் மண்ணில் இறங்கியதோடல்லாமல் - தேர்ச் சக்கரங்கள் மண்ணுக்குள் அழுந்தி நின்றன.

தேர் அழுந்தி நின்றதால் - தேரழுந்தூர் என்று வழங்கப்படுகின்றது.

ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம். மிகப்பழைமையான திருத்தலம்..

அகத்திய மகரிஷியுடன் காவிரி வணங்கிய திருத்தலம்.
அகத்திய மாமுனிவருக்கும் காவிரிக்கும் சந்நிதிகள் உள்ளன.

தேரழுந்தூரில் தான் கவிச்சக்ரவர்த்தி கம்பர் அவதரித்தார்.

சித்திரையின் நிறைநிலவு நாளைப் பத்தாம் நாளாகக் கொண்டு தேரோட்டத்துடன் பெருந்திருவிழா நடைபெறுகின்றது. தவிர சிவாலயங்களில் நிகழும் அனைத்து விசேஷங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன.

மாசி மாதத்தின் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்களும் மாலையில் சூரிய பூஜை நிகழ்கின்றது. மாலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் ஈசனடியைத் தழுவி வழிபடுகின்றான்.

மேற்கு நோக்கி விளங்கும் வேதபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு நேரெதிரில் ஆமருவியப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது.

மயிலாடுதுறையிலிருந்து தேரழுந்தூருக்கு பேருந்துகள் இயங்குகின்றன. 

திருஞானசம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய திருத்தலம். திருநாவுக்கரசர் திருவூர்த் திருத்தொகையில் அழுந்தூரைக் குறித்தருள்கின்றார்.

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் இவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கென நீ நினையே!.. (2/20)
திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்.
* * *

செவ்வாய், டிசம்பர் 30, 2014

மார்கழிக் கோலம் 15

குறளமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (081)

இல்லம் பேணி - இனிதாய் வாழ்வதெல்லாம் 
இன்முகத்துடன் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்கேயாகும்.
 சொல்லால் செயலால் பிறர்க்கு
உதவுவதும் உபசரிப்பதும் வேளாண்மையே!..
   
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 15



எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண் ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்.
* * *

ஆலய தரிசனம்
திருவிண்ணகரம்


மூலவர் - ஒப்பிலியப்பன்
உற்சவர் - திருவிண்ணகரப்பன்
தாயார் - பூதேவி நாச்சியார்
தீர்த்தம் - அஹோராத்ர தீர்த்தம்
பிரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், கருடன், காவிரி

மங்களாசாசனம்
பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்

மஹாவிஷ்ணுவின் தேவியும் மஹாலக்ஷ்மியின் ஒரு அம்சமுமான பூதேவி - 

மஹாலக்ஷ்மியைப் போல நானும் தங்கள் திருமார்பில் தங்கியிருக்க வேண்டும். எனக்கும் அந்த பாக்கியத்தைத் தந்தருளுங்கள்.. ஸ்வாமி!.. 

- என பணிவுடன் வேண்டி நின்றாள்..

இதைக் கேட்டு புன்னகைத்த ஸ்ரீஹரிபரந்தாமன் - பூவுலகில் மார்க்கண்டேய மகரிஷியின் மகளாகப் பிறந்து இந்த பேற்றினை அடைவாய்!.. என மொழிந்தான்.

அச்சமயத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியும் தனக்கு மஹாலக்ஷ்மி மகளாத் தோன்ற வேண்டும் என தவம் புரிந்து கொண்டிருந்தார்.

அவ்வேளையில் திருத்துழாய் செடியினருகில் கமல மலரில் குழந்தை எனத் தோன்றினாள் பூதேவி.

நடந்தவற்றை உணர்ந்த மார்க்கண்டேயர் - அந்தக் குழந்தைக்கு துளசி எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.

நேரம் கூடி வந்த வேளையில் - பெருமாள் வயோதிகராக வந்து பெண் கேட்டார். 

அவரைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்ற நோக்கில் - அவள் சிறு பெண்.. அவளுக்கு ஒழுங்காக சமைக்கக் கூடத் தெரியாது என்று சொன்னார் மகரிஷி..

உப்பில்லாத சமையல் என்றாலும் சரி.. நான் சாப்பிட்டுக் கொள்வேன். நீர் பெண்ணைக் கொடும்!.. - என விடாப்பிடியாக நின்றார்.

வந்திருப்பவர் பெருமாள் தான் என்பதை உணர்ந்து கொண்ட மகரிஷி - பூதேவியின் விருப்பததை முன் வைத்தார்.

சரி.. நீர் ஒருபோதும் அவளை விட்டுப் பிரியக்கூடாது!.. என நிபந்தனை விதித்தார்.

பெரியவர் அதற்கும் சம்மதித்தார்.. 

மங்களகரமாக கன்யாதானம் நிகழ்ந்தது.


பெருமாள் ஒப்பில்லாதவனாக - ஒப்பிலியப்பன் எனும் திருப்பெயர் தாங்கினார்.

பெருமாளை விட்டு அகலாதவளாக துளசி என திருமார்பில் தங்கினாள் - பூதேவி!..

எப்போதும் பெருமாளுக்கு இடப்புறம் எழுந்தருளும் பூதேவி - கல்யாண க்ஷேத்ரமாகிய இத்திருத்தலத்தில் வலப்புறம் இருக்கின்றாள்.

பிரம்மோத்சவ காலத்திலும் - பூதேவி - பெருமாளுடன் இணைந்தே திருவுலா கண்டருள்கிறாள். 

பெருமாள் உப்பில்லாத உணவையும் ஏற்பேன் என்றதனால் - நிவேத்யங்கள் எதிலும் உப்பிடுவது கிடையாது. 

பெருமாள் பெண் கேட்டு வந்த நாள் - பங்குனி திருவோணம்.
கன்யாதானம் நிகழ்ந்தநாள் - ஐப்பசி திருவோணம்.

இந்த ஐதீகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு திருவோணத்தன்றும் பெருமாள் சந்நிதியில் சாம்பிராணி தூபம் இடப்பட்டு அகண்ட தீபம் ஏற்றப்படுகின்றது.

ஆவணி திருவோணத்தன்று பெருமாள் அதிகாலையில் கருட வாகனத்தில் எழுந்தருளி உதய சேவை சாதிக்கின்றார்.

தக்ஷிண கங்கை எனப்படும் நாட்டாற்றில் தீர்த்தமாடிய பின் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் விமரிசையாக நிகழ்கின்றன.

இத்தலத்தில் உள்ள தீர்த்தம் அஹோராத்ர புஷ்கரணி - பகலிராப் பொய்கை எனப்படுவது. அதனால் எந்நேரமும் தீர்த்தமாடலாம் என்பது சிறப்பு.


ஸ்ரீசுத்தானந்த விமானத்தின் கீழ் - கிழக்கு முகமாக தரிசனம்!.. 

என்னைச் சரணடைந்தவர்களைக் காப்பேன்!.. - என்று வாக்கு அருள்கின்றான்.
  
மூன்று ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம். 

ஒப்பிலியப்பன் கோயில் என வழங்கப்படும் இந்த திவ்யதேசம் - திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் திருக்கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.

கும்பகோணத்திலிருந்து ஒப்பிலியப்பன் கோயிலுக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருப்பாசுரங்கள்

போதார் தாமரையாள்புல விக்குல வானவர்தம்
கோதா கோதில்செங் கோல்குடைமன்ன ரிடைநடந்த
தூதா தூமொழி யாய்சுடர் போலென் மனத்திருந்த 
வேதா நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே!.. (1466)
 பெரிய திருமொழி (ஆறாம்பத்து/இரண்டாம் திருமொழி)

மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும்
செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகைஉணர்ந்தே உண்மையாலினி யாது மற்றோர்
தெய்வம் பிறிதறியேன் திருவிண்ணகரானே!.. (1473)
பெரிய திருமொழி (ஆறாம்பத்து/மூன்றாம் திருமொழி)
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 14


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
திருநாகேஸ்வரம்


இறைவன் - நாகேஸ்வரர், நாகநாத ஸ்வாமி
அம்பிகை - கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையாள்
தீர்த்தம் - சூரிய புஷ்கரணி
தலவிருட்சம் - செண்பகம்

தலப்பெருமை

ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலைகள் என்பர். 
அதைப் போல அவனது உறவு முறைகளின் வட்டமும் ஆயிரம் ஆயிரம். 

இந்த உறவு முறைகளுக்குள் ஒன்பது நாட்டாண்மைகள்!.. 
இந்த ஒன்பது நாட்டாண்மைகளுக்குள் ஒருவன் தான் தட்க்ஷகன் என்பவன்.  

அதிபயங்கரமானவன். இவனுக்கு ஏதோ - பொல்லாத காலம். 

செண்பக வனத்தினில் வாழ்ந்திருந்த முனிவர் ஒருவரின் மகனான சுகர்மன் என்பவனைத் தீண்டி விட்டான். விஷம் தலைக்கேறியதால் - முனிவரின் மகன் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டான். 

அவ்வளவு தான்!.. முனிவர் வயதான காலத்திலும் ஓடோடி வந்தார்.  

இந்த பாதகத்தை செய்தவன் எவனோ அவன் தலை ஆயிரம் துண்டுகளாகச் சிதறட்டும்!.. -  என சாபம் கொடுத்து விட்டார். 

இதைக் கேட்டு அஞ்சி நடுங்கிய தட்க்ஷகன் இந்திரனைச் சரணடைந்தான். 

இந்திரனும் மற்றவர்களும் ஓடி வந்து முனிவரின் மகனை எழுப்பிக் கொடுத்து விட்டு - தட்க்ஷகனுக்கு சாபத்திற்கு விமோசனம் கேட்டனர். 

மகன் மீண்டும் கிடைத்து விட்டதால் மனம் குளிர்ந்த முனிவர் - செண்பக வனத்தில் சிவபூஜை செய்வாய்!.. என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். 

அதன்படி தட்க்ஷகன் சிவபூஜை செய்த தலமே - திருநாகேஸ்வரம்.

பின்னும் நாகராஜன் - தான் சிவபெருமானின் திருமுடியில் இருப்பதை எண்ணி ஆணவம் கொண்டான். அதனால் பெருமானின் - ஜடாமுடியிலிருந்து கீழே அதள பாதாளத்தில் விழுந்தான்.

அவன் தலை உண்மையிலேயே ஆயிரமாக சிதறி விட்டது.

ஒரு தலை இருந்ததற்கே இந்த பெரும் தண்டனை. இன்னும் ஆயிரம் தலை இருந்தால் என்னென்ன தண்டனையோ - என அஞ்சி தவறுக்கு வருந்தி நின்றான்.

இறைவன் ஆணைப்படி - சிதறிய தலைகள் ஒன்று சேரவும் - மனதில் கொண்ட மமதை அழியவும் நாகராஜன் பூஜை செய்த திருத்தலம் - திருநாகேஸ்வரம்.


கம்பீரமான ராஜகோபுரம்.. கலைநயமிக்க சிற்பங்களுடன் திகழ்கின்றது.

திருக்கோயிலின் தென்புறமாக சூரிய தீர்த்தம்.


நீண்டு உயர்ந்த கொடிமரம். கொடிமரத்து கணபதி சந்நிதி..

நந்தியம்பெருமான்.  அவரை பணிந்து வணங்கி இரண்டாம் ராஜகோபுரத்தைக் கடக்கின்றோம்.

வெளித்திருச்சுற்றின் தொடக்கம்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் - ராகுவைத் தரிசிப்பதற்கு!..
அவரவர்க்கும் ஆயிரம் ஆயிரம் வேண்டுதல்கள்..

ராகு காலம் எப்போது வரும்!?.. என்று காத்திருக்கின்றார்கள்.

அந்த மண்டபத்தில் தோஷ நிவர்த்தியாக நூற்றுக்கணக்கான நாக பதுமைகள்..

அவற்றைக் கடந்து மூலஸ்தானத்தை நோக்கிச் செல்வோம் வாருங்கள்!..

அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் பாடிப் பரவிய - நாகேஸ்வரப் பெருமான்!..

கருவறையின் திருவிளக்கின் சுடரொளியில் ஜோதிமயமாகத் திகழ்கின்றார்.

கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே!..(2/43)

- என திருஞானசம்பந்தர் போற்றுகின்றார்.

நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு நாகேச் சரவரே!..(5/52)

அந்தக்காலத்திலேயே பாரத நாடெங்கும் இருந்து பக்தர்கள் வந்து பெருமானை வழிபட்டதை அப்பர் ஸ்வாமிகள் தமது திருப்பாடலில் குறிப்பிடுகின்றார்.

கொம்பனாள் பாகர்போலும் கொடியுடை விடையர் போலும்
செம்பொனார் உருவர் போலும் திகழ்திருநீற்றர் போலும்
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சரவனாரே!..(4/66)

நம்புவார்க்கு அன்பர் போலும் நாகேச்சரவனார்!.. - என ஈசனின் தன்மையை அப்பர் பெருமான் தெளிவாகக் கூறுகின்றார்.

குன்றமுலைக் குமரி கொடியேரிடை யாள்வெருவ
வென்றி மதகரியின் உரிபோர்த்ததும் என்னைகொலாம்
முன்றில் இளங்கமுகின் முதுபாளை மதுவளைந்து
தென்றல் புகுந்துலவுந் திருநாகேச்சரத்தானே!..(7/99)

- என்று சுந்தரர் - எம்பெருமான் யானையை உரித்த போது உமையாம்பிகை அஞ்சிய நிகழ்வினைப் பதிவு செய்கின்றார்.

ஞானசம்பந்தர் இரண்டு திருப்பதிகங்களையும் அப்பர் பெருமான் இரண்டு திருப்பதிகங்களையும்  சுந்தரர் ஒரு திருப்பதிகத்தையும் அருளியுள்ளனர்.

அவை எல்லாவற்றிலுமே - நாகேஸ்வரனை வணங்கி நலமும் வளமும் பெற கூறுகின்றனர்.

ஸ்ரீநாககன்னி நாகவல்லி சமேத ஸ்ரீ நாகராஜன்

நாம் தான் அறியாமையால் - வெளித்திருச்சுற்றில் நிருதி மூலையில் நாககன்னி, நாகவல்லி எனும் இரு தேவியருடன் திகழும் நாகராஜனை ராகு என்று சொல்லி வழிபட்டு நிற்கின்றோம்.

செவ்வாய்க் கிழமைகளில் (1.30 - 3.00) ராகு கால அபிஷேகம் - என்ற பெயரில் வழிபாடு செய்து விட்டு சிவாலயத்தில் செய்யக் கூடாதததைச் செய்கின்றர்.

மூலஸ்தானம் நடை அடைபட்டிருக்கும் போது திருக்கோயிலை வலம் வரக்கூடாது என்ற மரபினை மீறுகின்றார்கள்..

நாக வழிபாடு என்பது மிகத் தொன்மையானது. அடிப்படையே இதுதான்.

தஞ்சை பெரியகோயிலில் - மிகப் பெரிய நாகராஜர் திருமேனி இருப்பது எத்தனை பேருக்குதெரியும்?..

தேவியருடன் வீற்றிருக்கும் நாகராஜனை ராகு என்று சொல்வதுடன் - பால் அபிஷேகம் செய்யும் போது நீல நிறமாகத் தெரிகின்றது என்கின்றார்கள்..

இன்னும் சிலர் - பால் நீல நிறமாக மாறுகின்றது என்கின்றார்கள்..

ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாக - சங்கல்பத்துடன் மூன்று முறை கூட்டு அபிஷேகம் செய்கின்றார்கள்.

நான் தான் வீற்றிருக்கின்றேன்!.. - என்று நாகராஜனே வந்து சொன்னாலும் யாரும் இனிமேல் நம்பமாட்டார்கள்..

நாகராஜன் தன் கூட்டத்தாராகிய ஆதிசேஷன், கார்க்கோடகன் ஆகியோருடன் இங்கே பூஜை செய்தது - மகாசிவராத்திரியின் இரண்டாம் காலம்.

மகாசிவராத்திரியின் முதல் காலம் -  நாகேஸ்வரன் திருக்கோயில், குடந்தை.
மூன்றாம் காலம் - ஸ்ரீசேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்.
நான்காம் காலம் - ஸ்ரீகாயாரோகணேஸ்வரர், நாகப்பட்டினம்.

பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமானின் அபிமானத் திருத்தலம்.


அம்பிகை கிரிகுஜாம்பிகை கிழக்கு நோக்கிய தனிக்கோயிலில் திகழ்கின்றாள்.

வலமும் இடமும் - சரஸ்வதியும் மஹாலக்ஷ்மியும் விளங்குகின்றனர்.

அம்பிகையில் சந்நிதிக்கு முன்பாக - பாலகணபதி, பாலசாஸ்தா, நாகர் - அருள் புரிகின்றனர்.

மற்றும் சங்க நிதியும் பத்மநிதியும் விளங்குவது சிறப்பு அம்சம்.

மிகவும் தொன்மையான திருக்கோயில்.

கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரத்திற்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

நாகேஸ்வரனும் கிரிகுஜாம்பிகையும் நாடிவருவோர்க்கெல்லாம்
நலமும் வளமும் தந்தருள்கின்றனர்.

நாம் என்றுமே - மழை பெய்யும் இடத்தில் 
பாத்திரம் வைப்பதில்லை!..

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழிபாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே!..(5/52)
அப்பர் ஸ்வாமிகள். 

திருச்சிற்றம்பலம்
* * *

திங்கள், டிசம்பர் 29, 2014

மார்கழிக் கோலம் 14

குறளமுதம்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)

தன்னை அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை 
பல வளங்களுடன் இருப்பது போல மாயத் தோற்றங் காட்டி
பின் மறுபடியும் தோன்றுவதற்கு வழி இன்றிக் கெட்டுப் போகும்.

* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 14



உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்.
* * *

ஆலய தரிசனம்
திருச்சேறை



மூலவர் ஸ்ரீ சாரநாதப் பெருமாள்.
உற்சவர் - மாமதலைப் பிரான்.
தாயார் - சாரநாயகி.
தீர்த்தம் - சார புஷ்கரணி

பஞ்ச லக்ஷ்மிகளுடன்அருளும் திருத்தலம்.

சாரநாதப் பெருமானைப் பணிந்து பிரம்ம தேவன் உலகத்தின் உயிர்களை சிருஷ்டிக்கத் தொடங்கினான் என்பது ஐதீகம். 

திருத்தலத்தில் பலகாலம் தவமிருந்த சார மாமுனிவருக்கும் மகரிஷி மார்க்கண்டேயருக்கும் அகத்தியருக்கும் அன்னை காவிரிக்கும் ப்ரத்யட்க்ஷம்.

ஸ்ரீசாரவிமானத்தின் கீழ் கிழக்குமுகமாக நின்ற திருக்கோலம். 
சாரபுஷ்கரணியின் மேற்குக் கரையில் தான் காவிரி கடும் தவமிருந்தாள்..

ஏன்!?

ஒருசமயம் - புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, சிந்து, காவேரி, கோதாவரி, கிருஷ்ணை, துங்கபத்ரை எனும் நவ கன்னியரும் மானுட வடிவங்கொண்டு விந்திய பர்வதத்தின் சாரலில் விளையாடிக் கொண்டிருந்த போது - 

வானில் சென்ற கந்தர்வன் ஒருவன் அவர்களைக் கண்டு பூமிக்கு வந்தான். 

அவர்களை வலம் வந்து வணங்கினான். 
அவனது அன்பினில் மகிழ்ந்தனர் நதிக் கன்னியர். 

எப்போதும் துடிப்பாக இருக்கும் கங்கைக்கு காவிரிக்கும் மனதில் விபரீதம் ஒன்று தோன்றியது. 

எங்களில் யார் சிறந்தவர்?.. - கேள்வி பிறந்தது - அவர்களிடமிருந்து. 

கந்தர்வன் திடுக்கிட்டான். இந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை..

இருப்பினும் எல்லா நதிகளையும் புகழ்ந்துரைத்தான்- கந்தர்வன்.

அவனது புகழுரையில் கங்கையும் காவிரியும் சமாதானம் அடையவில்லை. வாக்கு வாதம் நிகழ்ந்தது. தொடர்ந்தது.

கந்தர்வன் - ஆளை விட்டால் போதும் என தலைமறைவானான். 

கங்கையும் காவிரியும் விவாதத்தில் இருக்க அதில் சம்பந்தப்படாமல் - மற்ற கன்னியர் ஒதுங்கிக் கொண்டனர். பிரச்னை சத்தியலோகத்திற்கே போனது. 

இருதரப்பினரின் விவாதங்களைக் கேட்ட நான்முகன் - 

கங்கை ஆகாயத்தில் தவழ்ந்தவள். ஹரிபரந்தாமன் வாமனனாக அவதாரம் செய்து திரிவிக்ரமனாக அண்ட பிரபஞ்சத்தையும் அளந்தபோது கங்கை நீரைக் கொண்டு தான் - நான் அவருக்கு பாதபூஜை செய்தேன். எனவே கங்கை தான் சிறந்தவள்.உயர்ந்தவள்!.. -  என்று தீர்ப்பு வழங்கினார். 
        
அதைக் கேட்டு மிக்க வருத்தம் அடைந்த காவிரி - நானும் ஒரு நாள் அந்தப் பெருமையைப் பெறுவேன்!.. - எனத் துணிந்தாள்.
   
தன்னை வாழ்த்தி வழிநடத்திய அகத்திய மகரிஷியைப் பணிந்து வணங்கினாள். கங்கையினும் மேலான பெருமையை அடைவதற்கு வழி காட்டுமாறு வேண்டினாள்.

அகத்தியர் கூறிய அறிவுரையின்படி ஹரிபரந்தாமனைக் குறித்து கடுந்தவம் செய்தாள். 

அவளது கடுந்தவத்துக்கு மனம் இரங்கிய ஹரி பரந்தாமன் அவளது தவச் சாலைக்கு ஒரு குழந்தையின் வடிவு கொண்டு தவழ்ந்து வந்தான். 

குழந்தையின் ரூப லாவண்யங்களைக் கொண்டு வந்திருப்பது பரம்பொருளே!. என உணர்ந்து கொண்ட காவிரி - தாய்மை மீதூற பாலகுமாரனை வாஞ்சையுடன் அள்ளி அணைத்துக் கொண்டாள்.. 

அவளது அன்பினில் மகிழ்ந்த பரமனும் -

காவிரி!.. இப்போது உன் மனம் மகிழ்ந்ததா!.. - எனக் கேட்டான்!..
   
ஸ்வாமி!.. எளியவள் மீது இரக்கம் கொண்டு என் மடியில் குழந்தையாகத் தவழ்ந்து என்னையும் பெருமைப்படுத்தினீர். ஆயினும் தமது திவ்ய தேஜோ மயமான திருவடிவைக் கண்டு தரிசிக்க ஆவல் கொண்டிருக்கின்றேன்!.. - எனப் பணிந்து வணங்கினாள்..

அவளுடைய அன்பின் பொருட்டு - ஹரிபரந்தாமனும் - சங்கு சக்ரபாணியாக கருட வாகனத்தில் எழுந்தருளினான். 

அவனுடன் - ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி,  மஹாலக்ஷ்மி, சாரநாயகி என ஐந்து தேவியரும் தரிசனம் அளித்தனர்.

அத்துடன் என்றென்றும் சாரபுஷ்கரணியில் காவிரி கலந்திருக்கும்படியான வரமும் அருளினர்.

தன்னைப் பணிந்து வணங்கிய காவிரியின் வேண்டுதலின்படி - பரந்தாமன் இத்திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டான் என்பது ஐதீகம்.

நீர்வண்ணங்கொண்ட காவிரியை - 
தாய் எனக் கொண்டு சிறப்பித்தான் கார்வண்ணக் கண்ணன்!..

காவிரி மேன்மை அடைந்தது - இத்திருத்தலத்தில்!..

அதனாலன்றோ - கங்கையினும் புனிதமாய காவிரி!.. 
- என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் போற்றிப் புகழ்ந்தார்.


காவிரியின் மடியில் கண்ணன் தவழும் நிலையில் சந்நிதி விளங்குகின்றது.

காவிரிக்கு ஹரிபரந்தாமன் திருக்காட்சி நல்கியது தைப்பூச நாளில்!.. இதன் அடிப்படையில் தைப்பூச பெருந்திருவிழாவின் போது சாரபுஷ்கரணியில் தீர்த்தமாடி பெருமாளைத் தொழுகின்றனர்.

மன்னார்குடியில் ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் திருப்பணிக்காக இவ்வூர் வழியாக கற்களை ஏற்றிக் கொண்டு பல நூறு வண்டிகள் சென்றன. 

அவற்றின் தலைவனாக இருந்தவன் வண்டிக்கு ஒரு கல் வீதம் சாரநாதப் பெருமாள் கோயிலுக்குக் காணிக்கை அளித்தான்.  

இதை அறிந்த மன்னன் - பிழை செய்தான் என்று வண்டிக்காரனைத் தண்டிக்க முற்பட்டபோது - சாரநாதப்பெருமாள் - ராஜகோபால ஸ்வாமியாக திருக்காட்சி அளித்ததாக ஒரு வரலாறு உண்டு!..


கிழக்கு நோக்கிய பிரம்மாண்டமான ராஜகோபுரம். சாரபுஷ்கரணியின் கரையில் பிரம்மன், அகத்தியர், காவிரி - அருள்பாலிக்கின்றனர்.

திருக்கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள், ராஜகோபாலன், நரசிம்மர், ஆண்டாள் - சந்நிதிகள் விசேஷமானவை.

குடந்தையிலிருந்து திருச்சேறைக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

திருச்சேறையில் திகழும் இன்னொரு திருக்கோயில் ஸ்ரீ ஞானவல்லி சமேத ஸ்ரீசாரபரமேஸ்வரர் திருக்கோயில்.

நெடுஞ்சாலையின் அந்தப்பக்கமாக சற்று உள்ளே இருக்கின்றது சிவாலயம்.

திருச்சேறையை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும் வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை எம்பெருமான் டிருவடியைச் சிந்தித்தேற்கு என
ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்புதானே!..(1584)
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி (ஏழாம் பத்து நான்காம் திருமொழி)

* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 13


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும்போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
திருச்சேறை


ஸ்ரீ சாரபரமேஸ்வர ஸ்வாமி
இறைவன் - செந்நெறிச் செல்வன், சாரபரமேஸ்வரர் 
அம்பிகை - ஞானவல்லி, ஞானாம்பிகை.
தீர்த்தம் - மார்க்கண்டேய தீர்த்தம்
தலவிருட்சம் - மாவிலங்கை

தலப்பெருமை

தானே தலைவன் எனத் தருக்கித் திரிந்த தட்சன் தன் பிழைதனை உனர்ந்து மனம் வருந்தி சிவபூஜை செய்த திருத்தலங்களுள் திருச்சேறையும் ஒன்று. 

மாசி மாதத்தில் சூர்யன் சிவபூஜை செய்யும் திருத்தலம்.

மாசி மாதத்தின் 13,14,15 - ஆகிய மூன்று நாட்களிலும் காலையில் சூரியன் தன் இளங்கதிர்களால் அம்மையப்பனின் திருப்பாதங்களைப் பூஜிக்கின்றான். 

இந்த மூன்று நாட்களிலும் மாலை நேரத்தில் - தஞ்சையை அடுத்துள்ள கண்டியூர் திருக்கோயிலில் சூரிய பூஜை நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலின் எதிரே தீர்த்தக் குளம். 

அம்பிகை ஞானவல்லி!.. ஞானாம்பிகை என்பதும் அவளுக்குரியதே!..
இறைவனுக்கு இடப்புற்த்தில் - கிழக்கு முகமாக நின்ற திருக்கோலம்.

இத்திருக்கோயிலில் ஸ்ரீதுர்க்கை மூன்று திருவடிவங்களில் அருள்கின்றாள்.

திருத்தலத்தின் தலவிருட்சம் மாவிலங்கை. 

மூன்று மாதங்களுக்கு இலையாகவும், மூன்று மாதங்களுக்கு பூக்களாகவும் மூன்று மாதங்களுக்கு இலை பூ எதுவுமின்றியும் விளங்கக் கூடிய அற்புத மரம்.

ஸ்ரீ ருண விமோசன லிங்கம்
மேலைத்திருச்சுற்றில் மார்க்கண்டேய மகரிஷி பிரதிஷ்டை செய்த ருண விமோசன லிங்கம்!..

விதிவலியால் வறுமையுற்ற மக்களுக்கு வரப்பிரசாதமான சந்நிதி!..

இதனால் - ருண விமோசன தலம் என சிறப்பிக்கப்படுகின்றது!..

ருணம் எனில் கடன் என்பது பொருள்.. நம்முடைய கடன்கள் தீரும் தலம் என்கின்றனர்.

நம்முடைய கடன்களில் எந்தக் கடன் தீரவேண்டும்!..

நாம் இந்தப் பூமியில் பிறந்து பட்ட கடன்கள் எத்தனை எத்தனையோ!?..

சிந்திப்பதற்கு அருமையான விஷயம்!..

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்!.. -  என்பார்கள்.

அதைப் போலத்தான் - வந்த கடனும் வருகின்ற கடனும்!..

நம்முடைய கடன்கள் எவற்றையும் நம்மால் தீர்க்க முடியாது!..
அவற்றைத் தீர்த்துக் கொள்ளவும் முடியாது!..

ஆனால் - வழக்கம் போல - பரிகாரம் பிராயச்சித்தம் என்ற பேரில் மக்களின் மனம் திசை திருப்பப் பட்டுவிட்டது.

அதனால் - வட்டிக்கு வாங்கிய கடன் தீர வேண்டும் என்று மக்கள் விருப்பம் கொண்டு அலைகின்றனர்.

ஆகாயத்தில் அழகிய கோட்டை கட்டுவதற்காகக் கடன் வாங்கி அல்லல்பட்டு அவதியுற்றால் - ஐயனின் சந்நிதியில் வந்து நிற்கவும் கூடுமோ!?..

நியாயமான வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சிகளை எதிர்கொள்ள நமக்கு ஒரு துணை வேண்டும்!.. 

துயரும் துன்பமும் சூழ்கின்ற வேளைகளில் சாய்ந்து கொள்ள நமக்கு ஒரு தோள் வேண்டும்!.. 

அப்படி ஒரு துணையும் தோளும் கிடைப்பது - இங்கே!.. இதுவே நிதர்சனம்!..


மேலும் ஒரு சிறப்பாக ஸ்ரீ பைரவரின் சந்நிதி!..

தேவார திருமுறைகளில் ஒரேஒருமுறை மட்டும் இடம் பெற்றுள்ள சொல் -

கால பைரவன்!..

அப்பர் சுவாமிகள் தமது திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால வயிரவனாகி வேழம்
உரித்துஉமை அஞ்சக்கண்டு ஒண்திருமணி வாய்விள்ள
சிரித்துஅருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!..

தாருகாவனத்து ரிஷிகள் ஏவிய யானையை - 
ஈசன் வயிரவக் கோலங்கொண்டு உரித்துக் கிழித்தபோது - 
உமையாம்பிகை அஞ்சினாளாம்!..

அதைக் கண்ணுற்ற செந்நெறிச் செல்வனாகிய சிவபெருமான் -
இதற்குப் போய் அஞ்சலாமா!?.. - எனக் கேட்டு புன்னகைத்தானாம்!..

அப்பர் ஸ்வாமிகள் காட்டும் கலைநயம் இது!..

இதே நயத்தினை ஞானசம்பந்தப்பெருமானும் சுட்டிக் காட்டுகின்றார்.

இது மிகப்பெரிய விஷயம். 

ஐயன் செந்நெறிச் செல்வன் என்றும் அம்பிகை ஞானவல்லி என்றும் திருப்பெயர்கள் கொண்டு விளங்குவது மிகப் பெரிய அற்புதம்!..

வயிரவரைக் குறித்த அந்த ஒரு பாடலே போதும்!..
மிகப் பெரிய பிரசனைகளையும் எளிதாக வெல்லலாம்!..

இது எனது அனுபவம். 
துக்கமும் துயரமும் முந்தைய வினைகளால் என்னைச் சூழ்ந்தபோது என்னை மீட்டெடுத்தது - அந்த திருப்பாடலே!..

நாற்பது ஆண்டுகளாகக் கனவிலும் நான் மறவாத திருப்பாடல் அது!..

திருச்சேறை!.. 

சைவமும் வைணவமும் தழைத்திருக்கும் திருத்தலங்களுள் ஒன்று.

இவ்வூரிலேயே விளங்குவது ஸ்ரீசாரநாதப்பெருமாள் திருக்கோயில்.

குடந்தையில் இருந்து சிறப்பான பேருந்து வசதிகள் திருச்சேறைக்கு உள்ளன.

அப்பரும் ஞான சம்பந்தப்பெருமானும் பாடிப் பரவிய திருத்தலம்.

முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி அதள்பட உரி செய்த விறலினர் 
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை 
செறியுறு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே!..(3/86)
திருஞானசம்பந்தர்.

அப்பர் தமது திருப்பதிகத்தில் புராண நிகழ்வுகள் பலவற்றை விவரிக்கின்றார்.
சண்டீசர் வரலாற்றினைக் கூறும் திருப்பாடல் பதிவில் இடம் பெற்றுள்ளது.

நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோடாவின் பாலைக்
கறந்து கொண்டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்கப்போதே எழில்கொள் சண்டீசன் என்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச்செந்நெறிச் செல்வனாரே!..(4/73)
அப்பர் ஸ்வாமிகள்.

திருச்சிற்றம்பலம்
* * *